தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (6)

ஆச்சி மனோரமா! (6)

ஆச்சி மனோரமா! (6)


PUBLISHED ON : ஏப் 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யார் மகன்? நாடகத்தில், சிறப்பாக நடித்த மனோரமாவை விடுத்து, 'இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு, வீணை எஸ்.பாலசந்தர் வெள்ளி டம்ளர் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவார்...' என்று அறிவித்ததும், வேதனையில், மனோரமாவின், கண்களில் கண்ணீர் துளிர்த்தது; மவுனமாக விம்மினார். அப்போது, இருக்கையிலிருந்து எழுந்து பேசத் துவங்கினார் பாலசந்தர்...

'நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்மணிக்கு பரிசு கொடுக்குமாறு என்னிடம் வெள்ளி டம்ளர் ஒன்றை தந்திருக்கின்றனர்; ஆனால், உண்மையாக இந்த பரிசை தரவேண்டுமானால், நாடகத்தில் கதாநாயகியாக சிறப்பாக நடித்த மனோரமாவுக்கு தான் தரவேண்டும். நாடகக் குழுவினர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவருக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டதால், வேறு வழியின்றி, இதை, அவருக்கு அளிக்கிறேன்...' என்று கூறி, அந்த பெண்ணிடம் பரிசை கொடுத்தார்.

இது, மனோரமாவிற்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. பரிசு கிடைக்கவில்லை என்றாலும், வீணை பாலசந்தரின் பாராட்டை பெற்றதால், மனதில் இருந்த ரணம் முற்றிலும் ஆறிப்போயிற்று; சந்தோஷக் கடலில் நீந்தினார்.

அத்துடன், நின்று விடாமல், மனோரமாவின் நடிப்பை ரொம்பவே புகழ்ந்து பேசி, சிறப்பு பரிசு ஒன்றை வழங்கி கவுரவித்தார், வீணை பாலசந்தர்.

இந்நிகழ்வு, மனோரமாவின் மனதை விட்டு நீங்கவில்லை. வீணை பாலசந்தர் இதை மறந்து விட்டார். பிற்காலத்தில், உதிரிப்பூக்கள் படத்தின், 200வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. அப்படத்தில் நடித்த மனோரமாவின் மகன் பூபதியின், நடிப்பை புகழ்ந்து பேசி, பரிசு வழங்கினார், வீணை பாலசந்தர்.

தன் மகன், பாலசந்தர் கரங்களால் பரிசை வாங்கும்போது, சித்தன்னவாசலில் தன்னை பாராட்டி, அவர் பரிசு வழங்கியது நினைவிற்கு வந்ததாக உணர்ச்சி பொங்க கூறினார், மனோரமா.

யார் மகன்? நாடகம், மனோரமாவின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின், நிறைய நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு, அவரை தேடி வந்தது.

திருச்சி அருகேயுள்ள, இன்று கல்லக்குடி என்று அழைக்கப்படும், அன்றைய டால்மியாபுரத்திலிருந்து, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை மனோரமாவின் புகழ் ஓங்கி இருந்தது. இப்பகுதிகளில் நடைபெறும் அத்தனை நாடகங்களிலும் மனோரமா தான் கதாநாயகி.

மனோரமாவை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பெருமளவில் ஆவலோடு காத்திருந்தனர். இவர் நடித்த நாடகங்கள் அனைத்துமே வசூலில் சக்கைபோடு போட்டன.

அக்காலத்தில், வட மாநிலத்தில் சுரையா என்ற பிரபலமான நடிகை ஒருவர் இருந்தார். புகழின் உச்சத்தில் இருந்த அவர், இந்தி திரைப்படங்களில் கொடி கட்டி பறந்தார்.

அவரது, உச்சபட்ச புகழுக்கு காரணம், நடிப்பதோடு, பாடும் திறமையும் இருந்தது. வானொலியில் அவரது பாடல் கேட்காத நாளே இருக்காது; அவ்வளவு பிரசித்தம்!

அந்நடிகையை போலவே, பாடிக் கொண்டே நடித்த காரணத்தால், அந்நடிகையோடு மனோரமாவை ஒப்பிட்டு, 'தென்னாட்டு சுரையா மனோரமா...' என்று மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தனர்.

எந்த ஊருக்கு சென்றாலும், அங்குள்ள முக்கியமான இடங்களில், இந்த விளம்பர சுவரொட்டிகளை பார்க்க முடிந்தது.

இம்மாதிரியான செல்வாக்கும், விளம்பரமும் கிடைப்பதற்கு முக்கிய காரணம், யார் மகன்? நாடகத்தில், அவர் கதாநாயகியாக நடித்தது தான். அதை, பிரபல வீணை வித்வான், எஸ்.பாலசந்தர் பாராட்டி, பரிசு வழங்கியதால், அவரது புகழ் இன்னும் கூடுதலாகியது.

யார் மகன்? நாடகத்தில், இவரை கட்டாயப்படுத்தி கதாநாயகியாக நடிக்க வைத்தவர், எலக்ட்ரீஷியன் பால்ராஜ். அவரின் உதவி இல்லையென்றால், மனோரமா என்ற நடிகையே இல்லை என்பதே உண்மை.

மனோரமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு, உறுதியான அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ் மட்டுமே!

பின், நாடகத்தில் இருந்து திரைத் துறைக்கு வந்து, உயர்ந்த இடத்தை பிடித்தார், மனோரமா. துவக்கத்தில், நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர், பின், குணசித்திரம் போன்ற வேறு பல கதாபாத்திரங்களிலும் நடித்து, தன் புகழை மேலும் உயர்த்திக் கொண்டார்.

தமிழகம் முழுவதும் அறியப்பட்ட மாபெரும் நடிகையாகி விட்டார். செல்வாக்கு மட்டுமல்ல, செல்வ வளமும் அவரை தேடி வந்தது. அவர் வாழ்க்கை அமைப்பே முற்றிலும் மாறிப் போயிருந்தது.

ஆனாலும், தன் பழைய வாழ்க்கையை மறந்தது கிடையாது.

யார் மகன்? நாடகம் நடந்து, 30 ஆண்டுகள் கடந்து போயிருந்தன. சென்னையில் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார், மனோரமா.

திரைத்துறை புகைப்பட கலைஞர் நேஷனல் செல்லையா, மனோரமாவை பார்க்க, ஒருநாள் அவர் வீட்டிற்கு வந்தார். அவருடன் வேறு இருவர் வந்திருந்தனர். அவர்களும் சற்று வயதான தோற்றத்துடன் இருந்தனர்.

செல்லையாவை மனோரமாவிற்கு நன்றாக தெரியும்; திரைத் துறையில் இருப்பதால் அவர்கள் நீண்ட நாள் நண்பர்களாகவே இருந்தனர். உடன் வந்த மற்றவர்களை, செல்லையா அவரிடம் அறிமுகம் செய்து வைக்கவில்லை. மனோரமாவும் அவர்களை பற்றி எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், அவசரமாக வேறொரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய பரபரப்பில் இருந்தார்.

எனவே, நேஷனல் செல்லையாவிடம், 'நீங்க என்ன விஷயமா பாக்க வந்துருக்கீங்கன்னு சொன்னா நல்லா இருக்கும்; இன்னொரு இடத்துக்கு போகணும்...' என்றார்.

'நம்ம காரைக்குடியில ஒரு முக்கியமான விழா நடக்கப் போகுது; அந்த விழாவில் நீங்க, 'சீப் கெஸ்ட்'டா கலந்துக்கணும்ன்னு எல்லாரும் விரும்புறாங்க. முடியாதுன்னு மட்டும் மறுக்கக் கூடாது...' என்றார் செல்லையா.

செல்லையா ரொம்பவும் வேண்டியவர்; சிறந்த புகைப்பட கலைஞர். நடிகர் - நடிகையரை புகைப்படங்கள் எடுத்து, அவர்களைப் பற்றி மக்களிடம் விளம்பரம் செய்ய உதவுபவர். அவர் கேட்டு எதையும் மறுக்க முடியாது; பொதுவாக, திரைக் கலைஞர்கள் யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.

ஆனால், மறுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், மனோரமா. ஏனென்றால், அன்றைய தினம், வெளியூர் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் ஆகிவிட்டார். அதை, இனிமேல் ரத்து செய்தால், மிகப்பெரிய தப்பாகி விடும்.

இந்த உண்மையை செல்லையாவிடம் விளக்கிக் கூறி, காரைக்குடி விழாவில் பங்கேற்க முடியாத நிலையை தெரிவித்தார். அவரும், உடன் வந்திருந்த நண்பர்களும் தப்பா நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, 'காரைக்குடி பங்ஷனை வேறொரு தேதிக்கு தள்ளி வைக்க முடியுமா...' என்று கேட்டார்.

'அதுக்கு வாய்ப்பில்லை ஆச்சி... எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு; சொந்த ஊர்க்காரங்க என்கிறதால நீங்க கண்டிப்பா கலந்துப்பீங்கன்னு நெனச்சோம். ஆனா, நீங்க ஏற்கனவே வெளியூர் ஷூட்டிங்கிற்கு ஒப்பந்தம் ஆனது எங்களுக்கு தெரியாது. பரவாயில்ல ஆச்சி... வேறொரு பங்ஷன் நடக்கிறப்ப வந்து கலந்துக்குங்க...' என்றார் செல்லையா.

அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது உண்மையிலேயே மனோரமாவிற்கு வருத்தமாகத்தான் இருந்தது.

அவரோடு வந்திருந்த மற்ற இருவரும், இருக்கையை விட்டு எழுந்தனர். அப்போது அவர்களில் ஒருவர், 'உங்களுக்கு என்னை யார்ன்னு தெரிகிறதா?' என்று கேட்டார்.

தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம்சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில் குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us