தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (3)

ஆச்சி மனோரமா! (3)

ஆச்சி மனோரமா! (3)


PUBLISHED ON : மார் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு சென்ற கோபிசாந்தா, அவ்வீட்டு குழந்தையை துாக்கி கொஞ்சி, தோளில் சாய்த்தாள். உடனே, அக்குழந்தை, கோபிசாந்தாவின் தோள் பட்டையில் அழுந்த கடித்து, 'வீல்' என்று கத்தியவாறு, ஏற்கனவே, அங்கு வேலை செய்யும் ஆயாவிடம் போய் ஒட்டிக்கொண்டது.

வலி எடுக்கவே, கடிபட்ட இடத்தை நன்றாக அழுத்தித் தேய்த்தாள், சிறுமி. கூடவே, அக்குழந்தையை தன் வழிக்குக் கொண்டு வராமல் போனால் சம்பளம் கிடைக்காது, அப்புறம், சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்தது.

எனவே, எப்படியாவது, அக்குழந்தையை தன்னோடு நெருங்கிப் பழக வைத்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்தாள், கோபிசாந்தா. ஆனால், அறிமுகமற்றவளாக இருந்ததால், ஆயாவிடம் ஒட்டிக்கொண்டு, இவளை பார்க்க மறுத்தது, குழந்தை.

மூன்று வேளை சோறு கிடைக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த நிலையில், அது கிடைக்காமல் போய் விடுமோ என்ற கலக்கம், அந்த பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்பட்டது. பொதுவாக, உச்சபட்ச பயமும், கவலையும் சேர்ந்து மனதை அலைக்கழிக்கும் போது, ஒரு புது வழியை ஏற்படுத்திக் கொடுப்பான், இறைவன். அதன்மூலம் ஒரு நல்வழி கிட்டும்!

அப்படிதான் கோபிசாந்தாவிற்கும் ஒரு புதிய யோசனை பளிச்சிட்டது. இக்குழந்தையை பார்க்கும் பொறுப்பை, ஆயாவிடமே ஒப்படைத்து, ஆயா செய்யும் வேலையை தான் செய்தால் என்ன என்று தோன்றியது.

இந்த யோசனையை ஆயாவிடம் தெரிவித்ததும், 'எப்படியாவது இந்த வேலையில் சேரணும்ன்னு நீ ஆசைப்படறது புரியுது கண்ணு... ஆனா, நான் பாக்கற வேலைய உன்னால செய்ய முடியாது...' என்றாள்.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாமல், தன்னால் அந்த வேலையை செய்ய முடியும் என்று உறுதியாக கூறினாள், கோபிசாந்தா.

பொதுவாக, காரைக்குடி செட்டியார் வீடுகள் எல்லாமே, மிகப்பெரியது. கோபிசாந்தா வேலை பார்த்த வீடும், மிகப்பெரியது. விருந்தினர்கள் நிறைய பேர் தினமும் வந்தவண்ணம் இருப்பர். இதனால், தினமும், மிகப்பெரிய விருந்து சாப்பாடே அங்கு நடக்கும்.

சமையல் வேலை அனைத்தும், அந்த ஆயாவின் பொறுப்பு. ஆயாவிற்கு, 40 வயது இருக்கலாம். சமையல் மட்டுமல்லாமல், மசாலா பொருட்கள் அரைத்து கொடுப்பது, பாத்திரம் கழுவுவது, தண்ணீர் இரைப்பது, வீட்டை பெருக்குவது மற்றும் வேறு சில்லரை வேலைகள் போன்றவை ஆயாவின் வேலை.

இந்த வேலை முழுவதையும் பத்து வயது சிறுமியால் செய்ய முடியுமா என்பது சந்தேகம் தான். ஆனால், அச்சிறுமியே துணிச்சலாக அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறியதால், ஆயாவும் இந்த, 'டீலு'க்கு சம்மதித்தாள்.

எனவே, குழந்தையை பார்க்கும் பொறுப்பை ஆயா ஏற்றுக் கொள்ளவே, ஆயா செய்யும் வீட்டு வேலைகளை செய்யத் துவங்கினாள், கோபிசாந்தா. சிறுமியின் சக்திக்கு மீறிய வேலை; ஓய்வே இல்லை; நாள் முழுவதும் உழைப்பு தான்.

சற்று உடல்நிலை தேறியதால், அவளின் அன்னையும், இன்னொரு செட்டியார் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். இதனால், ஏதோ ஒருவகையில் பட்டினி இல்லாத நிலை ஏற்பட்டது.

கோபிசாந்தா வேலை செய்தது, அவளுடைய பள்ளித் தோழியின் தாத்தா வீடு.

தோழியின் வீட்டு வேலைக்காரியாக இருப்பதே கோபிசாந்தாவிற்கு கொஞ்சம் மனவருத்தமாகத் தான் இருந்தது. ஆனாலும், என்ன செய்வது... விதி வலியது அல்லவா!

செட்டியார் வீடுகளில் ஒரு பழக்கம் இருந்தது; அங்கு பணிபுரியும் இளம் பெண்களை, 'குட்டி' என்று அழைப்பது வழக்கம். இது, கொஞ்சம் கவுரவக் குறைவானது. ஆனாலும், யாரும் இதை பொருட்படுத்துவதில்லை. காரணம், மாதந்தோறும் சம்பளம் கிடைத்து, வீட்டில் வறுமை குறைகிறதே!

கோபிசாந்தாவையும் அவ்வீட்டினர், 'குட்டி' என்றே அழைத்தனர். கேவலமாக இருந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டாள். எனினும், அவள் பள்ளித் தோழியும், 'குட்டி' என்று அழைத்ததைத்தான் அவளால் தாங்க முடியவில்லை.

அதற்கு காரணம், அந்த தோழி படிப்பில் மிகவும் சுமார்; பலமுறை படித்தாலும் அவளுக்கு மண்டையில் ஏறாது. தேர்வின்போது கோபிசாந்தாவை பார்த்து காப்பி அடித்தே எழுதுவாள். மேலும், சாந்தாவை, 'பாப்பா...' என்றே அழைப்பாள்.

'பாப்பா' என்பது சற்று கவுரவமான அழைப்பு!

அப்படிப்பட்ட தோழி, 'குட்டி' என்று அழைத்ததால், கோபிசாந்தாவிற்கு கோபம் வந்தது. முகம் ஜிவ்வென்றது; ஆத்திரம் அதிகமாகி, இயலாமையில் அழுகை பீறிட்டது. 'குட்டி என்று கூப்பிடாதே...' என்று அவளிடம் எப்படி சொல்ல முடியும்... அப்படி கூறினால் அது மிகப்பெரிய குற்றமாகி, வேலைக்கே உலை வைத்து விட்டால் என்ன செய்வது!

எனினும், அழுகையை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதைப் பார்த்த ஆயா, அழுகைக்கான காரணத்தை கேட்டாள். மனக் குமுறளோடு விஷயத்தை சொன்னாள், சிறுமி.

பின், தோழியை தனியாக அழைத்து, 'உன்னோடு ஒன்னா படிச்ச பெண் இல்லயா... உனக்கு நெருங்கின தோழியும் கூட; அவளை, 'குட்டி'ன்னு கூப்பிட்டா, அவ, மனசு கஷ்டப்படும் இல்லயா... இனிமே அப்படி கூப்பிடாதே கண்ணு...' என்று பக்குவமாக கூறினாள், ஆயா.

அதன்பின், அத்தோழி, 'குட்டி' என்று அழைப்பதை நிறுத்திக் கொண்டாள். ஆனால், அந்நிகழ்வு மட்டும் கோபிசாந்தாவின் மனதை விட்டு நீங்கவே இல்லை.

பின்னர் மனோரமாவாக மாறி, செல்வமும், புகழும் சேர்த்து, நிறைய பணியாளர்களை வேலைக்கு அமர்த்திய போது, எந்த ஒரு பணியாளரையும் மரியாதை குறைவாக அழைத்ததோ, கவுரவக் குறைவாக நடத்தியதோ இல்லை.

பள்ளத்துார் சம்பவம் தான் அவரை, இவ்வாறு பண்பட்டவராக மாற்றி இருந்தது.

தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம், சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us