
ப.விஜயராகவன், விழுப்புரம்: நான், பி.எஸ்சி., பட்டதாரி; வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிந்துள்ளேன். டிகிரி முடித்து மூன்றாண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை. வாழ்வில் முன்னேற துடிக்கிறேன்...
உங்களை, நீங்களே நம்பத் துவங்குங்கள்... வேலை வாய்ப்பு அலுவலகத்தையும், வேலைக்காக மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வாருங்கள், தானாகவே முன்னேற்ற பாதை உங்கள் கண்களுக்குத் தெரியும்!
கே.கும்பலிங்கம், சிதம்பரம்: எதைச் செய்ய துவங்கினாலும், பிறர் என்ன சொல்வார்களோ என்ற பயம், என்னுள் எழுகிறதே...
முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்பட்டால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்! இந்த எண்ணம் கொண்டவர்கள், பிறர் பயத்திலேயே எல்லாவற்றையும் இழந்து, 'அம்மா... தாயே...' என, பிற்காலத்தில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவர் அல்லது தற்கொலை செய்து கொள்வர்!
டி.முகைதீன், பொள்ளாச்சி: எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுவது சிறந்தது?
கொடுக்கல் - வாங்கல் விவகாரம் இல்லாதவர்களுடன் நட்பு பாராட்டுவது சிறந்தது. கொடுக்கல் - வாங்கல் இருந்தால், நட்பும் போகும், பணமும் போகும்!
என்.மணியன்பாலன், மதுரை: பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்த பின், பெண் பார்க்க செல்வதா அல்லது முதலில் பெண்ணைப் பார்த்துவிட்டு, ஜாதகம் பார்ப்பது நல்லதா?
தயவு செய்து ஜாதகப் பேச்சை எடுக்காதீர்கள்! இந்த ஜாதகம் என்ற காகிதம், எத்தனை பெண்களை இன்னும் கன்னியாகவே வைத்திருக்கிறது என்பதை அறிவீர்களா? ஓரம் கட்டுங்கள் ஜாதகத்தை! பொருத்தம், மனதில் இருக்கிறதா பாருங்கள்... ஜாம் ஜாமென மேளம் கொட்ட ஏற்பாடு செய்யுங்கள்!
ம.பர்வதம்கோபாலன், விருத்தாசலம்: இறந்தவர்களின் சிலை, புகைப்படம் மற்றும் சமாதி முன் விழுந்து நமஸ்கரிப்பதால் பலன் அதிகமா அல்லது உயிருடன் இருப்பவர்கள் முன் விழுந்து நமஸ்கரிப்பதில் பலன் அதிகமா?
இரண்டாவதில் தான் பலன் அதிகம்; எப்பவும் இல்லை என்றாலும், ஏதோ அவ்வப்போதாவது நிச்சயம் பலன் கிடைக்கிறது என்பதை, கண்ணெதிரே கண்டு கொண்டு தானே இருக்கிறோம்!
சிவ.எழிலன், திண்டிவனம்: எப்போதும் சிரித்த முகத்துடனே, சிரித்துக் கொண்டே இருக்க விரும்புகிறேன்...
வேண்டாம்; உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சிரிக்க வேண்டிய இடங்களில் சிரியுங்கள்; மகிழ்ச்சியான நேரங்களில் சிரித்த முகத்துடன் இருங்கள்!
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை, 'யாரிடமோ ஏமாந்து கொண்டிருக்கிறான்' என்றோ, எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவனை, 'யாரையோ ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்' என்றோ இப்போதெல்லாம் எண்ணுகின்றனர்!
எஸ்.ஜெகதீசன், சென்னை: உண்மையே பேசி கஷ்டப்படுவதை விட, சமயத்திற்கு தகுந்தாற் போல் பொய் பேசி, வசதியாக வாழலாமே...
வசதியாக வேண்டுமானால் வாழலாம்; ஆனால், மன நிம்மதியோடு வாழவே முடியாது. மனநிம்மதி இல்லாமல் பொருள் இருந்து என்ன பயன்... இரவில் உறக்கம் கூட வராதே! நிம்மதியான தூக்கம் இல்லாத வாழ்வு, ஒருவனுக்கு தேவையா?