PUBLISHED ON : ஏப் 15, 2018

ஆங்கிலம் கற்க, இதுதான் வழியா?
சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன். தோழி வீட்டில் இல்லை; அவளது மகனும், மகளும், 'டிவி'யில் ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தோழி வரும் வரை நானும் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன், இரண்டு முறை, முத்தக் காட்சிகள் வந்தன; எனக்கே சங்கோஜமாக இருந்தது. என்ன நினைத்தானோ, சட்டென எழுந்து போய் விட்டான் அந்த பையன். தோழியின் மகள் மெதுவாக என்னிடம், 'ஆங்கிலம் பேசிப் பழக இதையெல்லாம் வீட்ல பார்க்கச் சொல்லியிருக்காங்க...' என்றாள்.
விடலைப் பருவத்தில் உள்ள அண்ணனும், தங்கையும் சேர்ந்து பார்க்க கூடிய படமா இது... ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேறு எத்தனையோ சேனல்கள் இருக்கின்றனவே... அதை எல்லாம் விட்டு, படுக்கையறைக் காட்சிகள் நிரம்பிய ஆங்கில படங்களைப் பார்ப்பது, குழந்தைகளை தவறான வழிக்கு கொண்டு சென்று விடும். பிள்ளைகள் மீது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என்பதை, சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும்.
— ஜெயலஷ்மி ராமன், திருப்பூர்.
அஞ்சல் துறையின் அசத்தலான சேவை!
சென்ற வாரம், இந்திய அஞ்சல்துறை மூலம், மதுரையிலிருந்து, சென்னைக்கு, பதிவுத் தபாலில் கடிதம் ஒன்று அனுப்பினேன். தபால் தலை கட்டணம், ஐந்து ரூபாய், பதிவுக் கட்டணம், 17ரூபாய் என, 22 ரூபாய் வாங்கினர். இது, தனியார் கூரியர் தபால் கட்டணத்தை விட குறைவானது.
பாராட்டப்பட வேண்டிய மற்றொரு செய்தி, கடிதம், எந்த தேதியில் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை, என் மொபைல் போனிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியது தான். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கூரியர் சேவை செய்யாத ஏற்பாடு இது. அஞ்சல் துறையின் அசத்தலான இச்சேவையை, மனதார பாராட்டுவோம்!
— என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.
சந்தேகம் வேண்டாமே!
காவல் துறையில் பணிபுரிகிறார், என் கணவர். சதா குற்றவாளிகளையே சந்திப்பதால், வீட்டில் உள்ளவர்களையும் சந்தேகமாக பார்க்கும் மனப்பாங்கு அவரிடம் வந்து விட்டது. பையன் ஸ்கூல் விட்டு லேட்டாக வந்தால், 'ஸ்கூலுக்குப் போனாயா அல்லது மலையாளப் படம் பாக்க போனாயா?' என்று விசாரிப்பார்.
என்னிடம், தான் சந்திக்கும் பெண் குற்றவாளிகளைப் பற்றி மணிக்கணக்காகப் பேசி, கடைசியில், 'பொம்பளைங்கள நம்பவே முடியாது...' என்று சொல்லி, என் முகத்தை, உற்றுப் பார்ப்பார்.
தன் வேலையின் தன்மைக்கு ஏற்ப, மனதை மாற்றி, சந்தேக புத்தியால் குடும்ப சந்தோஷத்தை கெடுத்து வருகிறார். பையன் வழி தடுமாறிப் போக, இவரே காரணமாகி விடுவாரோ என பயமாக இருக்கிறது.
சமூகத்தில் ஆயிரம் தவறு நடக்கலாம்; அவை எல்லாம் நம் வீட்டிலும் நடக்கும் என்று குதர்க்க மனப்பான்மையுடன் இருக்கும் ஆண்கள் என்று திருந்துவரோ!
— நிர்மலா ராஜன், விழுப்புரம்.
