தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிங்கப்பூருக்கு சிறப்பு சேர்க்கும் அதிசய பூங்கா!

சிங்கப்பூருக்கு சிறப்பு சேர்க்கும் அதிசய பூங்கா!

சிங்கப்பூருக்கு சிறப்பு சேர்க்கும் அதிசய பூங்கா!


PUBLISHED ON : ஜூன் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேரம், காலம் பார்க்காமல் உழைப்பதில், ஜப்பானியர்களுக்கு சற்றும் சளைக்காதவர்கள், சிங்கப்பூர் மக்கள். வானுயர்ந்த கண்கவர் கட்டடங்கள், அதிசயிக்கத் தக்க, அழகு மிளிரும் பாலங்கள் என, சிங்கப்பூர், உலகின் நவீன கட்டடக் கலையின் அடையாளமாக விளங்குகிறது.

சிங்கப்பூரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், தற்போது ஒரு பிரமாண்டமான பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள கடற்கரை அருகே, 101 ஹெக்டர் பரப்பளவில், இந்த அதிசய பூங்கா தயாராகி வருகிறது. இதில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட செடிகள், வளர்க்கப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்த செடிகள் கொண்டு வரப்பட்டு, இங்கு பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் பூத்துக் கு<<லுங்கும், ஆயிரக்கணக்கான மலர்களை பார்த்து ரசிப்பதற்கே, கோடிக் கண்கள் வேண்டும்.

இந்த பூங்காவின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? சிங்கப்பூரின் அழகை, பார்த்து ரசிப்பதற்காக, தரையிலிருந்து, 22 மீட்டர் உயரத்தில், பிரமாண்டமான தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை மயங்கும் வேளையில், மின் விளக்குகளின் ஒளியில் மிளிரும் சிங்கப்பூர் நகரின் அழகை, இந்த பாலத்தின் மேலிருந்து பார்த்து ரசிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்த பிரமாண்ட பாலம், செயற்கையாக வடிவமைக்கப்பட்டு, கான்கிரீட் மரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் குறிப்பிட்ட இடைவெளிகளில், பிரமாண்டமான அளவில், செயற்கையாக, 18 மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையான மரம் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த செயற்கை மரத்தின் உச்சியில், இரும்பு கம்பியாலான கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கிளைகளில் லேசர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில், இந்த மரங்களை பார்த்தால், சொர்க்கலோகத்தை, பெயர்த்து வந்து, சிங்கப்பூரில் வைத்து விட்டது போல் தோன்றுகிறது. முழுக்க, முழுக்க, பசுமை பாதுகாப்புத்திட்டம், இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பிரமாண்டமான பாலத்தில் நடந்து சென்றால், அதன் கீழே, சிங்கப்பூர் நகரத்தை மட்டுமல்லாது, ஆயிரக்கணக்கான மலர்கள், கண்கவர் கட்டடங்கள், பரந்து விரிந்த கடல், செயற்கை நீர் வீழ்ச்சி என, இதுவரை கண்டிராத ஒரு சுகமான சுற்றுலா அனுபவம் கிடைக்கும். சிங்கப்பூரின் புதிய அடையாளமாக மாறியுள்ள இந்த பிரமாண்ட அதிசய பூங்கா, விரைவில் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

***

எஸ். ரேவதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us