தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (4)

ஆச்சி மனோரமா! (4)

ஆச்சி மனோரமா! (4)


PUBLISHED ON : ஏப் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுமி கோபிசாந்தா, செட்டியார் வீட்டில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில், கோபிசாந்தாவின் தாய், ராமமிர்தம் பணிபுரிந்த வீட்டில் ஏதோ பிரச்னை. அவரால் அங்கு வேலை பார்க்க முடியவில்லை. வேறு வழியின்றி, வேலையை விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார், ராமமிர்தம். மகள் கோபிசாந்தா வேலை செய்யும் வீட்டுப் பக்கமாக வந்தவர், அப்படியே, மகளையும் பார்த்து விட்டு செல்லலாம் என்று, அந்த வீட்டிற்குள் நுழைந்தார். அங்கே, தன் மகள் செய்து கொண்டிருந்த வேலையை பார்த்து அதிர்ந்து போனார், ராமமிர்தம்.

ஒரு ஆள் உயரம் உள்ள அண்டா, குண்டாக்களை தனி ஒருத்தியாக, மகள் தேய்த்து கழுவுவதைக் கண்டதும், அவருக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

மகளை பார்க்காமல், அந்த வீட்டிலிருந்து வெளியேறிய ராமமிர்தம், சிறிது நேரம் தங்களது நிலையை நினைத்து கண்ணீர் விட்டார். பின், பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை; இப்படியொரு கடினமான வேலையை, தன் மகள் செய்யவே கூடாது என்று தீர்மானித்தார்.

செட்டியார் வீட்டு, ஆயாவை பார்த்து, சத்தம் போட்டார். அவர் எவ்வளவோ சமாதானம் பேசியும், தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ராமமிர்தம்.

வேறு வழியின்றி, செட்டியார் வீட்டிற்கு வந்த ஆயா, 'உன் பாட்டி இறந்து போனதாக தந்தி வந்திருக்கிறதாம்; உங்கம்மா உனக்காக காத்துக்கிட்டிருக்காங்க; உடனே புறப்படு...' என்று கோபிசாந்தாவை கூப்பிட்டார்.

கோபிசாந்தாவோ, 'எனக்கு பாட்டி யாரும் கிடையாதே...' என்றாள், அப்பாவித்தனமாக!

அதை, காதில் வாங்காமல், அவளை அழைத்துச் சென்று, ராமமிர்தத்திடம் சேர்ப்பித்தாள். அதன்பின்பே, கோபிசாந்தாவிற்கு உண்மை தெரிந்தது.

'அம்மாவும் வேலையை விட்டு விட்டார்; நம்மையும் வேலையை விடச் சொல்லி விட்டார். அப்படியானால், இனி சோற்றுக்கு என்ன செய்வது... கடவுளே எங்களை காப்பாற்று...' என, வேண்டுவதை தவிர, அச்சிறுமிக்கு வேறு வழி தெரியவில்லை.

அதன்பின் வந்த நாட்களில், ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட, அவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.

இப்படி ஒரு கொடிய வறுமை தான், எக்காரணம் கொண்டும் உணவை வீணடிக்கக் கூடாது; ஒவ்வொரு பருக்கையும் விலை மதிப்பானது எனும் பாடத்தை அவருக்கு கற்றுக் கொடுத்தது. அவர் நடிகையாக வளர்ந்த பின், மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் இதை உணர்ந்தார். அது...

ஏவி.எம்., தயாரிப்பில் வெளிவந்த படம், நானும் ஒரு பெண்! இது, மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக, அப்படத்தில் நடித்த அனைவருக்கும் மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார், ஏவி.மெய்யப்ப செட்டியார். அதில், மனோரமாவும் கலந்து கொண்டார்.

விருந்தின்போது, ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு நேரெதிரே அமர்ந்திருந்தார், மனோரமா. வகை வகையான உணவு பதார்த்தங்கள், வரிசையாக பரிமாற, எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால், செட்டியாரோ, பரிமாறுபவரிடம் ஒவ்வொரு பதார்த்தத்தையும் தேவைக்கேற்ப மட்டுமே வாங்கினார். இதை, பார்த்துக் கொண்டிருந்தார், மனோரமா.

அனைவரும் விருந்து உண்டு முடித்து பார்த்தால், எல்லாருடைய இலையிலும், நிறைய உணவு வகைகள் மீதமிருந்தன. ஆனால், செட்டியார் இலை மட்டும் அப்போதுதான் போடப்பட்ட இலையை போல அவ்வளவு சுத்தமாக இருந்தது. அந்த இலையில் ஒருவர் சாப்பிட்டார் என்று சத்தியம் செய்தால் கூட, யாரும் நம்ப மாட்டார்கள்; அத்தனை சுத்தமாக இருந்தது.

சாப்பாடு என்பது எத்தனை முக்கியமானது என்பதையும், அதை, விரயம் செய்வது ரொம்ப தவறு என்பதை, தன் செயலின் மூலம், ஏவி.மெய்யப்ப செட்டியார் அனைவருக்கும் உணர்த்தியதுபோல், மனோரமாவிற்கு தோன்றியது.

இது, அவர் மனதில் மிக ஆழமாக பதிந்தது. இதுவே, எக்காரணம் கொண்டும் உணவை வீணடிக்கக் கூடாது என்ற நல்ல குணத்தை அவருக்கு வரவழைத்தது. கடைசி வரை அப்படியே வாழ்ந்து வந்தார் மனோரமா.

அதுமட்டுமல்லாமல், இந்த உணவுதான் வேண்டும் என்ற கட்டாயம் மனோரமாவிற்கு கிடையாது. எங்கு, என்ன மாதிரியான உணவு கிடைக்கிறதோ அதை, மன நிறைவோடு உண்டு, திருப்தி அடையும் மன பக்குவத்தையும் வளர்த்துக் கொண்டார்.

தாய், மகள் என இருவருக்கும் வேலை இல்லை. இந்நிலை நீடித்தால், சோற்றுக்கு என்ன செய்வது... எத்தனை நாள்தான், ஒருவேளை, அதுவும் அரைகுறையாக சாப்பிடுவது... 'அம்மா... இப்படியே வருமானம் இல்லாமப் போனா, நம்ம நிலைமை என்னாகும்?' என்று கேட்டாள், கோபிசாந்தா.

'கவலைப்படாதே... கடவுள் ஏதாவதொரு வழி காட்டுவார்...' என்று சமாதானம் கூறினார், தாய்.

சிறிது நேரம் இருவரும் மவுனமாக இருந்தனர்.

'மீண்டும் பலகார கடைய ஆரம்பிச்சா என்ன?' என்று கேட்டார், அம்மா.

'பலகாரக் கடைய நடத்தித்தானே உனக்கு நோய் வந்துச்சு...' என்று நினைவூட்டினாள், கோபிசாந்தா.

'அதுக்கும், நோய்க்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டாள் அன்னை.

'எப்பவும் அடுப்பு சூட்டில இருந்ததால தானே, உடம்பு சூடாகி, அதிகமா ரத்தப் போக்கு ஆச்சு...' என்றாள் சிறுமி.

'அப்படியா சொல்றே...' என்றவர், சிறிது நேரம் அதைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார். மீண்டும் அதேபோன்ற நோய் வந்தால், தன்னால் நிச்சயமாக தாங்க முடியாது என்று தோன்றியது. அப்படியானால் பிழைப்புக்கு என்னதான் வழி... ஒரு முடிவும் தெரியாமல் இருந்தனர்.

இதனிடையே, பாட்டு பாடும் தன் வழக்கத்தை தொடர்ந்தாள், கோபிசாந்தா. அந்த ஊரில் யார் வீட்டில் மங்கள நிகழ்ச்சி என்றாலும், அங்கே கோபிசாந்தாவின் பாட்டுக் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். இவள் பாட்டை கேட்டு ரசிப்பதற்காகவே, அங்கு, ஒரு கூட்டமே உண்டு. அவர்கள் அனைவரும் கச்சேரியின்போது கண்டிப்பாக ஆஜராகி விடுவர்.

எனினும், பாட்டு பாடுவதற்கு பணம் எதுவும் கிடைக்காது; பாடுவதில் ஆர்வம் அதிகம் என்பதால், தானாகவே முன் வந்து பாடுவாள்.

பள்ளத்துாருக்கு அருகில் உள்ளது, கோட்டையூர். அங்கு, ஏகாதசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த ஆண்டும், ஏகாதசி திருநாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோட்டையூர் சற்று பெரிய ஊர் என்பதால், சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் திருவிழாவை பார்க்க அங்கே கூடுவர். புதிதாக நிறைய கடைகள் முளைத்து இருக்கும். வளையல் கடைகளில் பெண்கள் கூட்டம் மொய்க்கும். குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்வர்.

இப்படி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அந்த விழாவின் போது, செட்டியார் சமுகத்தினர் அனைவரும் இணைந்து, நாடகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நாடகத்தின் பெயர், அந்தமான் காதலி!

இந்நாடகம் தான், அச்சிறுமியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

அக்காலத்தில், பொதுவாக பெண்கள் நாடகங்களில் நடிப்பதில்லை; ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பர்.

அந்தமான் காதலி நாடகத்திலும், கதாநாயகியாக பெண் வேடமிட்டு நடித்தார், ஒரு ஆண். துரதிர்ஷ்டவசமாக, அந்நபருக்கு பாட வராது. அப்போது, நாடகங்களில் பாடல்கள் தான் அதிகம். எனவே, பாடத் தெரிந்தவரே நடிக்க முடியும் என்ற நிலைமை.

இருப்பினும், வேறு வழியின்றி, அந்நபரை அழைத்து வந்திருந்தனர், நாடகக் குழுவினர். இங்கே வந்த பின், அவருக்கு பதிலாக, பாடுவதற்கு யாராவது ஆள் இருக்கின்றனரா என்று தேடி அலைய ஆரம்பித்தனர்.

அப்போது, பள்ளத்துாரை சேர்ந்த செட்டியார்கள், கோபி சாந்தாவை பற்றி நாடக குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.

யாராவது ஆள் கிடைத்தால் போதும் என்ற இக்கட்டான நிலையில் இருந்த அவர்களும், அந்த பெண்ணை அழைத்து வருமாறு கூறினர்.

திருவிழாவை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த கோபி சாந்தாவை, செட்டியார் ஒருவர் வந்து நாடகக் குழுவினர் அழைப்பதாக தெரிவித்தார்.

'எதுக்கு கூப்பிடறாங்க...' என்று குழப்பத்தோடு கேட்டார், ராமமிர்தம்.

'அவங்க நாடகத்தில, பாட்டு பாடறதுக்கு ஆள் வேணுமாம்... கோபிசாந்தா நல்லா பாடுவான்னு சொன்னோம்; உடனே அழைச்சிட்டு வரச்சொன்னாங்க...' என்று கூறினார், அழைத்துப் போக வந்திருந்த செட்டியார்.

இதைக் கேட்டதும், கோபி சாந்தாவிற்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அதுவரை, உள்ளூரில் நடைபெற்ற சிறிய விழாக்களிலேயே பாடியிருந்தாள். இப்போது, மிகப்பெரிய நாடக கம்பெனியில் பாடப் போவதை நினைத்து ஆனந்த கூத்தாடினாள்.

ஆனால்...

தொடரும்.

குன்றில் குமார்

நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.

www.shankarpathippagam@yahoo.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us