sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அதுக்கும் மேல....

/

அதுக்கும் மேல....

அதுக்கும் மேல....

அதுக்கும் மேல....


PUBLISHED ON : நவ 22, 2015

Google News

PUBLISHED ON : நவ 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாரும் அமைதியாயிருக்க, பேச்சை ஆரம்பித்தார் குணசேகரன்...

''எங்கள பத்தி தரகர் சொல்லியிருந்தாலும், நாங்களும் சொல்றது தான் முறை. இவ என் மனைவி; இவன் என்னோட ரெண்டாவது பையன் திலக். மூத்தவன் ராம், வீட்ல இருக்கான். உடம்பு சரியில்லாததுனால கூட்டிக்கிட்டு வரல. அப்பறம் உங்க குடும்பத்த பத்தி தெரிஞ்சுக்கலாமா...'' என்றார்.

''உங்கள மாதிரி தான் நாங்களும், நாலு பேரே கொண்ட சிறு குடும்பம். உங்களுக்கு ரெண்டும் பசங்கன்னா, எனக்கு ரெண்டும் பொண்ணுங்க. இவ என் மனைவி; மூத்தவ, உங்களுக்கே தெரியும் கண்மணி; சின்னவ காலேஜ்க்கு போய்ருக்கா. அப்பறம் ஜாதகப் பொருத்தம் பாத்தீங்களா, எல்லாம் திருப்தியா...'' என்று கேட்டார் சுந்தரம்.

''ரொம்ப திருப்தி...''

''சரி... நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண பாத்துரலாமா?'' என்று குணசேகரனின் மனைவி கேட்க, மகளை அழைத்து வர உள்ளே சென்றாள் சுந்தரத்தின் மனைவி.

பட்டுப் புடவையில் லட்சுமிகரமாய் அறையினுள் பிரவேசித்தாள் கண்மணி. கையில் காபி கப்புகளுடன் கூடிய தட்டு இருந்தது. வந்திருந்தவர் களுக்கு அதை கொடுத்தவள், சோபாவில் அமர்ந்தாள்.

புகைப்படத்தில் பார்த்ததை விட, நேரில் இன்னும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்தவுடன் திலக்கிற்கு பிடித்து விட்டது. அதை ஜாடையாக தன் அப்பாவிடம் தெரிவித்தான்.

''அப்புறம்... நீ என்னம்மா சொல்றே...'' என்று கேட்டார் குணசேகரன்.

பதில் கூறாமல் மவுனமாக சிரித்தாள் கண்மணி.

''இப்படி எல்லாருக்கும் மத்தியில கேட்டா எப்படி சொல்வா... கூச்சம் இருக்கத்தானே செய்யும்,'' என்று மகளுக்காக பரிந்து பேசினாள் கண்மணியின் அம்மா.

மேற்கொண்டு பேச குணசேகரன் வாயை திறக்கு முன், ''சார்... நான், உங்க வீட்டுக்கு மருமகளா வரும் பட்சத்தில், என் சந்தேகத்த கேக்கலாமா?'' என்றாள் கண்மணி.

''தாராளமா கேளும்மா...'' என்றார் குணசேகரன். உடனே, தயக்கத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள்; அவர் ஒப்புதலாக தலையாட்டவும், ''தரகர் ஓரளவு தான் சொன்னார்; உங்க மூத்த பிள்ளைக்கு என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்கலாமா...'' என்று கேட்டாள்.

சில நொடிகள் யோசித்தவர், ''அவன் கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதவன். சராசரி மனுஷங்கள விட, 40 சதவீதத்துக்கும் குறைவா அவனோட மூளை வேலை செய்கிறதாம். முன்ன விட இப்ப பரவாயில்ல. அடிப்படை தேவைகள அவனே பாத்துக்கிறான். என்ன... கூடவே ஒருத்தர் இருக்கணும். இப்ப கூட ஒருத்தர ஏற்பாடு செய்துட்டு தான் வந்திருக்கோம்; மாத்திரைன்னு எதுவும் இல்ல; எந்த தொந்தரவும் தர மாட்டான். அவனுக்குன்னு தனி ரூம் இருக்கு. வேற எதுவும் தெரிஞ்சுக்கணுமா?'' என்றார்.

உடனே அவசரமாக குறுக்கிட்ட சுந்தரம்,

''அவ கேட்டது பத்தி, நீங்க தப்பா நினைக்கக் கூடாது,'' என்றார்.

''இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு... எங்க கூட இருக்கப் போற பொண்ணு, என் மகனைப் பத்தி தெரிஞ்சுக்கிறது நல்லது தானே... இதனாலயே, சில வரன்கள் தட்டிப் போயிருக்கு. அதான், உண்மை நிலவரத்த சொன்னேன். அதேநேரம் ஒரு விஷயத்த நீங்க தெரிஞ்சுக்கணும். பின்னாடி அந்த பையனால, திலக் குடும்பத்த பாதிக்க விடமாட்டோம்ன்னு இப்பவே உங்களுக்கு உத்தரவாதம் தர்றோம்,'' என்றார் குணசேகரன்.

''நானும் ஓரளவு ஆட்டிசம் பத்தி படிச்சுருக்கேன்; எனக்கு அவர பாக்கணும்; அவர் இப்ப எப்படி இருக்கார்ன்னு தெரிஞ்சுக்கணும், முடியுமா?'' என்றாள் கண்மணி.

அனைவரும் விழித்தனர்.

''மிஸ் கண்மணி... எங்க அண்ணன நீங்க, 'டெஸ்ட்' செய்து பாத்துட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பீங்களா?'' என்றான் பட்டென்று திலக்!

''நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... நான் அவர சோதிக்க விரும்பல. இந்த கல்யாணத்துக்கும், நான் அவர பாக்க விரும்புறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எனக்கு உங்க குடும்பத்த பிடிச்சிருக்கு; நான் ஒரு தோழியா வரணும்ன்னு ஆசைப்படுறேன்,'' என்றாள்.

''அப்ப பாக்கு, வெத்தல மாத்திக்கலாமா?'' என்று கேட்டார் குணசேகரன்.

''ப்ளீஸ்... இப்ப வேணாமே...'' என்று கண்மணி சொன்னதும், குணசேகரனும், அவரது மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 'இது சரி வராது...' என முகத்திலேயே காட்டினான் திலக்.

''நல்லதுங்க... நாம நண்பர்களாகவே பிரிவோம்... வர்றேங்க,'' என்று கூறி எழுந்தார் குணசேகரன்.

மூவரும் விடை பெற்று சென்ற பின், கண்மணியின் அம்மா கோபத்துடன், ''என்னடி நீ... அவங்க தான் பிரச்னைன்னு வந்தா, நாங்க விலகிடுறோம்ன்னு சொல்றாங்களே... பின்ன என்ன... பையன் பாக்க நல்லாயிருக்கான்; கை நிறைய சம்பளம். ஏன்டி குறுக்க பூந்து கெடுக்கற,'' என்றாள்.

''அம்மா... உன்னோட கடமை முடியணும்ன்னு பேசாதே. என் மனசுல என்ன இருக்குன்னு உனக்கு புரியாது; வாழப் போறவ நான். நீ சொல்வியே... பிராப்தம் வரணும்ன்னு! அது வரலேன்னு நெனைச்சுக்க,'' என்று கூறி, தன் அறைக்குள் சென்று விட்டாள் கண்மணி.

சில நாட்களுக்கு பின், ஒரு மதிய வேளை—

அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்தார் குணசேகரன். வாசலில் கண்மணி நின்றிருந்தாள். அவளை ஆச்சரியமாக பார்க்க, ''என்னை மன்னிச்சுடுங்க... சொல்லாம வந்தது தப்பு தான்,'' என்று கூறியபடியே, உரிமையோடு வீட்டிற்குள் வந்து சோபாவில் அமர்ந்தாள் கண்மணி.

சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட குணசேகரனின் மனைவியும் ஆச்சரியமானாள். எதிரே இருந்த அறையின், சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரையே பார்த்துக் கொண்டிருந்தான் ராம். சட்டென்று எழுந்து அவனிடம் சென்ற கண்மணி, ''ஹலோ,'' என்றாள்.

திரும்பியவனின் பார்வை, சில விநாடிகள் கண்மணி மேல் நிலைத்து, பின், ''ஹலோ,'' என்றான்.

''அட... இங்க வந்து உட்காருங்க,'' என்றாள் புன்னகையுடன்!

தன் மகனிடம், அவள் சகஜமாக பேசுவதை கண்ட குணசேகரன் தம்பதி அமைதியாக நின்றனர்.

தலையை கையால் சரி செய்தபடி, கண்மணி எதிரில் வந்து அமர்ந்தான் ராம்.

''என் பேரு கண்மணி,'' என்றாள்.

அமைதியாக அவளையே பார்த்த ராம், சில நொடிகள் கழித்து, ''அப்பா... யாரு இவங்க,'' என்றான்.

''தெரிஞ்சவங்க... பேசு,'' என்றார்.

கேட்ட கேள்விகளுக்கு சற்று தாமதமாகவே பதில் சொன்னான் ராம். அவ்வப்போது மகனின் வாய் ஓரத்தை, கர்சிப்பால் ஒற்றி எடுத்தார் குணசேகரன்.

திடீரென்று எழுந்து உள்ளே செல்வதும், பின், வந்து அமர்வதும், அவனின் இயல்புகள் என, புரிந்து கொண்டாள் கண்மணி.

''ஸ்கூல்ல சேத்தீங்களா?''

''ஆமாம்... ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்தோம்; ஓரளவு பழக்க வழக்கம் தெரிஞ்சுக்கிட்டான். அப்புறம், மத்த பசங்களுக்கு, இவன், 'டிஸ்டர்ப்' செய்றது புரிஞ்சுது; நிறுத்திட்டோம்,'' என்றாள் குணசேகரனின் மனைவி.

''தனியா விட்டு பாத்திருக்கிறீங்களா?''

''அந்த விஷப் பரீட்சைய செய்யல.''

''தப்பா நினைக்காதீங்க... உங்களுக்கு பின், இவரப் பத்தி நினைச்சு பாத்தீங்களா...'' என்றாள் கண்மணி.

இதைக் கேட்டதும், குணசேகரன் தம்பதிக்கு கண்கள் கலங்கியது.

''எப்பவாவது யோசிப்போம்... வேற வழி... ஏதாவது, ஒரு இல்லத்துல தான் விடணும். ஆனா, திலக் குடும்பத்து மேல இவனோட பாரத்தை இறக்கி வைக்க மாட்டோம்,'' என்ற குணசேரகனின் குரல் தழுதழுத்தது.

''புரியுதுங்க... உங்கள மாதிரி யாராலயும் இவர பாத்துக்க முடியாது. இவரோட பெரிய குறைன்னா எது?''

''தனியா விட்டா கொஞ்சம் மூர்க்கமா மாறிடுவான். அவன் போக்குலேயே போய், பேசிப் பேசி, அவனை இயல்பா வச்சுப்போம்,'' என்ற குணசேகரனின் மனைவியின் வார்த்தையில் சோகம் படர்ந்திருந்தது.

''சரி... நான் கிளம்பறேன்; வர்றேன் ராம் சார்,'' என்று கூறி, ராமின் கை பிடித்து, குலுக்கினாள்.

''இரும்மா... குங்குமம் எடுத்துக்க,'' குணசேகரின் மனைவி தந்த குங்குமத்தை எடுத்து, நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

''அப்ப உன் முடிவு என்னம்மா...''

''எனக்கு முழு சம்மதம்; நாளைக்கு வீட்டுக்கு வாங்க. நான் இங்க வந்தது எங்க வீட்டுக்கு தெரியாது; எங்கப்பா, அம்மாவுக்கு சஸ்பென்சா இருக்கட்டும்,'' என்று கூறி, விடை பெற்றாள் கண்மணி.

அவள் சென்ற பின், ''ஒரு விதத்துல இந்த பொண்ணு நியாயமாத்தாங்க நடந்துக்கறா... தான் வாழப் போற வீட்ல, தன் கூடவே இருக்கப் போற கொழுந்தனுக்கு என்ன பிரச்னை, அது எவ்வளவு தூரம் தன்னை பாதிக்கும்ன்னு நேரா வந்து தெரிஞ்சுக்க நினைச்சுருக்கா,'' என்றாள் குணசேகரனின் மனைவி.

''அன்னிக்கு நாம கொஞ்சம் கோபப்பட்டோம்; அது தப்பு தான். இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கு. எல்லாம் கடவுள் செயல். மொதல்ல திலக் கிட்ட பேசணும்... மொபைல எடு,'' உற்சாகமானார் குணசேகரன்.

கண்மணியின் வீடு -

குணசேகரன் குடும்பத்தார் அமர்ந்திருக்க, ''அப்ப மத்தத பேசலாமா...'' என்றார் சுந்தரம்.

உடனே அறைக்குள் இருந்து வெளியே வந்த கண்மணி, ''அப்பா... உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்... நேத்து இவங்க வீட்டுக்குப் போனேன்...'' என்று கூறி நிறுத்தினாள்.

அவளை வியப்புடன் பார்த்தார் சுந்தரம்.

''அப்பா... இவரோட மூத்த மகனோட உடல் நிலை எப்படி இருக்குன்னு பாக்கத் தான் போனேன். ஹார்ம்லெஸ் பர்சன். அவரப் பார்த்ததும், நாம வாழ்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணும்ன்னு எனக்கு தோணுதுப்பா. பிறந்தோம், கல்யாணம் செய்தோம்... பின் குழந்தை குட்டிங்க, அப்பறம் அவங்களுக்கான ஓட்டம்ன்னு வாழ்ற சக்கர வாழ்க்கை எனக்கு பிடிக்கல.

''என்னால இந்த ஜென்மத்துல, அன்னை தெரசா மாதிரி பெரிய சேவை எல்லாம் செய்ய முடியாது. ஆனா, என் பிறப்புக்கு, ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கைய வாழணும்ன்னு நினைக்கிறேன். ஆமாம்ப்பா... நான் இவங்க வீட்டிற்கு மருமகளா போக ஆசைப்படறேன்; மாப்பிள்ளை திலக் இல்ல; ராம். பேராசை, பொறாமை போன்ற எந்த கெட்ட குணங்களும் இல்லாத ராம் மாதிரியானவங்க கூட வாழறது, அர்த்தமான வாழ்க்கையா இருக்கும்ன்னு நினைக்கிறேன்ப்பா...'' என்று அவள் கூறியதும், அனைவரும் அதிர்ந்தனர்.

கண்மணியின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். அதையெல்லாம் பொறுமையாக சமாளித்தவள், ''அப்பா... ராம் வாழ தகுதியில்லாத மனிதர் இல்ல; அவருக்கு துணையா இருக்க ஆசைப்படறேன். நம்ப வீட்ல அது மாதிரி ஒருத்தர் இருந்தா, யோசிச்சு பாருங்கப்பா...'' என்றாள்.

''அப்போ திலக்...'' என்று கேள்வி எழ, ''அவரு என்னை புரிஞ்சுப்பாரு,'' என்றாள்.

கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய, மனைவியை நோக்கி, ''இவ ஒரு பெண் தெய்வம்; வேறு என்ன சொல்ல...'' என்று குணசேகரன் சொல்ல, ''இல்லிங்க... இவ அதுக்கும் மேல,'' என்றாள் அவர் மனைவி.

கீதா சீனிவாசன்

இயற்பெயர்: டி.சீனிவாசன், வயது: 50; அரசு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெறுவது, இது இரண்டாவது முறை. இதுவரை, இவர் எழுதிய 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தன் படைப்புகளில், ஏதாவது ஒரு கருத்து இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும், இப்போட்டியில் முதல் பரிசு பெறுவதே தன் லட்சியம் என்றும் குறிப்பிடுகிறார்.






      Dinamalar
      Follow us