PUBLISHED ON : மே 27, 2018

கேரள மாநில முன்னாள் முதல்வர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரி, தன் நிலங்களை கட்சிக்கு அளித்து, இறுதி வரை, கட்சிக்கு சொந்தமான வீட்டிலேயே வாடகைக்கு வசித்து வந்தார். கடைசி வரை படிப்பதிலும், பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவதிலும் ஈடுபட்டு வந்தார். ஒருநாள், பத்திரிகை அலுவலகத்திலிருந்து, கட்டுரையின் சன்மானத்துடன் வந்த ஒருவர், 'சார்... உங்க கட்டுரைக்கான சன்மானம்...' என்றார்.
அது எவ்வளவு என்று கூட கேட்காமல், 'அதை, கட்சி ஆபிசில் கொடுத்து விடு...' என்றார். அப்போது, அருகில் இருந்த அவர் மனைவி ஆரியா, 'எனக்கு, புடவையும், ஜாக்கெட்டும் வாங்கணும்... பணத்தை கொடுங்க...' என்றார். மனைவியை முறைத்து, 'உனக்கு தான் கட்சி நிதியிலிருந்து வாங்கித் தர்றாங்களே...' என்று கடிந்து கொண்டார். 'கப்சிப்' ஆனார், அவர் மனைவி.
கட்சி நிதியிலிருந்து, ஆண்டுக்கு, இரண்டு ஜோடி சட்டை, வேட்டியும், இரண்டு ஜோடி புடவை, ஜாக்கெட்டுகளும் வழங்குவதுண்டு. எளிமைக்கு மறு பெயர்தான், ஈ.எம்.எஸ்.,
— ஜோல்னாபையன்.
