தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (26)

ஆச்சி மனோரமா! (26)

ஆச்சி மனோரமா! (26)


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனோரமாவும், ராமநாதனும், அருகிலிருந்த திருச்செந்துார் முருகன் கோவிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி, மனோரமாவின் அம்மாவிற்கு தெரியாமல், 1964ல், திருச்செந்துாரில் மிக எளிமையாக நடந்தது, அவர்களது திருமணம்.

'வாழ்ந்தாலும், இறந்தாலும் இணை பிரியாமல் வாழ்வோம்; என்னில் சரி பாதி நீ...' என்றெல்லாம் வாக்களித்தார், ராமநாதன்.

இதை நம்பியே அவருக்கு கழுத்தை நீட்டினார், மனோரமா.

ஆனால், இவை அனைத்துமே உதட்டில் இருந்து மட்டுமே வெளியான வார்த்தைகள் என்பது பிறகு தான் அவருக்கு புரிந்தது.

அம்மாவின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்ததால், அம்மாவுடன் பேச்சு இல்லாமல் போயிற்று. இது, மனோரமாவுக்கு மன வருத்தத்தை தந்தது.

இதன் பின், தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தாலும், அமெச்சூர் நாடகங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினார், கணவர்.

திருமணமாகி, இரு மாதங்களிலேயே கர்ப்பவதியானார், மனோரமா. ஆனால், அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை; கருச்சிதைவு ஏற்பட்டு, மோசமான நிலையில், கொட்டாம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மயக்கம் தெளிந்து, கண் விழித்தபோது, அங்கே, அவரது காதல் கணவர் ராமநாதனை காணவில்லை. மாறாக, மனோரமாவின் அம்மா தான் இருந்தார்.

தாயைக் கண்டதும் கண்களில் கண்ணீர் தளும்பியது.

ஆனாலும், தன் ஆசை கணவரின் முகத்தை பார்க்க ஆவலாக இருந்தது. சுற்றுமுற்றும் கண்களை சுழலவிட்டார்.

'என்ன தேடறே?' என்று கேட்டார், அம்மா.

'என் புருஷனை தேடறேன்...' என்றார் வெள்ளந்தியாக!

'உனக்கு முடியலன்னதும், இந்த ஆசுபத்திரியில கொண்டு வந்து சேர்த்திட்டு, நாடக கம்பெனியோட வேற ஊருக்கு போயிருட்டாரு; தகவல் தெரிஞ்சு ஓடி வந்தேன்...' என்றார், அம்மா.

'நறுக்'கென்று உச்சந்தலையில் குட்டியது போல் வலித்தது. கணவரை நினைத்த போது, முதன் முறையாக பயம் தோன்றியது.

'கடைசி வரை தன் கூட இருப்பாரா...' என்ற சந்தேகம் எழுந்தது.

ஒருசில தினங்களில் உடம்பு குணமாகியது. பின், மறுபடியும் அந்த நாடக கம்பெனியிலேயே போய் சேர்ந்தார், மனோரமா. பின், அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை தொடர்ந்தது. கைப்பிடித்தவரை அத்தனை எளிதாக விட்டுவிட முடியுமா என்ன!

பின், சில மாதங்களில் மீண்டும் கருவுற்றார், மனோரமா. வயிற்றில் கருவை சுமந்தபடி, ஒன்பது மாதங்கள் வரை நாடகங்களில் நடித்தார். முடியவில்லை என்றால் கூட, ஓய்வெடுக்க சம்மதிக்கவில்லை, ராமநாதன். வருமானம் குறைந்துவிடும் என்று கூறி, அவரை தொடர்ந்து நடிக்க வைத்தார்.

இதனிடையே, ஆறு மாதங்களாக நாடகத்தில் நடித்ததற்கான சம்பளமும் அவருக்கு கிடைக்கவில்லை. அதைக் கேட்டால், இழுத்தடித்தனர்.

கணவரிடம் இதுபற்றி தெரிவித்தபோது, 'கவலைப்படாதே... நான் பார்த்துக்கறேன்...' என்று கூறிவிட்டார். எனவே, ராமநாதன் பார்த்துக் கொள்வார் என்று மனோரமாவும் பேசாமல் இருந்து விட்டார்.

ஒன்பதாவது மாதம், பிரசவத்திற்காக, சொந்த ஊரான பள்ளத்துாருக்கு அழைத்து வந்து விட்டார், அம்மா.

அப்போது, கணவரிடம், 'பிரசவத்திற்கு பணம் தேவைப்படும்; சம்பளப் பாக்கியை வாங்கித் தாங்க...' என்று கேட்டார், மனோரமா.

அதற்கு ராமநாதனோ, 'உன்னை பார்க்க வரும்போது, சம்பள பாக்கியை வாங்கிட்டு வர்றேன்...' என்று சொல்லி, அவரை ஊருக்கு அனுப்பி விட்டார்.

ஆனால், அப்புறம் மனோரமாவை பார்க்க, அவர் வரவே இல்லை.

பணம் இல்லாமல் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவர் என்ற சிந்தனை கூட அவருக்கு இல்லாமல் போயிற்று.

பிரசவ வேதனையில் துடித்தார், மனோரமா. இதை பார்த்து கலங்கிப் போனார், அம்மா.

வீட்டுக்கு எதிரே பூமாதா அம்மன் கோவில் இருந்தது. அந்த அம்மனிடம், 'தாயே, என் மகளுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் ஆக வேண்டும். அவ்வாறு நடந்தால், என் பெயரை குழந்தைக்கு வைக்கிறேன்...' என்று, பிரார்த்தனை செய்து, கண்களை திறந்தபோது, எதிரே, நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது.

இதை பார்த்ததும், பயந்து போன ராமமிர்தம், 'தாயே... குழந்தைக்கு, உன் பெயரையே சூட்டுறேன்...' என்று தன் தவறை திருத்தி வேண்டினார்.

அப்புறம், அந்த பாம்பு சன்னிதிக்குள் சென்று விட்டதாம்!

இந்த வேண்டுதலின்படி நல்லபடியாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார், மனோரமா.

அக்குழந்தைக்கு, பூமாதா அம்மனின் பெயராக, 'பூபதி' என்று பெயர் சூட்டப்பட்டது.

குழந்தை பிறந்த சேதி உடனடியாக ராமநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. சேதி அறிந்து, கணவர் பாசத்தோடு பறந்தோடி வருவார் என்று எதிர்பார்த்தார், மனோரமா.

ராமநாதனும் வந்தார்; ஆனால், உடனடியாக இல்லை; பதினைந்து நாட்களுக்கு பின்!

அப்போதும், தன் மனைவியையும், மகனையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வரவில்லை; மனோரமாவை மீண்டும் நாடகத்தில் நடிக்க வைப்பதற்காக கையோடு அழைத்துப் போக வந்திருந்தார்.

வந்தவர் சம்பள பாக்கியை கொடுத்து, அவர்களது பொருளாதார பிரச்னையை தீர்த்திட வழிகோலுவார் என்று எதிர்பார்த்தார், மனோரமா. எதுவும் நடக்கவில்லை. சரி, மனைவியையும், மகனையும் ஆசையோடு கொஞ்சி மகிழ்வார் என்றால் அதுவும் இல்லை.

அவருக்கு பணம் தான் முக்கியமாக தெரிந்தது. நாடகங்களில் மனோரமா நடித்து, அதன்மூலம் நிறைய வருமானம் வரவேண்டும் என்பது மட்டுமே அவரது சிந்தனையாக இருந்தது.

பாசம் துளிக்கூட அவரிடம் இல்லை என்பதை உணர்ந்தார், மனோரமா.

தாய் பேச்சை கேட்காமல், காதல் மயக்கத்தில் தன் வாழ்வை கெடுத்துக் கொண்டோமே என்று நினைத்து குமுறினார்.

ஆனால், அவரது குமுறலை பற்றி கவலையே படாமல், தன்னோடு மனோரமாவை அழைத்துப் போவதிலேயே உறுதியாக இருந்தார், ராமநாதன்.

இது, மனோரமாவின் அம்மாவுக்கு கோபத்தை கிளற, 'பச்சை உடம்புகாரி, குழந்தை பிறந்து ஒரு மாசம் கூட ஆகல; அதுக்குள்ள ஊர் ஊரா அவளை அழைச்சிட்டு போய், நாடகத்தில் நடிக்க வைக்கிறது எப்படி சரியா இருக்கும்... இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன். உங்க பொஞ்சாதி வந்தா தாராளமா கூட்டிப்போங்க... ஆனா, இப்படி செய்யிறது கொஞ்சம் கூட சரியில்ல...' என்று கோபமும், அழுகையுமாக கூறினார்.

— தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us