PUBLISHED ON : மார் 11, 2018

தமிழ் திரை உலகில், 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, 'ஆச்சி' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர், மனோரமா. திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியில் பிறந்த இவருக்கு, பெற்றோர் சூட்டிய பெயர், கோவிந்தம்மாள்; ஆனால், எல்லாரும் இவரை, கோபிசாந்தா என்றே அழைத்தனர்.
அண்ணாதுரை, கருணாநிதி போன்றோருடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா மற்றும் ஆந்திரா முதல்வராக இருந்த மறைந்த, என்.டி.ராமராவ் என்று, மொத்தம் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர்!
மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஆச்சி, நாடகத் துறையின் மூலமாக, கலைத்துறை எனும் மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்தார். பின், வெள்ளித் திரையில், காமெடி, அம்மா, ஆச்சி, வில்லி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தும், பாடகி அவதாரம் எடுத்தும், தனி முத்திரை பதித்ததுடன், சின்னத் திரையிலும் காலுான்றி, அனைத்து இல்லங்களுக்குள்ளும் நுழைந்து, புகழின் உச்சத்தை தொட்டார்.
நடிப்புத் துறையில், 50 ஆண்டுகளை கடந்து, பொன்விழா கொண்டாடிய இவர், தன், 12வது வயதில், முதன் முதலாக, யார் மகன் என்ற நாடகத்தில் நடித்தார். மேலும், அக்காலத்தில், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த, அந்தமான் கைதி மற்றும் அண்ணாதுரை எழுதிய, வேலைக்காரி போன்ற நாடகங்களிலும் நடித்தார்.
கருணாநிதி எழுதிய, உதயசூரியன் எனும் நாடகத்தில், கருணாநிதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்தார் மனோரமா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவருக்கு, நாடக இயக்குனர், திருவேங்கடம் மற்றும் ஆர்மோனிய கலைஞர், தியாகராஜன் ஆகியோர் தான், 'மனோரமா' எனும் பெயரை சூட்டினர்.
முதன் முதலாக, 1958ல், மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார், கவியரசர் கண்ணதாசன். இதில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார், மனோரமா.
அதன் பின், தொடர்ந்து, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தார். நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் இணைந்து, ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நாகேஷ் - மனோரமா ஜோடியை, திரையில் பார்த்ததுமே, தியேட்டரே சிரிப்பலையால் மூழ்கிவிடும். இவர்களின் காமெடிக்காகவே, திரைப்படங்கள் பிரமாதமாக ஓடியதும் உண்டு. அதிலும், இவருக்கு பெருமை சேர்த்த படமென்றால், தில்லானா மோகனாம்பாள் படத்தை சொல்லலாம். இதில், 'ஜில் ஜில் ரமாமணி' எனும் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு, பெரிதும் வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே, பாடும் திறமை உள்ளவர் என்பதால், திரைப்படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது; பாடிக்கொண்டே நடித்தார்.
மகளே உன் சமர்த்து எனும் திரைப்படத்தில், முதன் முதலாக இவருக்கு பாடும் வாய்ப்பை தந்தார், தயாரிப்பாளர் குமார்.
தாத்தா தாத்தா பிடி கொடு
இந்த தள்ளாத வயசில சடுகுடு...
என்பது தான், மனோரமா பாடிய முதல் சினிமா பாடல்.
அதன் பின், வா வாத்தியாரே, வூட்டாண்டே என்ற பாடல் துவங்கி, டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே; மெட்ராச சுத்திப் பாக்கப் போறேன்... போன்ற பல பாடல்கள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
தமிழ் திரைப்படங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார், மனோரமா.
பக்கம் பக்கமாக வசனம் இருந்தாலும், அவற்றை ஒரே நொடியில் மனப்பாடம் செய்து, தன் ஸ்டைலில் அழகாக பேசி நடிக்கும் திறமை பெற்றவர், மனோரமா.
தமிழ் மொழி மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என்று மொத்தம் ஆறு மொழிப் படங்களில் நடித்த பெருமை மனோரமாவிற்கு உண்டு.
இத்தனை பெருமையும், சிறப்பும் உடைய மனோரமாவின் ஆரம்ப கால வாழ்க்கை மிகுந்த துன்பமும், துயரமும், வறுமையும், ஏழ்மையும் நிறைந்ததாக இருந்தது.
பிற்காலத்தில், ஓர் இன்பமயமான வாழ்வை அவர் அனுபவித்தார் என்றால், அதற்காக, அவர் அனுபவித்த கஷ்டங்கள், துயரங்கள் மிக அதிகம்!
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம்
சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
குன்றில் குமார்
