PUBLISHED ON : ஜூலை 08, 2018

ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின் போது, விபத்து ஏற்பட்டு, கை ஒடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் மனோரமா. இந்நிலையில், தேவர் பிலிம்ஸில் உள்ளவர்களுக்கு அந்த படத்தை முடிக்க வேண்டும் என்ற நெருக்கடி. பேசாமல் மனோரமாவை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க செய்து, படத்தை முடித்து விடலாம் என்ற யோசனையை அங்குள்ள பலரும் முன் வைத்தனர்.
ஆனால், தேவரும், அங்கு முக்கிய பணியிலிருந்த மாரிமுத்து என்பவரும் இதற்கு மறுத்து விட்டனர். 'மனோரமாவுக்கு நன்றாக குணமான பிறகே ஷூட்டிங்கை வச்சுக்கலாம். நம்மை போல நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறாங்க. அவங்களும் இதே மாதிரி நினைச்சு மனோரமாவை நீக்கிட்டு, வேற ஒரு நடிகையை நடிக்க வச்சா, அது தப்பாகிவிடும். இந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். அதனால, எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருப்பதே நல்லது...' என்று கூறினார், தேவர்.
அன்றைய தினம் மட்டும் இதுபோன்ற மனிதநேயம் இல்லாமல், மற்றவர்கள் கூறுவதை அப்படியே தேவரும் ஏற்றுக்கொண்டிருந்தால், மனோரமாவின் திரை உலக வாழ்க்கை நிச்சயம் கேள்விக்குறியாகி இருக்கும்.
பவநாராயணா என்பது அந்த படத்தின் பெயர். தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் அந்த படத்தை தமிழில் தயாரித்தார். அது ஒரு ராஜா - ராணி கதை. அந்த படத்தில் ஒரு வேடம் கிடைத்தது. எவருக்கும் பயப்படாத ஒரு தைரியமிக்க வீராங்கனையாக அமைந்திருந்தது அவர் கதாபாத்திரம்.
அந்த படத்தில், சிரிப்பு நடிகர் ஒருவரும் நடித்தார். அவர் சற்று படபடப்பு மிக்கவர். யோசிக்காமல் வார்த்தைகளை பட்டென்று பேசி விடுவார்.
ஒருநாள் படமாக்கப்பட இருந்த காட்சியில், சிரிப்பு நடிகர், மேலும் மூன்று பேர் வீரர்களுடன் சட்டென்று கதவை திறந்துகொண்டு அறைக்குள் வரவேண்டும். உடனே, மனோரமா கதாயுதத்தை எடுத்து, தைரியமாக அவர்களை எதிர்த்து, தாக்க வேண்டும்.
இந்த காட்சி தான் அன்று படமாக்கப்பட இருந்தது. முதலில் அதற்கான ஒத்திகை நடந்தது. நான்கு பேர் திடீரென்று உள்ளே நுழைந்ததை பார்த்ததும், படப்பிடிப்பு என்பதை மீறி முதலில் மனோரமா திகைத்து விட்டார். அடுத்த நொடி, சுதாரித்து, அவர்களை தாக்கத் தொடங்கி விட்டார்.
அவருடைய திகைப்பு மிஞ்சிப்போனால், இரண்டு அல்லது மூன்று வினாடிகள் கூட இருந்திருக்காது. அதை யாருமே கவனித்திருக்க முடியாது. ஆனால், அந்த படத்தின் வசனகர்த்தா அய்யா பிள்ளையின் கழுகு பார்வையில் இந்த ஒரு வினாடி சம்பவம் கூர்மையாக பதிந்து விட்டது.
ஒத்திகை முடிந்ததும், நேராக மனோரமாவிடம் வந்த அவர், 'இந்த காட்சியில் நீங்கள் யாருக்குமே பயப்படாத ஒரு தைரியமான வீராங்கனை. எத்தனை பேர் ஒன்றாக வந்தாலும் பயப்படாமல் அவர்களை துணிச்சலுடன் எதிர்ப்பவர். அப்படிப்பட்ட நீங்கள் திகைப்பதை பார்த்தால் அந்த காட்சி நன்றாக அமையாது...' என்று பக்குவமாக கூறினார், வசனகர்த்தா.
தன் தவறை உன்னிப்பாக கவனித்து, அதையும் மனம் நோகாமல் வெளிப்படுத்திய அவரது பெருந்தன்மையை கண்டு வியந்தவர், 'கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன் ஐயா...' என்றார்.
அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த சிரிப்பு நடிகர் இதை கேட்டு விட்டார். அய்யாப்பிள்ளை அறையிலிருந்து வெளியே சென்றதும், வேகமாக மனோரமாவின் அறைக்குள் நுழைந்தார் சிரிப்பு நடிகர்.
'என்ன சொல்றார் அய்யாப்பிள்ளை?' என்று கேட்டார்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை, சிரிப்பு நடிகர் கேட்டு விட்டார் என்பது தெரிந்ததால், பதில் சொல்லாமல் அமைதி காத்தார், மனோரமா.
'என்னை மட்டம் தட்டறதுக்கு, உனக்கு யோசனை சொல்லிக் கொடுத்தாரா? என்னை அவரால் மட்டுமல்ல எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், இந்த, 1963ம் ஆண்டு, எனக்கான ஆண்டு. இது என்னோட டைம்...' என்று கோபமாக பேசிவிட்டு, அறை கதவை, படாரென்று சாத்திவிட்டு சென்றார்.
அதிர்ந்து போனார் மனோரமா.
அதற்குள், 'ஓ.கே., டேக்...' என்று இயக்குனர் குரல் கொடுத்து, கிளாப் வேறு அடிக்கப்பட்டு விட்டது.
மனோரமாவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் பதற்றத்தில் இருந்ததால், அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் மறந்து போனது.
இதனிடையே, கண்களில் கண்ணீர் கோர்த்து, கீழே வடிய துடித்துக் கொண்டிருந்தது. எனினும், படப்பிடிப்பில் சொதப்பினால் அசிங்கமாகி விடும் என்ற பயமும் வந்தது. எனவே, மனதை திடப்படுத்திக் கொண்டார். வீராங்கனை வேடத்தில் நடிக்கிறபோது, கோழையை போல கண்ணீர் சிந்தினால் நன்றாக இருக்குமா!
எப்படியோ ஒரு வழியாக அந்த காட்சியில் தைரியமான வீராங்கனையாக நடித்து விட்டார். அந்த காட்சியில் வசனம் ஏதும் கிடையாது என்பதால், தன் மனவருத்தம் பிரதிபலிக்காமல் நடிக்க முடிந்தது.
நடித்து முடித்ததும், செட்டிற்கு வெளியே இருந்த அவரது அன்னையை நோக்கி ஓடினார். அவரிடம் நடந்ததை கூறி அழுதார்.
அவரது தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்த அன்னை, 'கவலைப்படாதே பாப்பா, இந்த, 63ம் ஆண்டு மட்டும் தான் அவர் டைம்...' என்றார்.
எத்தனை அர்த்தமுள்ள வார்த்தை இது!
அவரது அம்மா சொன்ன இந்த வார்த்தைகள் தீர்க்கதரிசனமாகவே அமைந்தது. 63ம் ஆண்டுக்கு பின், அந்த சிரிப்பு நடிகரை, திரை உலகில் பார்க்க முடியாமலேயே போய் விட்டது.
இதேபோல மனோரமாவின் வாழ்வில் அவர் மனதை புண்படுத்திய பல சம்பவங்கள் உண்டு. அவற்றில் இன்னொன்றையும் இங்கே குறிப்பிடலாம்.
'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்னும் நாடகம், திருநெல்வேலி கண்காட்சியில் நடைபெற இருந்தது. அதில் நடிப்பதற்காக, மனோரமாவிடம் தேதியை வாங்கி விட்டார், ப்ரண்டு ராமசாமி என்னும் சிரிப்பு நடிகர்.
அப்போது, பிரபல நடிகர் கே.ஆர்.ராமசாமியின் நாடக மன்றத்திலும் மனோரமா நடித்துக் கொண்டிருந்தார். இதே நேரத்தில், 'வேலைக்காரி' என்னும் நாடகம் சேத்தியாதோப்பை அடுத்த சங்கரன்பந்தலில் நடைபெற இருந்தது. இதில் நடிப்பதற்கு, மனோரமாவிடம் பேசினார் கே.ஆர்.ஆர்.,
ஆனால், அதே நாளில், திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் நாடகத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்தது. எனவே, தன் இயலாமையை தெரிவித்தார்.
திருநெல்வேலிக்கும், சேத்தியாதோப்பிற்கும் இடைப்பட்ட துாரம் சுமார், 650 கி.மீ., ஆனால், கே.ஆர்.ஆர்., 'நீ இல்லாமல் நாடகம் கிடையாது. எப்படியும் இந்த நாடகத்தில் நீ நடித்தே ஆகவேண்டும். நாடகத்தில் நடித்து முடித்ததும், ப்ரண்டு ராமசாமி நாடக குழு வரும் நெல்லை ரயிலிலேயே உன்னையும் அவர்கள் பெட்டியில் ஏற்றிவிட, தேவையான ஏற்பாடுகளை நான் செய்கிறேன். அந்த ரயிலில் நீ புறப்படுறதுக்கு ஏற்ற மாதிரி நாடகத்தை முன்னாடியே ஆரம்பிச்சிடலாம்...' என்று வற்புறுத்தினார்.
இந்த ஏற்பாட்டை ராமசாமியிடம் தெரிவித்து, 'எப்படியும் உங்க நாடகத்தில் நடிக்க வந்திடுறேன்...' என்று கூறினார். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில்குமார்
