PUBLISHED ON : மார் 25, 2018

பொதுவாக, சிவன் கோவில்களில், பைரவருக்கென்று தெற்கு நோக்கி ஒரு சன்னிதி இருக்கும்; அவருக்கு, அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜை செய்வர். மற்ற நாட்களில், சன்னிதியை வலம் வருகையில், வழியில் தரிசித்து விட்டு செல்வதோடு சரி. ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி கோவிலிலோ, மூலஸ்தானத்தில் இருந்து அருள் பாலிக்கிறார், பைரவர்.
சிவனின் அவதாரமே பைரவர்; அவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்...
இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் வரம் வேண்டினான், காஷ்யப் முனிவரின் மகனான, தாருகாசுரன்.
'பிறப்பு என்றால் இறப்பும் உண்டு; அதனால், உன் இறப்பு எப்படி அமைய வேண்டும் என்பதை கேள்...' என்று சொன்னார், சிவபெருமான். எனவே, ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான், தாருகாசுரன். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
இந்த வரத்தைப் பயன்படுத்தி, பல அதர்மங்களை செய்தான், தாருகாசுரன். சிவனிடம் முறையிட்டனர், தேவர்கள். உடனே, பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறையில் ஒரு சுடரை உருவாக்கினாள். அச்சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. விஷத்தை, 'காளம்' என்பர்; காளம் படிந்த சுடர் ஏந்திய அந்த பெண்ணுக்கு, 'காளி' என, பெயர் சூட்டினாள், பார்வதி.
காளி தேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள்; அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, தாருகாசுரனை சுட்டெரித்தது. பின், அக்கனலை, ஒரு குழந்தையாக மாற்றி, அதற்கு பாலுாட்டினாள். அதன்பின், காளியையும், அக்குழந்தையையும் தன் உடலுக்குள் புக செய்தார், சிவபெருமான். அப்போது, அவரது உடலில் இருந்து எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் (அஷ்ட பைரவர்) ஒன்றாக்கிய சிவன், அக்குழந்தைக்கு, 'காள பைரவர்' என்று பெயர் வைத்தார்; பின்னாளில் அது, கால பைரவராக மாறிவிட்டது.
வேதத்தின் வடிவமாக, கருதப்படுகிறது, நாய் வாகனம். நாய்க்கு, 'வேதஞாளி' என்ற பெயரும் உண்டு.
கோவில்களில் பைரவரே, காவல் தெய்வம்; அக்காலத்தில், கோவிலைப் பூட்டி, பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு செல்வது வழக்கம். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவர், பைரவர்.
இலங்கையில் ராவண வதம் முடிந்ததும், பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்ய முடிவெடுத்தார், ராமபிரான். அதற்காக, லிங்கம் எடுத்து வர, ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அவர் லிங்கத்துடன் வரும்போது, காசி லிங்கத்திற்கு காவலாக ஆஞ்சநேயருடன் வந்துள்ளார், பைரவர். அவருக்கு, தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசை பிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார்.
இவ்வூரை, 'யந்திரபுரி' என்பர்; இதன் தமிழ் பெயரே, தகட்டூர். சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன், ஸ்ரீசக்ரம் அமைக்கப்படும்; இங்கும் யந்திரம் உள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.
சித்ரா பவுர்ணமியை ஒட்டி, 10 நாள் விழா நடக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலமான மாலை, 4:30 - 6:00 மணி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். மனோபலம், வியாதி நிவர்த்தி, நியாயமான வேண்டுதல்கள் நிறைவேற, தேய்பிறை அஷ்டமியன்று, மாலை, 5:00 மணிக்கு யாகம் நடைபெறுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடைபெறும்.
தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப் பூண்டி வழியாக, வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம்.
- தி.செல்லப்பா
