தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கம்ப்யூட்டர் துறையில் வல்லுனராக உள்ள நண்பர் ஒருவர், தம் இல்லத்திற்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார். கடந்த வாரத்தில், ஒருநாள் மாலை அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.

வரவேற்பு கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் கூடத்தை ஒட்டிய அறை ஒன்றின் திரைச்சீலை, காற்றிற்கு அசைவது போல் அல்லாமல், கொஞ்சம், 'அப்நார்மலாக' அசைவது போல இருந்தது.

என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில், நண்பருடன் பேசியபடியே, அடிக்கடி அந்த திசையில் பார்வையைச் செலுத்திக் கொண்டே இருந்தேன். இதைக் கவனித்து விட்ட நண்பர், திரைச்சீலைப் பக்கம் திரும்பி, 'என்ன வெக்கம்... வெளியே வா... சார் தான் அந்துமணி... 'அவரப் பாக்கணும்... வீட்டுக்கு கூட்டியாங்க மாமா'ன்னு, ஊருல இருந்து வந்த நாள் முதலா தொந்தரவு குடுத்துக்கிட்டு இருந்தே... இப்போ என்ன ஓடி ஒளியுறே?' என்றபடியே உள்ளே சென்று, குட்டிப் பெண் ஒருவரை இழுத்து வந்தவர், என்னிடம், 'இது சத்யா; என் அக்கா பொண்ணு. கேந்திரிய வித்யாலயாவுல, 'டென்த்' படிக்கிறா... இப்ப, லீவுக்கு, இங்க வந்து இருக்கா... உங்க பகுதிகளை, ஒண்ணு விடாமப் படிச்சிடுவா... நீங்க என்னோட, 'தோஸ்த்'துன்னு தெரிஞ்ச நாளுல இருந்து, 'அறிமுகப்படுத்தி வை மாமா'ன்னு ஒரே தொணத்தல்...' என, கூறினார்.

புதியவர் என்பதால், ஆரம்ப கட்ட சங்கோஜத்திற்குப் பின், மடை திறந்தது போல், ஸ்கூல் கதைகள்,- ஜோக்குகள், இன்டர்நெட் சமாசாரங்கள்... எனக்கு தெரியாத இன்டர்நெட் முகவரிகள் என அடுக்கிக் கொண்டே சென்றது அந்தக் குட்டிப் பெண். சின்ன பெண் என்பதால், 'பாப்பா' என்று கூறியதும், கோபம் பொத்துக் கொண்டு வந்து, 'நான் ஒன்றும் பாப்பா இல்ல; சத்யான்னு பேரு சொல்லிக் கூப்பிடுங்க... இப்ப உங்கள நான், 'அங்கிள்'ன்னு கூப்பிட்டா, கோபம் வருமா, வராதா சொல்லுங்க...' என்று வேறு கடிந்து கொண்டது.

'சரி சரி... இதெல்லாம், 'டீன் ஏஜ்' பருவத்து கோபங்கள்...' என, நினைத்துக் கொண்டேன்.

தன், இங்கிலீஷ் வாத்தியாரின் இங்கிலீஷ் உச்சரிப்பு குறித்தும், தமிழில் யோசித்து, அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அவர் பேசுவதால் ஏற்படும் அபத்தங்கள் பற்றியும் விவரித்தாள், சத்யா.

இதோ ஒரு சம்பவம்:

மாணவ, மாணவியரிடம் ஆங்கில கட்டுரை ஒன்று எழுதச் சொல்லி, அதை குறிப்பிட்ட ஒரு நாள் எடுத்து வரச் சொல்லி இருக்கிறார். ஆங்கில வாத்தியார் இவர்கள் கட்டுரையைத் தயார் செய்து, குறிப்பிட்ட தினத்தில் தயாராக வைத்திருந்தனர்.

ஆங்கில வகுப்பு வந்ததும், நம் கதாநாயக வாத்தியாரும், 'கட்டுரையைக் காட்டுங்கள்' எனச் சொல்ல நினைத்து,- தமிழில் இந்த வார்த்தைகளை சிந்தித்து - ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார்...

'ஆல் பீப்புள் எக்ஸ்போஸ்...' - 'எல்லாரும் காட்டுங்கள்' என்ற பொருளில் சொல்லி இருக்கிறார்!

மாணவியரும், மாணவர்களும், பயந்து போய் தங்கள் நெஞ்சில் கை வைத்து மூடி, பின்னர் நமுட்டு சிரிப்பு சிரித்திருக்கின்றனர். சிறிது நேரம், 'திரு திரு'வென விழித்து, ஏதோ தப்பாகச் சொல்லி விட்டோம் என புரிந்து, சமாளித்திருக்கிறார் வாத்தியார்.

இன்னொரு நாள், ஒரு மாணவனும், மாணவியும், நடைபாதையில் ஏதோ பேசியபடி சென்றுள்ளார். இதை, பார்த்து விட்டார் நம் கதாநாயகர்.

வகுப்புக்குள் வந்ததும், எடுத்து விட்டிருக்கிறார்...

'ஒன் பாய், - ஒன் பாய் டாக்கிங்... ஐ அக்சப்ட்; ஒன் கேர்ள், - ஒன் கேர்ள் டாக்கிங்... ஐ அக்சப்ட்; ஒன் பாய், - ஒன் கேர்ள் டாக்கிங்... ஐ சஸ்பெக்ட்!'

'கொல்' என வாய் விட்டே சிரித்து விட்டனராம் மாணவ, மாணவியர்!

வாத்தியார் சொல்ல வந்தது இதுதான்...

'ஒரு பையனும், இன்னொரு பையனும் பேசிக் கொள்வதை ஏற்றுக் கொள்வேன்; ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணும் பேசினால், ஏற்றுக் கொள்வேன்; ஒரு பெண்ணும், ஒரு பையனும் பேசினால், சந்தேகம் வருது...'

இந்த ஜோக்கை சொல்லி, விழுந்து விழுந்து சிரித்து, 'இப்ப சொல்லுங்க சார்... நாங்க படிப்புல உருப்படுவமா, மாட்டோமா...' என, கேட்டாள், சத்யா.

'ஆங்கிலத்தில் பேசணும்ன்னு ஆசப்படுறவங்களுக்கு நிறைய ஆங்கில வார்த்தைகள் தெரியணும். அது மட்டுமில்ல, ஆங்கிலத்தில் யோசித்து, ஆங்கிலத்தில் பேசினால் தான் சரியாக இருக்கும். இல்ல அது, தங்கிலீஷ் ஆகத் தான் இருக்கும்...' என லென்ஸ் மாமா, எப்போதோ, எங்கோ, யாரிடமோ சொன்னது, அப்போது என் நினைவுக்கு வந்தது.

'ஆஹா... இப்படிப்பட்ட விவகாரங்களில் நாம் எப்போதும் இறங்குவது இல்லையே...' என, மகிழ்ச்சி அடைந்தேன்!

வாசகி ஒருவர் தவறாது, ஏதாவது ஒரு தகவலை, 'ஈ--மெயில்' செய்வார். அது ராசி பலனாகவோ, சர்வே குறிப்பாகவோ, 'இன்டர்நெட்டில்' அவர் படித்த ஜோக்காகவோ இருக்கும்.

இவர், ஒரு கல்லுாரி மாணவி என்று மட்டுமே அனுமானிக்க முடிந்தது; மற்ற விபரங்கள் தெரியவில்லை.

கடந்த வாரத்தில் ஒரு நாள், கம்ப்யூட்டரைத் தட்டி, 'ஈ- - மெயில்' ஏதாவது வந்துள்ளதா என பார்த்த போது, பல தபால்களுடன், அவர் அனுப்பி இருந்த ஒரு தமாஷும் இருந்தது.

இதோ அது:

நடுத்தர வயது மனிதர் ஒருவர், அந்த கல்லுாரி விடுதிக்கு வந்து, ஒரு குறிப்பிட்ட அறையின் கதவை தட்டினார்.

அந்த அறையில் இருந்த மாணவர் கதவைத் திறந்து, 'என்ன வேண்டும்?' எனக் கேட்டார்.

வந்தவர், தான் அந்தக் கல்லுாரி பழைய மாணவன் என்றும், ஹாஸ்டலில் அதே அறையில் தங்கிப் படித்ததாகவும், பழைய ஞாபகம் வந்ததால், பார்த்து விட்டுப் போக வந்ததாகவும் கூறினார்.

அவரை உள்ளே வரச் சொன்னார், மாணவர்.

'அதே பழைய மேஜை, பழைய புத்தக ஷெல்ப்... அதே பழைய நாற்காலி...' என்றார் அவர்.

பின், பீரோவின் அருகே சென்று, 'அதே பழைய பீரோ...' என்று கூறியபடியே, அதன் கதவைத் திறந்தார்.

உள்ளே, ஓர் அழகான பெண் மறைந்திருந்தாள்.

பதறிய மாணவன், 'அவள் என் கசின்!' என்றாள்.

'அதே பழைய கதை!' என்றபடியே வாசலைப் பார்த்து நடந்தார்.

- அப்பப்பா... இந்த கால கல்லுாரி மாணவியருக்கு குறும்பு அதிகம் தான் இல்லையா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us