sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நடிப்பு திலகங்கள்!

/

நடிப்பு திலகங்கள்!

நடிப்பு திலகங்கள்!

நடிப்பு திலகங்கள்!


PUBLISHED ON : ஏப் 10, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்லமாய் சிணுங்கிய அலைபேசியின் அழைப்பைக் கேட்ட அட்ஷயா, 'யாருடைய அழைப்பாய் இருக்கும்...' என எண்ணியவாறே, அதை எடுக்கச் சென்றாள்.

அப்போது, ''அட்ஷயா...'' என்ற கணவனின் கோபக் குரல் கேட்டு, அலைபேசி அழைப்பை அலட்சியப்படுத்தி, வேகமாக அவன் அறைக்குள் ஓடினாள்.

அட்ஷயாவின் கணவன் அக் ஷய் ராஜ், இன்றைய தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் ஐந்து இடத்தில் இருப்பவன். எப்படியாவது, முதலிடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற லட்சியக் கனவில் மிதப்பவன்.

''என்னங்க...'' என்றவளிடம், ''அறிவிருக்கா... காலையில, 10:00 மணிக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னேன்ல. இப்ப, 11:00 மணி ஆகுது. டைரக்டர் கிட்ட நான் தலைகுனிஞ்சு நிக்கணும். எல்லாம் உன்னால தான்; காலையில சீக்கிரம் எழுப்பச் சொன்னா... மூதேவி...'' என்று கத்தியபடியே புறப்படத் தயாரானான்.

அவள் நீட்டிய மாதுளை பழச்சாறை வாங்கியவன், ''இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல,'' என்று முணுமுணுத்தான்.

''நாளைக்கு மதுரையில ஷூட்டிங்; இன்னைக்கு ராத்திரி, பிளைட். எல்லாம் தயாரா எடுத்து வை; போன முறை மாதிரி எதையும் மறந்து தொலைச்சிடாதே,'' என்று கண்டிப்புடன் கூறி, காரில் ஏறி புறப்பட்டான்.

அவன் ஷூட்டிங் கிளம்பிய பின் தான், அட்ஷயாவிற்கு, 'அக்கடா' என்று இருந்தது.

இரவு முழுவதும் பார்ட்டி, டிஸ்கொத்தே என்று நண்பர்களுடனும், பெண்களுடனும் கும்மாளம் அடித்து, போதை தலைக்கேற, இரவு தாமதமாக வீட்டிற்கு வருவது, காலையில் எத்தனை முறை எழுப்பினாலும், எழுந்து கொள்ளாமல், அப்புறம், தன்னால் தான் ஷூட்டிங் செல்ல தாமதமாகி விட்டதாக கத்துவது என, அவளுக்கு வழக்கமாகி விட்டது.

சில நேரங்களில், 'இதெல்லாம் ஒரு வாழ்க்கையா...' என்று கூட தோன்றும். ஒருமுறை தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கிறாள்.

ஏராளமான பணம் கொட்டிக் கிடக்கிறது. பீரோ நிறைய புடவைகளும், நகைகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால், மனசு மட்டும் வெறுமையாய் இருக்கிறது.

குழந்தைகளும், அப்பாவின் அரவணைப்பு கிட்டாமல், ஏங்கித் தவிக்கின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் என்பதால், அவர்களின் நண்பர்கள், தங்கள் பெற்றோரைப் பற்றி பேசும்போது, இவர்களுக்கும் அந்த ஏக்கம் ஏற்பட்டு, 'அம்மா... சன்டே, நவீனோட டாடி அவனை, 'தீம் பார்க்' அழைச்சிட்டு போனாராம். அவங்க டாடியோட சேர்ந்து, 'ஜெயின்ட் வீல்'ல சுத்தினானாம். செம த்ரில்லிங்கா இருந்துச்சுன்னு சொன்னான். எங்கள எப்பம்மா டாடி வெளியில கூட்டிட்டு போவார்... டாடியோட சேர்ந்து வெளியில போக ஆசையா இருக்கு...' என்பர்.

ஏதாவது சொல்லி பிள்ளைகளை சமாதானப்படுத்துவாள். என்ன தான் சம்மர் லீவில் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றாலும், உள்ளூரில், தன் தந்தையுடன், சின்னச் சின்ன விஷயங்களில் சந்தோஷம் காணுவதையே பிள்ளைகள் விரும்பினர்.

மீண்டும் அலைபேசி சிணுங்கியது. அதில், 'தீப்தி' என்ற பெயர் மின்னியது.

தீப்தி, நடிகர் நரேஷின் மனைவி. சமீபத்தில் தான், அவர்களுக்கு திருமணம் நடந்தது. அட்ஷயாவின் கல்லூரி தோழியின் தங்கை என்பதால், திருமணத்திற்கு பின் இருவரின் நட்பும் நெருக்கமானது.

''ஹாய் தீப்தி... எப்படி இருக்க?'' என்றாள் அட்ஷயா,

எதிர்முனையில், ''அக்கா...'' என்றவளின் குரலில் கலக்கமும், சோகமும் கலந்திருப்பதை உணர்ந்து, ''என்ன தீப்தி... ஏதாவது பிரச்னையா...'' என்று கேட்டாள்.

''அக்கா... எனக்கு மனசே சரியில்ல; அவர் நடவடிக்கை எனக்கு சுத்தமா பிடிக்கல. யார் யாரோ அவரோட பேசறாங்க. நடுராத்திரியில, போன் வருது. யாருன்னு கேட்டா, 'உனக்கு தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே'ன்னு சொல்றாரு. இங்க இருக்கவே பிடிக்கல; பேசாம எங்க அம்மா வீட்டிற்கு போயிடலாம்ன்னு நினைக்கிறேன்,'' என்றவள், மூக்கை உறிஞ்சி அழ ஆரம்பித்தாள்.

''தீப்தி... எதை எதையோ நினைச்சு மனசப் போட்டு குழப்பிக்காதே... நேர்ல்ல வா பேசுவோம். இதெல்லாம் பெரிய பிரச்னையே இல்ல. புதுசா கல்யாணம் ஆனதால, சில விஷயங்கள் உனக்கு கஷ்டமா இருக்கும். எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதே,'' என்று தேற்றினாள்.

'பாவம்... புதிதாக திருமணம் ஆனவள் என்பதால், இந்தச் சூழல் அவளுக்கு புரியவில்லை. நடிகனின் மனைவி என்ற அந்தஸ்து மட்டும் தான், பிறரின் கண்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கு பின் மறைந்துள்ள அவர்களின் கஷ்டங்கள், இழப்புகள், சோகங்கள் பெரும்பாலும் யார் கண்களுக்கும் புலப்படுவதில்லை.

'கணவனால், குடும்பத்தினருக்கு நேரத்தை ஒதுக்க முடியாது. மனைவிக்கு, தனிமை வாட்டி வதைக்கும். 'என் கணவர்' என்ற உரிமையுடன் சென்றால், பலாப்பழத்தை மொய்க்கும் ஈ கூட்டம் போல, ரசிகர் பட்டாளம் மேலே வந்து விழும். அதையெல்லாம் பார்க்கும் போது, கோபம் வரும்; ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சிரித்தவாறே சமாளிக்க வேண்டும்.

'திரையுலக விழாக்களுக்குச் சென்றால், கணவன் தன்னுடன் பேசாமல், பிற நடிகைகளுடன் பேசுவதைப் பார்க்கும் போது, கண்ணீர் முட்டிக் கொண்டு வரும்; பெரும்பாடுபட்டு கண்ணீரை அடக்க வேண்டும். சில நேரங்களில், யாருடனும் பேச பிடிக்காமல், அமைதியாக இருந்தால், 'எல்லாரோடயும் கலகலப்பா பழகத் தெரியாதா... உன்னை பார்ட்டிக்கு கூட்டிப் போனா, என் மானம் தான் போகுது. பத்திரிகைகாரன் எவனாவது பார்த்தா என்ன நினைப்பான்... அடுத்த நாளே, 'அக் ஷய்குமார் குடும்ப வாழ்க்கையில் விரிசல்'ன்னு, 'கிசுகிசு' எழுதிடுவான்...' என்று எத்தனயோ முறை பல்லை கடித்துள்ளான் அக் ஷய்குமார்.

'இப்படிச் சொல்கிறாரே என்று, அடுத்த முறை எல்லாருடனும், கலகலப்பாக பேசினால், 'பட்டிக்காடு... பட்டிக்காடு... இப்படியா எல்லாரிடமும் வழிஞ்சு பேசுவ... நாகரிகம் தெரியுதா... ஷூட்டிங் போனா ஹீரோயின், 'உங்க மனைவிய வீட்டில எப்படி சமாளிக்கிறீங்க; திறந்த வாயை மூட மாட்டுறாங்களே'ன்னு கேலி பண்றா...' என்பான்.

'இதெல்லாம் புரிந்து, ஒரு நிலைக்கு வர, அஞ்சு வருஷத்துக்கும் மேலாகிருச்சு. இப்போதெல்லாம் குழந்தைகளே உலகமாகி போனதால், சில விஷயங்கள கண்டுகிறதில்ல. இதையெல்லாம் தீப்திக்கு சொல்லி புரிய வைக்கணும்...' என நினைத்துக் கொண்டாள் அட்ஷயா.

மறுநாள், அதிகாலையிலேயே போன் செய்து, தான் வருவதை உறுதி செய்த தீப்தி, 10:00 மணிக்கு கறுப்பு நிற, 'ஆடி' காரில், வந்திறங்கினாள்.

பிள்ளைகள் இருவரும் பள்ளிக்குச் சென்று விட்டதால், வீடு அமைதியாக இருந்தது. பழச்சாறு கொடுத்து உபசரித்தாள்; ஆனால், அவளோ, எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப, முகம் களையிழந்து காணப்பட்டது.

''சொல்லு தீப்தி... என்ன பிரச்னை...'' என்றவுடன், அதுவரை அடங்கிக் கிடந்த கண்ணீர், 'குபுக்'கென வெளிப்பட்டது.

சிறிது நேரம் அழுது, பின், ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், தன்னிடம் அதிக நேரம் செலவழிப்பதில்லை; பிற பெண்களுடன், மொபைலில் பேசிக் கொண்டே இருக்கிறான்; அதிகமாய் சிகரெட் புகைக்கிறான்; மது அருந்துகிறான் என, கணவன் மீது குற்றப் பத்திரிகையை அடுக்கி, ''வீட்டில தனியா இருக்கறதால, பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு,'' என்றாள்.

எல்லாவற்றையும் கேட்டு முடித்தபின், ''இதெல்லாம் ஒண்ணுமேயில்ல... கல்யாணம் ஆன புதுசுல, நானும் உன்னை மாதிரி தான் கண்ணை கசக்கிக்கிட்டு இருந்தேன். எல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரை தான்; அப்புறம், நம்ம கவனம் எல்லாம் குழந்தை மேல திரும்பிடும். இப்படியெல்லாம் நினைச்சு பாக்கவோ, கவலைப்படவோ அப்ப நேரமிருக்காது. அதனால, சீக்கிரமா ஒரு குழந்தைய பெத்துக்கப் பாரு,'' என்றாள் அட்ஷயா.

''என்னக்கா... நான் சீரியஸா பேசுறேன்; நீங்க சாதாரணமா பதில் சொல்றீங்க?''

''தீப்தி... உனக்கு தெரியுமா... நான் ஒருமுறை தற்கொலை செய்துக்க முயற்சி செஞ்சு, விஷத்தைக் கூட முழுங்கிட்டேன்; அப்புறம் எப்படியோ என்னைக் காப்பாத்திட்டாங்க. அந்த சமயத்தில, திலகம் அக்கா தான் எனக்கு நிறைய, 'அட்வைஸ்' செய்தாங்க,'' என்றதும், ''யாரை சொல்றீங்க... நம்பர் ஒன் ஸ்டாரா இருந்தாரே ஜெய்காந்த்... அவரோட மனைவி திலகமா...''

''ஆமா... அவங்களே தான்...அவங்க தான், 'நம்ம புருஷனுங்க எல்லாம், 'மேக் - அப்' போட்டு ஸ்கிரீன்ல தான் நடிக்கிறாங்க; ஆனா, நடிகனோட மனைவிங்கிற கேரக்டரில், நிஜ வாழ்க்கையில, 'மேக் - அப்' போடாம நாம நடிச்சிட்டு இருக்கோம். அப்படி நடிச்சா தான், நம்ம வாழ்க்கை ஓடும். சாதாரண குடும்ப பெண்களுக்கு இருக்கிறத விட, நமக்கு தான் பொறுமையும், விட்டுக் குடுக்கிற தன்மை, சகிப்புத்தன்மை எல்லாமே அதிகமா இருக்கணும். இல்லன்னா எந்த ஒரு நடிகனுக்கும், குடும்பம்ன்னு ஒண்ணு இல்லாமலே போயிடும். இந்தக் கஷ்டம் எல்லாம் கொஞ்ச காலம் தான். அவங்க ஆடி, பாடி, நடிச்சு, ஓய்ந்த பின் நம்மோட தானே இருக்கப் போறாங்க. அதுவரைக்கும் நீ கொஞ்சம் அமைதியா இரு. பிள்ளைகள நல்லபடியா பாத்துக்க; வீட்டில போரடிச்சா, எங்கள மாதிரி நாலு பேரோட வீட்டுக்கு வந்து போ... இல்லன்னா உனக்குத் தெரிஞ்ச ஏதாவது பிசினஸ் செய்; நல்ல புக்ஸ் படி'ன்னு எல்லாம் சொன்னாங்க.

''அவங்களோட கஷ்டத்தையும் சொன்னாங்க. ஜெய்காந்த் சாருக்கு முன்கோபம் அதிகம். அதோட போதையில இருந்தா, தான் என்ன செய்றோம்ன்னு கூட தெரியாது. அதனாலேயே நிறைய பிரச்னைகள். பிரஸ் மீட்டிங்கில் ரிப்போர்ட்டர்களை கண்டபடி பேசிடுவார். அதையெல்லாம் திலகா அக்கா தான் சமாளிப்பாங்க. அதனால தான், ஜெய்காந்த் சார் இன்னைக்கு ஒரு அரசியல் கட்சித் தலைவரா இருக்க முடியுது. அக்கா மட்டும் இல்லன்னா, அவரால முன்னேறி இருக்கவே முடியாது.

''பொது இடங்களில் எத்தனை பிரச்னை வந்தாலும், திலகா அக்கா தான் பேசி சமாளிப்பாங்க. அவங்களோட துக்கங்கள வெளிக்காட்ட மாட்டாங்க. இதுதான் அவங்களோட திறமை. இப்ப புரியுதா... இந்த கஷ்டம் உனக்கு மட்டும் இல்ல; கலைத் துறையில் இருக்கிற எல்லார் வீட்டிலேயும் தான் இருக்கு. திலகா அக்கா மாதிரி, நாமளும் நடிப்புத் திலகங்களா மாறிட்டா, பிரச்னைகளை ஈசியா சமாளிக்கலாம்,'' என்றாள்.

''அது சரிக்கா... சில வாரங்களுக்கு முன், வாரமலர் இதழில் அந்துமணி சார் நம்மள பத்தி எழுதியிருந்தத பாத்தீங்களா...'' என்றாள் தீப்தி.

''என்ன எழுதியிருந்தார் ?''

''கண்களை மறைத்து விடும் குணம் கொண்டது பணமும், புகழும்! தம் கணவரால் பெறும் செல்வமும், அதனால் கிடைக்கும் வசதி வாய்ப்பு, சுகங்கள் போன்ற பலவும், விட்டுக் கொடுக்கும் குணத்தை, மனப்பான்மையை நடிகர்களின் மனைவியருக்கு கொடுத்து விடுகிறதுன்னு எழுதியிருந்தார்.''

''ஓ... அந்த பதில நானும் படிச்சேன். உடனே கோபப்பட்டு, தினமலர் ஆபீசுக்கு போன் போட்டு, அந்துமணி சாரிடம், சண்டை போடுற மூடில் தான், பேசினேன்; ஆனால், அவர் சொன்ன விளக்கம், என்னை அசர வைச்சிருச்சு,'' என்றாள் அட்சயா.

''என்னக்கா சொன்னாரு?''

'மேடம்... உங்களுடைய நிலைமை எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, உண்மைய நான் எழுதினா, உங்களுடைய பலவீனம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்; அப்புறம், அதன் மூலமா, உங்களுக்கு பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. ஏன்னா, தினம் தினம், நீங்கள் அறிமுகம் இல்லாத பல ஆண்களை சந்திப்பீங்க; அவங்க உங்களோட பலவீனத்தை பயன்படுத்தி, உங்கள வீழ்த்த பாப்பாங்க. அதனால, உங்க மனசுலயும், குடும்பத்திலும் குழப்பம் வந்துடக் கூடாதுன்னு தான் அப்படி எழுதினேன். திரைக்கு முன், உங்க கணவன்மார்கள் நடிக்கிறாங்க; ஆனா, அரிதாரம் பூசாமல், குடும்பத்துக்காக நடிக்கிற உங்கள, எவ்வளவு பாராட்டினாலும் தகும்'ன்னு சொன்னாரு,'' என்றாள்.

''அது சரி... இப்ப உன் மனசு தெளிவாகிடுச்சா...'' என்றவளிடம், ''அக்கா... எனக்கு ரொம்ப பசிக்குது; ஏதாவது சாப்பிடுவோமா?'' என்றாள் மலர்ந்த முகத்துடன் தீப்தி!

எஸ்.ஆர்.சாந்தி






      Dinamalar
      Follow us