/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...
/
எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...
PUBLISHED ON : ஏப் 10, 2016

இரு நபர்களுக்குள் பணப் பரிமாற்றம் நடந்தது. கணிசமான தொகையுடன் சென்றவர், சாலையில் பைக்கில் அடிபட்டு இறந்து போனார். பணம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விபத்தின் போது உதவுகிறேன் பேர்வழி என முன் வந்த, முன்பின் தெரியாத ஒருவன் அமுக்கி விட்டான் என்றனர் சிலர். போக்குவரத்துப் போலீசார் கைப்பற்றினர் என்றனர் வேறு சிலர்
மொத்தத்தில் ஆளும் காலி; பணமும் காலி. ஆனால், உயிரை இழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், 'நீங்கள், அவரிடம் பணத்தை தந்தேன் என்று சொன்னது பொய்; நம்பவே முடியாத கட்டுக்கதை...' என்று அடித்துப் பேசினர். பணத்தைக் கொடுத்தவருக்கு பணம் போனதுடன், கெட்ட பெயர் வேறு!
எந்த பணப் பரிமாற்றமும் ஆதாரம் மற்றும் சாட்சியத்துடன் நடைபெற வேண்டும். 'பணம் பெற்றேன்...' என்று கையெழுத்துக் கேட்பது அவசியம் தானா எனக் கொடுப்பவர்களே தயக்கம் காட்டுவதால் வரும் கோளாறு இது!
'என்ன... என் மீது நம்பிக்கை இல்லையா?' என்று வாங்குகிறவர்கள் கேட்கின்றனர்; இதுவும் தவறு.
இப்படிக் கேட்பர் என்று தெரிந்தால், வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாளலாம்.
நான் அறிந்த ஒரு முதலாளி, பிறருக்குத் தரும் தொகைகளான சம்பளம், அன்பளிப்பு மற்றும் கடன் எதுவானாலும் தன் கையால் கொடுக்கவே மாட்டார்; ஊழியர் மூலமாகத் தான் கொடுப்பார். அந்த ஊழியரோ, கையோடு புரோ நோட்டு, வவுச்சருடன் தான் பணத்தை நீட்டுவார்; கையெழுத்துப் போட்டே ஆக வேண்டும். 'எப்ப கொடுத்தீங்க, எவ்வளவு கொடுத்தீங்க, என்னைக்குக் கொடுத்தீங்க?' என்கிற மூன்று கேள்விகளுக்கும், மேற்படி ஒரு கையெழுத்துப் போதும்; அசைக்க முடியாத ஆதாரமாகி விடும்.
தனி மனித வரவு - செலவு என்றால், வீட்டினரை அழைத்து, அவர்கள் கையால் கொடுக்கச் செய்யலாம். உரியவருக்கு நினைவு இல்லாமல் போனாலும், உடன் இருந்தவருக்காவது நினைவு இருக்கும். அவர் நல்ல சாட்சியாகவும் ஆகிவிடுவார். ஒற்றை மனிதராக வரவு - செலவு செய்த நிலையில், வாங்கியவர், 'நானா வாங்கினேன்?' என்று மறுக்கும் போது, கொடுத்தவர் கை பிசைந்து நிற்க வேண்டும் என்பதுடன், ஏமாற்றுப் பேர்வழி என்றோ, ஏமாந்த சோணகிரி என்றோ பெயர் பரவும். இது தேவை தானா?
காசோலை மூலமான வரவு - செலவு என்றால் அது, இன்னமும் பாதுகாப்பு; நீதிமன்றம் வரை எடுபடும்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி வகுப்பு எடுப்பது உண்டு. அப்போது, அவர்களிடம் மறவாமல் சொல்வது என்ன தெரியுமா...
ஒரு மாணவ, மாணவியரை கண்டிக்கவோ, விசாரிக்கவோ நேரும்போது, சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். துறைக்கு அழைத்து விசாரியுங்கள். உடன் ஓர் ஆசிரியர், ஆசிரியை பார்வையாளராக இருக்கட்டும். இதுவே பாதுகாப்பு!
இல்லாவிட்டால், மாணவன் என்றால் ஜாதியைச் சொல்லித் திட்டினார் என்றோ, மாணவி என்றால் கையைப் பிடித்து இழுத்தார் என்றோ அபாண்டம் வரலாம்; கவனம் என்பேன்.
சாவியைக் கொடுத்தேன்; பைலை ஒப்படைத்தேன் என்பதில் ஆரம்பித்து, பெரிய விஷயங்கள் வரை சாட்சியங்கள், மிக முக்கியமானவை; நம்மைக் காப்பாற்ற வல்லவை. சாட்சியம் மற்றும் சான்றுகள் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உரியவை, இத்தகைய களங்களில் மட்டுமே தேவை என பலரும் கருதுகின்றனர்; தவறு!
'வாங்கினதைக் கூடவா ஒருவர் மறப்பார், இதற்கெல்லாமா பொய் சொல்வர்...' என்று நாம் மற்றவர்களைப் பற்றி உயர்வாக மதிப்பிடுகிறோம்.
நம்முடைய மறதிக் குணம், பெருந்தன்மை ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சுயநலமிகள் மிகுந்த உலகில், நம் அணுகுமுறைகள் இனியேனும் மாற வேண்டும்.
இது, பிறரைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் பார்வையல்ல; எது ஒன்றையும் சம்பிரதாயமாக அணுக வேண்டும். முறைப்படி செய்ய வேண்டும் என்ற சரியான நோக்கமே இதன் அடிப்படை!
நம்மிடமிருந்து ஒன்றைப் பெற்றவர்களின் மறதி, அவர்களது சுயநலம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத நெருக்கடி போன்றவை நமக்கெதிரான வலுவான காரணிகளாகத் திரும்பி விட வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா?
எனவே, நம்மால் பிறருக்கு ஏன் தர்மசங்கடம் என்று கருதுகிற உணர்வை, ஓரமாக ஒதுக்கித் தள்ளி, நாம் சங்கடத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற உணர்வோடு, பாதுகாப்பு வளையத்தை நமக்கென உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இழப்புகளையும், அவப்பெயர் மற்றும் ஏமாளிப் பட்டத்தையும் தவிர்ப்பவை சரியான சாட்சியங்கள் தான்; இதை, மனப்பூர்வமாக நம்புங்கள். உங்களை, எல்லா விதத்திலும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!
லேனா தமிழ்வாணன்

