
கே.ரகுபதி, திருவான்மியூர்: சில பெண்கள், ஆண்களை கண்டவுடன் உரத்த குரலில் பேசுகின்றனரே... அதன் காரணம் என்ன?
'ஆண்களின் கவனத்தைக் கவர...' என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்!
கி.ராஜேந்திரகுமார், சைதாப்பேட்டை: குடும்ப கஷ்டம், நிதி நிலை பற்றி குழந்தைகளுக்குத் தெரிவிப்பது சரியா?
தெரிவிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. பள்ளித் தோழன், எதிர் வீடு, அக்கம், பக்கம், உறவு குழந்தைகள் போல சவுகரியங்களை, ஆடம்பரத்தை நம் சக்திக்கு அப்பாற்பட்டு குழந்தைகள் எதிர்பார்ப்பது சகஜம். நிலைமையை நேர்மையாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதேபோல், 'செய்கிறேன்...' என வாக்கு கொடுத்து விட்டால், பின்னர் ஏமாற்றக் கூடாது!
எஸ்.பிரான்சிஸ், அனுப்பானடி: அரசு ஊழியர்கள், அரசு நிறுவனங்களில் பணி புரிகிறவர்கள், முதல் மனைவி இருக்கும் போது, இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால், உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், அரசு சம்பளம் வாங்கும் எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் முதல் அமைச்சர்கள் வரை ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரோடு வாழ்ந்து வருகின்றனரே... 'சட்டம் எல்லாருக்கும் சமம்' என்ற விதி இவர்களுக்கு பொருந்தாதா?
நீங்கள் குறிப்பிடும் ஆசாமிகள், அந்தத் தகுதி பெற, அடிப்படையே ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் தானே! (சட்டம் எல்லாருக்கும் சமம் தான்; ஆனால், முதல் மனைவி புகார் செய்தால் தான், நடவடிக்கை எடுக்க முடியும்.)
ஆர்.யோகமூர்த்தி, திருத்தணி: எந்தெந்த தகுதி உடையவர்கள், அரசியல்வாதியாவதை விரும்புகிறீர்கள்?
நம் நாட்டு கிராமங்களையும், கிராம மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் நன்கு அறிந்தவராகவும், குறுகிய மொழிப்பற்று இல்லாதவராகவும், உலகம் முழுவதும் சுற்றி, உலக அரசியல் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நம் பாரதத்தின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவரை அரசியலில் வரவேற்கிறேன்!
என்.வீரேஷ், சென்னை: அனுபவம் இல்லாமல் செய்யும் தொழில் எது?
சந்தேகமே இல்லாமல் அரசியல் தான்; இதற்கு அனுபவம் வேண்டாம்; ஆனால், லாபம் உண்டு என்று நிரூபித்து வருகின்றனர் நம் அரசியல்வாதிகள்!
கு.அன்வர் அலி, கோவை: வாழ்க்கையில் அடிபட்டு, கஷ்டப்பட்டு பெற்ற அனுபவத்தால், பிறருக்கும் அத்துன்பம் வரக் கூடாது என்ற நல்ல நோக்கில் எடுத்துச் சொல்லும் போது, 'நீ மட்டும் யோக்கியமா?' என்று வார்த்தையை வீசி விடுகின்றனரே...
சிலருக்கு பட்டால் தான் தெரியும்; அனுபவப் பாடம், 'காஸ்ட்லி'யானது என்பதை எடுத்துச் சொல்வதை கடமையாகக் கொண்டு, அத்துடன் விட்டு விட வேண்டும். கடுஞ்சொற்களை சட்டை செய்யக் கூடாது!
எஸ்.ஆரோக்கியசாமி, திருநின்றவூர்: மனிதனின் மாபெரும் சக்தி எது? அந்த சக்தியை ஒவ்வொருவரும் பெற என்ன வழி?
மனிதனை வாழ வைக்கும் மாபெரும் சக்தி நம்பிக்கையே! ஆத்மார்த்தமாக தன் மனதுடன் பேசும் திறமையை கையகப்படுத்துபவரிடம் அந்த சக்தி வந்து சேரும்!

