தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகையின் மணம்!

என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன்.

அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். வீட்டு வேலை முடிந்ததும், பூக்களை பறித்து கட்டி, விற்று விடுவாள். இந்த கூடுதல் வருமானம் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கு...' என்றார்.

அவர்கள் வீடு, மல்லிகை மணத்தால் நிரம்பியிருப்பதுடன், துாய்மையான காற்றும் கிடைக்கிறது.

வாசகர்களே... நீங்களும், வீணாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை, பயன் உள்ளதாக மாற்றலாமே!

ர.சுகந்தி, சென்னை.

பேருந்து குப்பை தொட்டி அல்ல!

சமீபத்தில், அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டேன், வழியில் ஒரு இடத்தில், சிறிது நேரம் நின்றது. அப்போது, நடுத்தர வயதுடைய வியாபாரி ஒருவர், ஜன்னலோரமாய் வந்து, உரிக்காத வேக வைத்த வேர்க்கடலையை விற்றார். நான் உட்பட, பலர் வேர்க்கடலை பொட்டலங்களை வாங்கினோம். பொட்டலத்தோடு ஒரு காகிதமும் தந்தார். 'இது எதற்கு?' என்றதற்கு, 'சார்... வேர்க்கடலையை உரிச்சு, தோலை கீழே போடாம, இந்த காகிதத்துல வச்சு, பஸ்சிலிருந்து இறங்கும்போது, குப்பை தொட்டியில் போடுங்க...' என்றார்.

வேர்க்கடலையை உரித்து சாப்பிட்டு, பேருந்துக்குள்ளேயே தோலை போட்டு, குப்பை வண்டி போல ஆக்கிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் நடந்து கொண்ட அவரின் பொறுப்புணர்வு என்னை ஆச்சரியப்படுத்தியது.

கே.ராஜேந்திரன், வேலுார்.

வியாபார தந்திரம்!

ஒரு ஞாயிறன்று முடிவெட்டிக் கொள்ள சலுானுக்கு சென்றிருந்தேன். வெளியே ஒருவர் அமர்ந்து, மருத்துவமனையில், முன்பதிவு செய்ய டோக்கன் தருவதுபோல, டோக்கன் வழங்கி, 50 ரூபாய் முன் பணமாக பெற்று, அமரச் சொன்னார்.

அவரிடம் காரணம் கேட்ட போது, 'கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, பலர் முடி வெட்டிக் கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர்; 'அட்வான்ஸ்' வாங்கி விட்டால் காத்திருந்து, முடி வெட்டி செல்வர்...' என்றார்.

என்னே ஒரு வியாபார தந்திரம் என்று வியந்து, 'அட்வான்ஸ்' கொடுத்து விட்டதால், வேறு வழியின்றி, அங்கேயே முடி வெட்டி வந்தேன்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

குத்துப் பாட்டுக்கு பதிலாக...

என் உறவினர் இல்லத் திருமணத்திற்காக, சென்னையிலிருந்து, சேலத்திற்கு தனியார் பேருந்தில் பயணித்தேன். பேருந்தில், 'சர்க்கரையை வெல்வோம்' எனும் தலைப்பில், குறுஞ்செய்தி ஒலிபரப்பானது. அதில், சர்க்கரை நோய் வராமல் தடுக்க, கையாளும் முறைகள், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக் கூடிய உணவு முறைகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் என, பல பயனுள்ள தகவல்கள் ஒலிபரப்பாயின. பெரும்பாலும், தனியார் பேருந்துகளில் திரைப்படங்கள் மற்றும் சினிமா பாடல்களை தான் ஒலி - ஒளிபரப்புவர். அதற்கு மாறான இந்த ஒலிபரப்பு, பாராட்டும்படியும், வரவேற்க தக்கதாகவும் இருந்தது.

இதை, மற்ற பேருந்துகளிலும் பின்பற்றலாமே!

பிரேமா சாந்தாராம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us