PUBLISHED ON : மே 27, 2018

முற்றத்தில், ஈஸி சேரில் சாய்ந்து, ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார், சங்கரய்யர். ''தாத்தா... எப்படியிருக்கேள்...'' என்றபடி உள்ளே வந்தான், பேரன் சீனிவாசன்.
நிமிர்ந்து பார்த்து, ''அடே... சீனிவாசா எப்படி இருக்கே... டிரெய்னிங் எல்லாம் முடிஞ்சுதோ...'' என்று பேரனை பார்த்து மலர்ந்தவர், ''அம்மா, அப்பா வரலயோ...'' என்றார்.
''அப்பாவுக்கு ஆபீசுல ஆடிட்டிங்; அம்மாவுக்கு லீவு கிடைக்கல,'' என்றவன், ''பாட்டி எங்க போயிட்டா... வீடு நிசப்தமா இருக்கே...'' என்றான்.
''இன்னைக்கு பிரதோஷம் இல்லியோ... சிவன் கோவிலுக்கு போயிருக்கா...'' என்றவரின் பார்வை, அவன் அருகில் நின்றிருந்தவளை அனிச்சையாக நோக்க, அடுத்த நொடி, நெருப்பு தீண்டியது போல், ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனார்.
'இது எப்படி சாத்தியம்...' என நினைத்து, அவளையே உற்றுப் பார்க்க, ''தாத்தா... இவ பேரு நிகாரிகா; கோல்கட்டாவுல பிரபல வயலின் வித்வான் சந்திரசேகர சட்டர்ஜி கேள்விப்பட்டிருக்கேள்லியோ... அவாளோட பேத்தி; என்னோட டில்லியில, ஐ.ஏ.எஸ்., டிரெய்னிங் எடுத்தவ; இவ, அம்மா சத்தீஸ்கர்ல கலெக்ட்ரா இருக்கா... இவளோட தோப்பனார், கோல்கட்டாவுல போலீஸ் அதிகாரி. நம்ம ஊர பாக்கணும்ன்னு ஆசைப்பட்டா... அதுதான், அழைச்சுண்டு வந்துட்டேன்...'' என்றான்.
''அப்படியா... பேஷா ஊரச் சுத்தி பாக்கட்டும்,'' என்றவரின் பார்வை, நிகாரிகாவின் மீதே நிலைத்து நிற்க, மூணாம் கொல்லையிலிருந்து, 'சாமி...' என்று ஒலிக்கும் அவள் குரலும், வீட்டிற்குள் இருந்தவாறே, 'அண்ணாமல... நாலு கோட்டை நெல்ல, அவா ஆத்துல கொண்டு போயி போட்டுட்டு வந்துடு...' எனும், தன் தோப்பனாரின் உத்தரவும், எத்தனையோ ஆண்டுகள் கழித்தும், இப்போதும் அவர் செவிகளில் எதிரொலித்தது.
அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. 'உலகத்தில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பர் என்று சொல்வது உண்மை தானோ... அப்படியென்றாலும், மூக்கு, கண்ணு, வாய், நெற்றின்னு அங்க அவயங்களும் எப்படி ஒரே மாதிரி இருக்கும்...' என்று நினைத்தவர், அனிச்சை செயலாய், தன் தாடையைத் தடவினார். காதோரம் இருந்த மரு, கையில் தட்டுப்பட, தன்னையறியாமல் அவர் பார்வை, அவள் கன்னங்களை நோக்கியது; அவள் காதோரம் அதே மரு! விக்கித்துப் போனார், சங்கரய்யர்.
அவர் நினைவுகள், தன் இளமைக் காலத்தை நோக்கி நகர்ந்தது...
அப்போது, சங்கரனுக்கு, 15 வயது இருக்கும். கோடை விடுமுறைக்கு, சங்கரனின் வீட்டுக்கு வந்திருந்தான், அவனோட அத்திம்பேர் மகன் சுப்பிரமணி. இருவரும் வீட்டிற்குள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். சுப்பிரமணி நாலாம் கொல்லைக்கு ஓட, அவனை துரத்தியபடி ஓடினான், சங்கரன். மூணாம் கொல்லையில், அவள் நின்றிருந்தாள்.
விளையாட்டை நிறுத்தி, அவளையே உற்றுப் பார்த்த சுப்பிரமணி, 'டேய் சங்கரா... இவா யாரு... உன் தோப்பனார் மாதிரியே இருக்கா...' என்று கேட்டான். இதுவரை, அவளைப் பற்றி பொருட்படுத்தாத சங்கரன், அப்போது தான் அவளை நன்றாகப் பார்த்தான்.
அதே கோதுமை நிறம், எடுப்பான நாசி, அகன்ற கண்கள், காதோரம், 'பளீச்'சென்று இருக்கும் மரு என, தன் தந்தையை போட்டோ காப்பி எடுத்தது போல் இருந்தாள்.
அம்மாவிடம் கேட்ட போது, 'இதெல்லாம் பெரியவா சமாசாரம்; நீ கேட்கப்படாது...' என்று அவனை விரட்டி விட்டாள். அவ்வப்போது அவள் வருவதும், மூணாம் கொல்லையில் நின்று, 'சாமி...' என்று குரல் கொடுப்பதும், சங்கரனின் அப்பா, வேலையாளை அழைத்து, அவள் வீட்டில் நாலு கோட்டை நெல்லை போட்டு வரச் சொல்வதும் வழக்கமாக நடந்தாலும், அவள் யார், எதற்காக தன் தோப்பனார், அவளுக்காக இத்தனை மெனக்கிடுகிறார் என்பது, சங்கரனுக்கு புரியாத புதிராக இருந்தது.
ஒரு கோட்டை என்பது, 21 மரக்கால் தானியம். 12 மரக்கால் என்பது ஒரு மூட்டை தானியம். சில சமயம் பணமும் பெற்றுச் செல்வாள்.
படிப்பு, கல்யாணம், குழந்தை என்ற சந்தோஷங்களையும், இழப்பு, இறப்பு என துக்கங்களையும் தாங்கி, காலம் அசுர வேகத்தில் ஓடி விட்டது.
சங்கரய்யரின் தந்தையின், 10 நாள் காரியம் முடிந்த மறுநாள், தன் தந்தையின் அறைக்கு சென்று, அவரது பீரோவை ஒழுங்கு படுத்தும் போது, மஞ்சள் நிறப் பையில், ஒரு டைரி இருந்தது. வேகமாக டைரியை புரட்டினார். அது, அவரது தந்தை எழுதியது தான்...
அப்போ, காலேஜ் படிப்பை முடிச்சுண்டு, ஊருக்கு வந்திருந்தேன். அது, ஒரு மழைக்காலம்... தாமிரபரணி ஆற்றில் ஸ்நானம் பண்ணிண்டு, வரப்பில் நடந்து வந்துண்டு இருந்த போது தான், அவளை முதன் முதலாக பார்த்தேன். மழைத் துாறலில் நனைஞ்சுண்டு, எதிர்தாப்புல வந்துண்டு இருந்தா. என்னைக் கண்டதும், பவ்யமாக ஒதுங்கி நின்னா. வயலில் களை எடுத்துண்டு இருந்த பொம்மனாட்டிக, 'ஆத்தாடி... நம்ம சாமியோட பிள்ளை, டவுன்ல இருந்து வந்துருக்காக போலிருக்கே... அப்படியே நம்ம சாமிய உரிச்சு வச்சது போல இருக்காக...' என்றனர். அதில் ஒருத்தி, 'நம்ம ருக்குமிணி மட்டும் என்ன... அப்படியே நம்ம ஐயர அச்சு எடுத்தது மாதிரி தானே இருக்கா... அங்க பாரு ருக்குமிணியே வர்றா...' என்றாள். 'படக்'கென்று, நிமிர்ந்து அவளைப் பார்த்தேன்.
ஆங்காங்கே ஒட்டுப் போட்ட பாவடை, தாவணி அணிந்திருந்தாள். எண்ணெய் இல்லாமல் வறண்டிருந்தாலும், இடுப்புக் கீழ் அடர்ந்து தொங்கிய கூந்தலை, தளர தளர பின்னியிருந்தாள். நிலவை மேகம் மறைப்பது போல, அவள் அழகு, ஏழ்மையில் மங்கியிருந்தாலும், அதையும் மீறி, அந்த கோதுமை நிறமும், எடுப்பான நாசியும், அகன்ற காந்தக் கண்களும், காதோரம், 'பளீச்'சென்று இருக்கும் மருவும் அவள், யார் என்பதை உலகுக்கு, பறைசாற்றியது.
ஏனோ, என் தோப்பனாருக்கு இல்லாத குற்ற உணர்ச்சி, நேக்கு ஏற்பட்டது. அங்கிருந்து வேகமாக நகர்ந்துட்டேன்.
என் மனதில் ஏதேதோ உணர்ச்சிகள்... ஆத்துக்குள் நுழைந்தால், ஊஞ்சலில், காலை ஆட்டிண்டு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தார், தோப்பனார்.
என்னை பார்த்ததும், 'அடி கங்கா... கொழந்த ஸ்நானம் பண்ணிண்டு வந்து, சொட்டச் சொட்ட நிற்கிறானில்லையோ... சீக்கிரம் டவல எடுத்துண்டு வா...' என்றார், உரக்க!
தோப்பனாருக்கு என் மீது ரொம்ப பாசம்; எறும்பு கடிச்சா கூட துடிச்சு போவார். அதை நினைச்சு, நேக்கு எப்போதும் கர்வம் உண்டு. ஆனால், இப்போது, ஏனோ, என்னால் சந்தோஷப்பட முடியவில்லை.
நான் உடைமாற்றி வந்து, மணையில் அமர்ந்ததும், என் தோப்பனாருக்கும், நேக்கும் பலகாரம் வைத்தாள், அம்மா. அவளையே உற்றுப் பார்த்தேன். களங்கமற்ற, அமைதியான முகம்; ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு; கிணற்றில் குதி என்றால், அடுத்த நொடி ஏன் என்று கேட்காமல் குதித்து விடும் அளவுக்கு தன் ஆம்படையான் மீது, அன்பு, காதல், பக்தி!
இருந்தும், ஒரு பாவக் காரியத்தை செய்து, அதைப் பற்றிய எந்த குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கிறார், என் தோப்பனார். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எவ்வளவு மனம் வருத்தம் அடைவாள்ன்னு நினைச்சேன்.
ஆனால், நான் நினைச்சுண்டது எத்தனை துாரம் தப்புன்னு ஒரு நாள் நேக்கு புரிஞ்சுடுத்து.
அன்று, மாடியில் ஜன்னலோரம் அமர்ந்து புத்தகம் படிச்சுண்டு இருந்தேன். அங்கிருந்து பார்த்தால், புழக்கடை நன்னா தெரியும். மூணாம் கொல்லையில் அவள் நின்னுண்டு இருந்தாள். வெங்கல துாக்கு வாளியில் பலகாரத்தை எடுத்து வந்த அம்மா, 'இந்தாடி ருக்கு... பாத்திரம் எடுத்துண்டு வந்தியா...' என்று கேட்டு, பலகாரத்தை அதில் போட்டுக் கொடுத்தாள். பின், அவளை நிற்க சொல்லி, வீட்டிற்குள் சென்றவள், பட்டுப்புடவையும், கொஞ்சம் பணமும் கொடுத்து, 'உன் கல்யாணத்துக்கு வர முடியாதுடி கொழந்தே... அக்ரஹாரத்துல ஒரு மாதிரி பேசுவா... உன் ஆம்படையான் மனசு நோகாம நடந்து, நல்லபடியா குடும்பம் நடத்து; பகவான் நோக்கு ஒரு குறையும் வைக்க மாட்டான்...' என்று ஆசிர்வதித்து அனுப்பினாள்.
எல்லாம் அறிந்தும், ஒரு ஞானியை போல், ஏதும் அறியாதவள் போல் இருக்கும் அம்மாவை நினைத்த போது, நேக்கு, கண்ணில் ஜலம் கொட்டியது.
சில நாட்களிலேயே அவள் கல்யாணம் கட்டிண்டு, வேறு ஸ்தலத்துக்கு போயிட்டா. என் தோப்பனாரும், அம்மாவும் காசி யாத்திரை சென்றிருந்த சமயம் அது. 12 வருஷத்துக்கு பின், தன் பிள்ளையுடன் ஊருக்கு வந்திருந்தாள். 'அவ, ஆம்படையான், கடன் தொல்லை தாங்காம, இவளையும், பிள்ளையையும் விட்டுட்டு, ஊர விட்டே ஓடிப் போயிட்டான்'னு, எங்காத்து வேலைக்காரன் சொன்னான்.
அழுக்கு புடவையுடன் பிச்சைக்காரியைப் போல் மூணாம் கொல்லையில், தன், 10 வயது மகனுடன் நின்றிருந்தவள், என்னைப் பார்த்ததும், 'சாமி... எனக்குன்னு யாரும் இல்ல; பிறந்ததும் அம்மாவ முழுங்கிட்டேன்; வளத்த பாட்டியும் செத்துப் போயிட்டா. புருஷன்காரனும் ஊர விட்டு ஓடிப் போயிட்டான்; நீங்க தான், எனக்கும், என் பிள்ளைக்கும் அடைக்கலம்...' என்று அழுதாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தேன்; 'இவள், பிறப்பு முறையற்று இருந்தாலும், இவள், என்னைப் போல், என் தோப்பனாரின் எச்சம்; இவளை வெறுக்கும் அளவிற்கு இவ, என்ன பாவம் செய்தாள்... அதை செய்தவர்கள் என் தோப்பனாரும், இவளின் அம்மாவும் அல்லவா...' என நினைத்த போது, அவ மீது நேக்கு, பரிதாபமே ஏற்பட்டது.
அவளுக்கும், அவள் பிள்ளை படிப்புக்கும் என்னாலான உதவிகள செய்யும் போது, சமயத்தில் என் ஆத்துக்காரி கோவிச்சுக்குவா... அக்ரஹாரத்து ஜனங்களும், கண், மூக்கு வச்சு பேசும்... என் தாயின் வயிற்றில் அவ ஜனித்திருந்தால், என் உடன் பிறந்தவள் ஆகியிருப்பாள். அவளைக் காப்பாற்றுவது சகோதரனாகிய என் கடமையும், தர்மமும் ஆகியிருக்கும் என்பதால், அதையெல்லாம் நான் மனசுலயோ, காதுலயோ போட்டுண்டது கெடையாது.
ஒருவழியா அவ மகன் கல்லுாரி படிப்பை முடிச்சு, சென்னையில், ஓர் ஆங்கிலேய கம்பெனியில் உத்தியோகம் கிடைச்சு, அவளையும் அழைச்சுண்டு போயிட்டான். எப்போதாவது அவள் மட்டும் ஊருக்கு வருவா. என்னை வந்து பாத்துட்டு போவா. பின், அதுவும் நின்னு போச்சு; அவர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
இறைவன் நடத்தும் நாடகத்துல நாம எல்லாருமே வேஷதாரிக தானே... அவா அவா கர்ம விதிப்படி வேஷம் கிடைச்சு போயிடுது. இதில், உயர்வு, தாழ்வுன்னு சொல்வதற்கு எதுவுமே இல்லங்கிற உண்மை மனுஷாளுக்கு புரியாம போனதால தான், பெற்ற தந்தையும், சொந்த சகோதரனையுமே, 'சாமி'ன்னு சொல்லி, மூணாம் கொல்லையோட அவா ஒதுங்கிப் போறா...
— என்று எழுதியிருந்தார். சங்கரய்யருக்கு உண்மை தெரிந்து மனம் நெகிழ்ந்து போனார்.
இன்று, தன் தந்தையின் சாயலில், நிகாரிகாவை பார்த்ததும், அவரின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
மாலையில், சீனிவாசன் தன் நண்பர்களை பார்க்க சென்று விட, முற்றத்தில், சுவாமிக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள், சங்கரய்யரின் மனைவி. அதையே, ஆர்வமாக பாத்தபடி அமர்ந்திருந்தாள், நிகாரிகா.
அங்கு வந்த சங்கரய்யர், ''என்ன கொழந்தே... மாமி பூ தொடுக்கிறத ஆச்சரியமா பாத்துண்டு உட்காந்திருக்கே... உங்க ஆத்துல பூ தொடுக்க மாட்டாளோ...'' என்றார்.
''அம்மா, நல்லா மாலை தொடுப்பாங்க... எனக்கு தான் இது கத்துக்க வரமாட்டேங்கறது...'' என்றாள், கொஞ்சும் தமிழில்!
''நல்லா தமிழ் பேசுறீயே கொழந்தே... எங்கே தமிழ் பாஷை கத்துண்டே...'' என்று கேட்டார், சங்கரய்யர்.
''அம்மா நல்லா தமிழ் பேசுவாங்க; அவங்க தான் எனக்கு தமிழ் எழுத, படிக்க கத்துக் கொடுத்தாங்க...''
''ஓ... உங்கம்மாவுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமோ...''
''அவங்க தமிழ்நாடு தான் தாத்தா... எங்கப்பா தான் வங்காளி... லவ் மேரேஜ்...'' என்று நிகாரிகா சொன்னதும், ''அப்படி சொல்லு... உன்னை பாத்ததும் நேக்கு ஒரு சந்தேகம்... நம்ம பக்கத்து மனுஷா மாதிரி இருக்காளேன்னு...'' என்று உற்சாகமாக சொன்ன சங்கரய்யர், ''உங்கம்மாவுக்கு தமிழ்நாட்டுல எந்த ஊரு...'' என்று கேட்டார்.
''சென்னை; ஆனா, என் அம்மாவோட பாட்டி பிறந்தது, இந்த ஊரு தான்,'' என்றதும், எங்கோ, தனக்கான நுால் கிடைத்து விட்டது போல், நிமிர்ந்து உட்கார்ந்த சங்கரய்யர், ''ஓ... நீ நம்மூர் கொழந்தையா... பேஷ் பேஷ்... அப்ப, உன் அம்மா இந்த ஊர்காரின்னு சொல்லு...'' என்றவர், ''ஆமா... உன் கொள்ளு பாட்டி பேரு நோக்கு தெரியுமோ...'' என்று கேட்டார்.
''ஏண்ணா... இப்படி துருவி துருவி கேள்வி கேட்டுட்டு இருக்கேள்... இந்தக் கால கொழந்தைகளுக்கு அவா பாட்டி, தாத்தா பேரே தெரியாது. நீங்க கொள்ளு பாட்டி பேர எல்லாம் கேட்டா அவாளுக்கு எப்படி தெரியும்...'' என்றாள், அவர் மனைவி.
''நீ சொல்வதும் சரிதான்,'' என்றவர், அத்துடன் அப்பேச்சை முடித்தாலும், அடுத்து வந்த நாட்களில், நிகாரிகாவின் அம்மா மற்றும் அம்மா வழி தாத்தாவை தொடர்பு கொண்டு பேசிய போது தான், அந்த உண்மை அவரை வியக்க வைத்தது. அது, மூன்றாம் கொல்லையோடு நின்று விட்ட ஒரு வித்து, கல்வி எனும் ஜீவ அமுதத்தை பருகியதன் விளைவு, இன்று விருட்சமாகி, நிகாரிகா எனும் பெயரில், தன் வீட்டுக் கூடத்தில் மணம் வீசிக் கொண்டிருப்பது!
விதி வகுத்த பாதையில் பயணப்படும் மனிதர்களால், காலம் போடும் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க தான் முடியுமா!
ப.லட்சுமி
