தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜலதோஷம்... மூக்கடைப்பு, தும்மல், இருமல் என தொந்தரவு அதிகரிக்க, கட்டாய ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது.

அதுவும் ஒரு விதத்தில் பலனளிப்பதாக இருந்தது. பத்திரிகையாளர், சினிமா மற்றும் சின்னத்திரைகளின் மக்கள் தொடர்பாளர் சுரா, மலையாளத்திலிருந்து, தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருந்த மலையாள சிறுகதைகள், தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஒரு நாவல் என, பல நுால்களையும் படிக்க நேரம் கிடைத்தது.

'என் குருநாதர் பாரதியார்' என்ற நுாலை படிக்கும் வாய்ப்பும் அமைந்தது. நுாலை எழுதியவர் ரா.கனகலிங்கம். நுாலில் இருந்து ஒரு பகுதி...

ஒருநாள், பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், 'உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?' என்று கேட்டார். 'தெரியும்...' என்றேன். 'அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய் வருவோம்...' என்றார்.

நான் திடுக்கிட்டுப் போனேன்.

புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்கு தலைவராக விளங்கினார், தம்பலா. சாராயம் மற்றும் கஞ்சா கடைகளை குத்தகை எடுத்து, பொருள் சம்பாதித்தவர். 1906ல் நடைபெற்ற, 'லெமேர்' தேர்தலில் அவர், வாக்காளர்களை பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில், புதுவையில், தம்பலா என்றால், அழுதபிள்ளை வாய் மூடும்.

தம்பலாவின் வீட்டுக்குச் சென்றதும், அவ்வீட்டின் ஒட்டுத் திண்ணை ஒன்றில் உட்கார்ந்தார், பாரதியார். அவரைக் கண்டவுடன் வரவேற்று, தாழ்மையுடன் கும்பிடு போட்டு நின்றார், தம்பலா. தமக்கு எதிரேயிருந்த ஒட்டுத் திண்ணையில் தம்பலாவை உட்காரச் சொல்லி, பாரதியார் எவ்வளவோ வற்புறுத்தியும், கேளாமல், தோளில் போட்டிருந்த துண்டை, தரையில் விரித்து உட்கார்ந்தார், தம்பலா.

'நான் யார் தெரியுமா?' என்று கேட்டார், பாரதியார்.

'தெரியுங்கோ... நீங்க சுதேசிங்கோ...' என்றார், தம்பலா.

'அப்படியானால் நீர் பரதேசியா...' என்று, 'பளிச்'சென்று கேட்டார், பாரதியார்.

கடைசியாக, 'உம்முடைய வீட்டில் வந்து உட்கார்ந்து, உம்மிடம் இரண்டொரு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற அவா இருந்தது. அது, இன்று பூர்த்தியாகி விட்டது. நாங்கள் வருகிறோம்...' என்று எழுந்தார், பாரதியார்.

பாரதியாரை பிரிய மனமில்லாதவர் போல், தம்பலாவும் எங்களுடன் கொஞ்ச துாரம் வந்து, பாரதியாருக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்பினார்.

அப்போது பாரதியார் என்னிடம், 'கனகலிங்கம்... தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டான் பார்த்தாயா... தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும், இம்சிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப்பட்டுத்தான் நான் இவனிடம் சினேகம் செய்ய மனமில்லாமல் இருந்தேன்...' என்று சொன்னார்.

எக்காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கி வைப்பது தவறு என்று கருதினார், பாரதியார். ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ அவர்களுக்கும் கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை!

- பாரதியாரைப் பற்றி இன்னும் பல சுவையான சம்பவங்கள் புத்தகத்தில் இருக்கிறது!

'அரசு அலுவலகர்கள்ட்ட, இப்படி, அப்படி இல்லாம, லஞ்சம் பெருத்துப் போச்சுப்பா...' என, அலுத்துக் கொண்டார், அமீர் பாய்.

'ஏன் ஜி... என்ன விஷயம்?' எனக் கேட்டேன்.

'அரசு அலுவலகத்துல ஒரு வேலை ஆக வேண்டி இருந்தது; குறிப்பிட்ட அதிகாரி தான் அந்த வேலைய முடிச்சுக் குடுக்கணும். அப்ளிக்கேஷனை குடுத்தேன்; அதுல மனுதாரரின் பெயருக்குப் பக்கத்துல, பி.ஏ.,ன்னு அவரது பட்டத்தையும் போட்டிருந்தார். அப்ளிக்கேஷன்ல, பி.ஏ., என்ற பட்டத்தப் பார்த்த அதிகாரி, 'டிகிரி சர்ட்டிபிகேட் எங்கே?' எனக் கேட்டார்; அந்த சர்ட்டிபிகேட் இணைக்கத் தேவையே இல்லை. நான் உடனே, 'அந்த அப்ளிக்கேஷனை குடுங்க; பி.ஏ.,ங்கிற பட்டத்தை அடிச்சுட்டுக் குடுக்கிறேன்...' என்றேன். என்னுடன் வந்தவர், என் கையை லேசாக அழுத்தி, வெளியே வரும்படி சைகை செய்தார்.

'அவருடன் வெளியே வந்தேன்; 'என்னய்யா புரியாத ஆளா இருக்கே... பார்ட்டி, 'விட்டமின் ப' எதிர்பாக்குது...' என்றபடி, ஒரு கவரை எடுத்து, நுாறு ரூபாய் தாள் ஐந்தை உள்ளே வைத்து, அலுவலரிடம் சென்று, 'சார்... சர்ட்டிபிகேட் காப்பி அஞ்சு வச்சிருக்கேன் போதுமா?' எனக் கேட்டதும், கோழிக்குஞ்சை அமுக்கும் பருந்து போல கவரை வாங்கி, 'போதும்... போதும்...' என்றவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்தார். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு...' என, அலுத்துக் கொண்டார்.

இதைக் கேட்ட போது, எப்போதோ படித்த ஜோக் நினைவிற்கு வந்தது... ஒரு சைக்கிளை மடக்கிய போலீஸ்காரர், சைக்கிள் ஓட்டியிடம் லஞ்சம் கேட்கிறார்; சைக்கிள் ஓட்டியோ, 'எல்லாம் சரியாத் தானே இருக்கு... எதற்கு லஞ்சம்?' என, எதிர் கேள்வி போட, 'டயர்ல காத்து கம்மியா இருக்கேப்பா... அதுக்குத்தான்...' என்பார் போலீஸ்காரர்.

- கேலிக் கூத்து!

கடுமையாக உழைப்பவர்களை வியந்து பாராட்டுகிறேன். துடுப்பு போடாமல் படகில் உட்கார்ந்து பயணம் செய்வோரை எனக்குப் பிடிக்காது. உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதைக் காட்டிலும், உள்ளதற்கும் அதிகப்படியாக வேலை செய்வது தான் உற்சாகம். அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் எண்ணிக்கை குறைவாகும்; ஆகவே, லாபம் அதிகமாக இருக்கும். அதிகமாக லாபம் கிடைத்தால், அதிகமாக அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

* முதல் தர மூளை உள்ளவர்களை போற்றுகிறேன். மூளையில்லாதவர்களைக் கொண்டு ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த முடியாது. ஆனால், வெறும் மூளை

மட்டும் போதாது; அறிவிலே நேர்மையும் இருக்க வேண்டும்

* உறவுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவது பிடிக்காது; அதில் வீண் வம்புகள் பெருகும்

* மேலதிகாரியைக் காக்காய்ப் பிடிக்கிறவர்களை வெறுக்கிறேன். ஏனெனில், இந்தப் பேர்வழிகள் தங்கள் கீழே வேலை செய்வோரை சதா கொத்திப் பிடுங்கிக் கொண்டு இருப்பர்

* தனக்குப் பின், பதவியை ஏற்கக் கூடிய தகுதியுள்ளவர்களாகக் கீழே உள்ளவர்களை உருவாக்குகிறவர்களை, போற்றுகிறேன். திறமையற்றவர்களை தன் கீழே அமர்த்தினால் தான், தாங்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கும் நபர்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன். (காங்கிரஸ் தலைமை நினைவுக்கு வந்தது!)

* மற்றவர்களையும் மனிதர்களாக கருதி, மென்மையாக நடந்து கொள்வோரை போற்றுகிறேன். சண்டைக்காரப் பேர்வழிகளை வெறுக்கிறேன். சமாதானமாக வாழ்வதற்குச் சிறந்த வழி ஒளிவு-மறைவு இல்லாமல் இருப்பது தான்.

ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ப்ளேக் சொன்னார்... 'நான், என் நண்பனிடம் சினம் கொண்டேன்; அவனிடம் என் கோபத்தைக் கூறினேன்; சினம் ஒழிந்தது. நான், என் பகைவனிடம் சினம் கொண்டேன். அதைப் பற்றிக் கூறவில்லை; சினம் வளர்ந்தது!' என்று!

- அமெரிக்க கோடீஸ்வரர், டேவிட் ஒகில்வியின் சுயசரிதையை சமீபத்தில் படித்தேன்; அதிலிருந்து சில துளிகள் தான் மேலே படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us