PUBLISHED ON : மே 27, 2018

விமானம், மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு, இரவு ஏழரை மணிக்கு மும்பை போய் சேர்ந்தது. நாடக குழுவினரின் யோசனைப்படி, மேக்கப் பொருட்கள் அடங்கிய பையை எடுத்து, விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக மேக்கப் போட்டுக் கொண்டார், மனோரமா. பின், தயாராக இருந்த காரில் அங்கிருந்து கிளம்பி, இரவு, எட்டரை மணிக்கு நாடக அரங்கிற்கு சென்றார். அடுத்த சில நிமிடங்களில் நாடகம் துவங்கி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது.
அந்த இரண்டரை மணி நேரமும் ரசிகர்கள் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் ரொம்பவே அமைதி காத்திருந்தது அதிசயம்.
இரண்டரை மணி நேர தாமதம் பெரிதாக யாராலும் பொருட்படுத்தாமல் போயிற்று என்றாலும், மனோரமாவிற்கு ஏற்பட்ட அவதிகளும், நெருக்கடிகளும், டென்ஷன்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
அவரது வாழ்வில் இந்த நாடக நிகழ்வு, மறக்கவே முடியாது.
அதே போன்று, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியும், அவரால், மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி வளர்ச்சி நிதிக்காக, நாடகம் ஒன்று நடத்த ஏற்பாடாகி இருந்தது. அதற்காக, மனோரமா உள்ளடங்கிய நாடக குழுவினர் மதுரையில் தங்கி இருந்தனர். அன்று இரவு நாடகம் அரங்கேற வேண்டும்.
மாலை, 4:30 மணிக்கு மதுரையிலிருந்து அனைவரும் காரில் புறப்பட்ட போது, மழை பெய்யத் துவங்கியது. சற்று நேரத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை... மரங்கள் பேயாட்டம் ஆடுகிறது. கரு மேகங்கள் வானை மூடிக்கொண்டதால், எங்கும் ஒரே இருள்... சாலையில், எதிரே வருபவர் கண்ணுக்கு தெரியவில்லை.
திறந்தவெளி அரங்கில் நாடகம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
செல்லும் வழியெல்லாம் கனமழை பெய்து கொண்டேதான் இருந்தது. காற்றின் வேகமும் குறைந்தபாடில்லை. ஒருவழியாக, கார் உசிலம்பட்டியை அடைந்த போது, ஆச்சரியப்படும் விதமாக, அங்கே ஒரு துளி மழை கூட இல்லை. மழைக்கான அறிகுறி கிஞ்சித்தும் இல்லை. தங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் செவிசாய்த்து விட்டதாக நினைத்து, கடவுளுக்கு நன்றி கூறினர்.
கல்லுாரி மைதானத்தில் மேடை போடப்பட்டிருந்தது. மேடையை சுற்றிலும் ஊரே திரண்டு வந்தது போல், அங்கே குழுமியிருந்தனர். உற்சாகமாக, நாடகத்தை ஆரம்பித்தனர்.
கடைசி வரை, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் செய்யாமல் அமைதியாக நாடகம் முழுவதும் அவர்கள் ரசித்துப் பார்த்தது சந்தோஷத்தை தந்தது.
நாடகம் வெற்றிகரமாக முடிவடைந்தது; பின், தலைமை வகித்த சட்டமன்ற உறுப்பினர் மூக்கையா தேவர், நாடகத்தை பாராட்டி பேசினார். பின், மனோரமாவை மக்களிடையே பேசும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு இணங்க பேசத் துவங்கினார், மனோரமா...
வானில் சுடர்விட்டு கொண்டிருக்கும் நிலவை சுட்டிக் காட்டி, 'தேவர் நம்மையெல்லாம் அந்த முழு நிலவு வடிவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் எவ்விதமான இடையூறும் இல்லாமல் இந்நாடகம் நன்றாக நடந்து முடிந்திருக்கிறது...' என்று இருபொருள்பட பேசி அமர்ந்தார்.
இந்த பேச்சை கேட்டு, அங்கு அமர்ந்திருந்த நுாற்றுக்கணக்கான தாய்மார்களும், ஒரே நேரத்தில் குலவையிட துவங்கினர். திடீரென வெளிப்பட்ட வித்தியாசமான அந்த ஓசையை கேட்டு, பயந்து போனார், மனோரமா.
உடனே அருகிலிருந்த மூக்கையா தேவர், 'பயப்படாதீங்க... தேவர் என்று நீங்க பேசியதை கேட்டு அவங்க உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாங்க; அதனால் தான் குலவையிடறாங்க...' என்று சமாதானப்படுத்தினார்.
அப்புறம்தான், சமாதானமடைந்தார், மனோரமா.
அபலை அஞ்சுகம் என்னும் திரைப்படம், மனோரமாவுக்கு முக்கிய திருப்பத்தை தந்தது என்று கூறலாம். இப்படத்தில், சென்னை தமிழ் பேசி நடித்தது, பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இதன்பின், அவருக்கு நிறைய தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.
தமிழகத்தில் குறிப்பாக அத்தனை நகைச்சுவை நடிகர்களோடும் மனோரமா சேர்ந்து நடித்து விட்டார் என்றே சொல்லலாம்.
மாடர்ன் தியேட்டர்சின், யாருக்கு சொந்தம் என்ற படத்தில், இவர் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது... மாடர்ன் தியேட்டர்ஸ், டி.ஆர்.சுந்தரத்தை நேரில் ஒருமுறை கூட மனோரமா பார்த்தது கிடையாது. அந்நிறுவனத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் தான் அடிக்கடி செட்டிற்கு வருவார். எனவே, அவரை தான் தெரியும்.
இதில் இன்னொரு ஆச்சரியமான சமாசாரம் என்னவென்றால், அதன் தயாரிப்பில் உருவாகும் படத்திற்கான நடிகர் - நடிகையரை தேர்வு செய்பவர், டி.ஆர்.சுந்தரம் தான்.
ஆனால், மனோரமாவை நேரில் பார்க்காமலேயே எப்படி கதாநாயகியாக தேர்வு செய்தார் என்பது குறித்து மனோரமாவிற்கு மிகுந்த சந்தோஷம் உண்டு. அதுபற்றி பலரிடமும் அவர் விசாரித்ததும் உண்டு. ஆனால், யாருக்குமே அதற்கு சரியான பதில் தெரியவில்லை.
அவர் நடித்த படங்களில் ஓரிரு குளோசப் காட்சிகளை மட்டும் பார்த்திருக்கிறார். அதை பார்த்து, 'மனோரமாவை இந்த படத்தில் கதாநாயகியாக போடலாம்...' என்று சொல்லி விட்டாராம்.
நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த மனோரமாவை திடீரென்று கதாநாயகியாக நடிக்க அழைத்தால் எப்படி இருக்கும்!
காற்றில் மிதக்கிற மாதிரியான சந்தோஷத்தை அடைந்தார். கற்பனை சிறகை வானில் விரித்து, ஆகாயத்தில் பறந்தார்.
கதாநாயகியாக நடித்த படம், திரையில் வெளியானால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டார்.
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம், சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
குன்றில் குமார்
