தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையில்லாத நடைமுறையை மேற்கொள்ளாதீர்!

சமீபத்தில், என் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டபம், சந்தோஷத்தில் களை கட்டியிருந்தது; எல்லாம் தாலி கட்டும் வரை தான்.

திருமாங்கல்யம் கட்டப்போகும் நேரத்தில், உறவினர் ஒருவர், 'தாலி கட்டும்போது, வெடிப்பதற்கு பேப்பர் வெடி இல்லயா...' என்று கேட்க, அருகிலிருந்த மணப்பெண்ணின் சகோதரர், 'இல்லையே மச்சான்...' என்று அசடு வழிய, 'என்ன மாப்ளே... ஒரே பொண்ணு கல்யாணத்த, 'ஜாம் ஜாம்'ன்னு நடத்த வேண்டாமா...' என்று கொம்பு சீவ, மணப்பெண்ணின் சகோதரர் வீராவேசமாக, 'ஒரு நிமிஷம் மச்சான்...' என்று சொல்லி, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து, மின்னலென பறந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்கவே, எல்லாரும் மணமகளின் சகோதரரை தேட, அவர் வரவில்லை. 'முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி கட்ட வேண்டும்...' என்று மணமகன் வீட்டார் வற்புறுத்தவே, சகோதரர் இல்லாமலேயே திருமணம் முடிவுற்றது.

சற்று நேரத்தில், ரத்தம் வழிய வந்தார், சகோதரர்; அவரை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. காரணம், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதில், விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோரோ பதறியபடி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மாப்பிள்ளையின் தாயாரோ, 'உன் தம்பிக்கு அறிவில்லையா... அக்கா திருமணத்தில், இப்படியா அடிபட்டு வந்து நிற்பது... சகுனமே சரியில்லை...' என, பொறிந்து தள்ள, மணவறையிலேயே அழுது விட்டார், மணமகள்.

மாப்பிள்ளை, தன் தாயாரை கண்டிக்க, 'தாலி கட்டியவுடனே என் மகனை கைக்குள் போட்டுக்கிட்டயா...' என்று மணமகளை பார்த்து மாமியார் கத்த, அவர், 'ஓ'வென அழ, செய்வதறியாது எல்லாரும் குழம்பி நின்றோம்.

திருமண வீட்டிற்கு வந்தோமா, மணமக்களை வாழ்த்தினோமா என்று இல்லாமல், தேவையில்லாததை செய்து, பிரச்னையை ஏற்படுத்தும் இத்தகைய உறவினர்கள், கல்யாணத்துக்கு வரவே வேண்டாம்!

— ப.சரஸ்வதி, மதுரை.

இன்னொரு மொழி கற்றுக் கொள்ளலாமே!

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன்; தோழியின், 25 வயது மகன், மிகவும் சிரத்தையோடு, 'பெங்காலி' மொழியை, ஒரு புத்தகம் மூலம் கற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். அதுபற்றி அவனிடம் விசாரித்தபோது, 'கோல்கட்டாவில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. பெங்காலி தெரிந்தால், அன்றாட பணியை எளிதாக செய்ய முடிவதோடு, பணியாளர்களிடம், அவர்களின் தாய்மொழியான பெங்காலியில் பேசினால், சிறப்பாக வேலை வாங்க முடியும்...' என்று சொன்னான்.

'அந்த மொழியை கற்காதே... இந்த மொழியை கற்காதே...' என, ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு செவி மடுக்காமல், கூடுதலாக, ஒரு மொழியை கற்பது, வாழ்க்கையை மேம்படுத்த உதவும்!

— எம்.முருகலட்சுமி, நெல்லை.

பாடல் பதிவு மட்டுமல்ல; பொது அறிவும் உண்டு!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், 'ஹைதர் காலம் தியாகு பாடல் பதிவகம்' என்ற கடை உள்ளது. எனக்கு நினைவு தெரிந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது, இக்கடை. சுதந்திரம் அடைந்த பின் வந்த சினிமா படப் பாடல்கள், புதிய பாடல் பதிவுகளும் இங்கு உள்ளன. அந்த பதிவகத்தின் முன், இரண்டு கரும்பலகையில், தினமும், பொது அறிவு கேள்விகளுடன், அதற்கான பதிலையும் எழுதி வைத்திருப்பர்.

சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், கேள்வியை மட்டும் எழுதி வைத்து, 'இதற்கு பதில் தெரியணுமா... நாளை...' என்று எழுதி வைத்து விடுவர். முதல் நாள் எழுதும் கேள்விக்கு, மறுநாள், மற்றொரு கரும்பலகையில், அதற்கான பதிலை எழுதி வைத்திருப்பர். இது, படிப்பவரின் ஆவலை துாண்டும் விதத்தில் இருக்கும்.

அப்பதிவகம் செய்யும் இச்சேவை, பள்ளி மாணவ, மாணவியருக்கும், பொதுத் தேர்வு எழுதுவோருக்கும் மிகவும் உதவியாக இருப்பதால், காலை, மாலை நேரங்களில், 'ஹைதர் காலம்' தியாகு பாடல் பதிவகம் முன், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பொது அறிவு தகவல்களை படித்தும், எழுதியும் பயனடைந்து வருகின்றனர்.

பொதுசேவை செய்யும் அப்பதிவக அன்பரை, பலரும் பாராட்டுகின்றனர். தன்னலம் கருதாது, நுாலகத்திற்கு சென்று, பல மணி நேரம் அரிய தகவல்களை திரட்டி வந்து, பொதுநலத்தோடு, இப்பணியை இன்முகத்துடன் செய்து வரும் அப்பதிவக அன்பர் பாராட்டுக்குரியவர் தானே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us