sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 10, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அது ஒரு மாலை நேரம்...

திருச்சி பெமினா ஓட்டலின், நியூ பிளாக்கில், நீச்சல் குளத்தை பார்த்து அமைந்த அறை...

மதியம், மூக்கு முட்ட, 'வெட்டி' இருந்ததால், 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு...' என, அண்ணாதுரை சொன்னது போல, சுகமாக தூங்கி எழுந்தேன்.

கண்ணாடி ஜன்னலை மறைத்திருந்த திரைச் சீலையை விலக்கி, நீச்சல் குளத்தைப் பார்த்தேன். பளிங்கு போல உடலமைப்பு கொண்ட, 30 - 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நீச்சல் உடையில் நீந்திக் கொண்டிருந்தார். கரையில் நின்றிருந்த அதே வயதுடைய கன்னங்கரேல் நிறத்தில் இருந்த ஆசாமி, அழகியை ரசித்தபடி இருந்தார்.

அந்த ஆசாமியை எங்கோ பார்த்தது நினைவுக்கு வர, உற்று நோக்கினேன்... 'அடடே... நம்ம ஆண்டுரூ...' என, அடையாளம் தெரிந்தது.

பர்முடாஸ் அணிந்து, கழுத்தில் திக்காக தங்க சங்கிலி, பிரஞ்ச் தாடி, காது ஓரம் துவங்கி, பின் மண்டை வரை, இருபுறமும் ஒட்ட மிஷின் கட் செய்து, நடுவில் உள்ள முடியை தட்டையாக வெட்டி விட்டிருந்தான்...

திருச்சி ஆர்.இ.சி.,யில் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்டு, ஊரை விட்டு ஓடி, போதைக்கு அடிமையாகி, பின் திருந்தி, மும்பையில் உள்ள ஒரு பெரிய சோப்பு நிறுவனத்திற்கு தென் மாவட்டத்தில் சோப்பு தயாரித்துக் கொடுக்கிறார்... (என்ன தான் வேண்டியவர், தெரிந்தவர் என்றாலும், ஒரு நிலையை எட்டியபின், 'ர்' போட வேண்டும் அல்லவா!)

இன்டர்காமில் நீச்சல் குள நம்பரை பிரஸ் செய்து, அவரை பேசச் சொன்னேன். லைனில் வந்தவரிடம், 'ஆண்டுரூ... இங்க எங்கே?' என்றேன். பதில் சொல்லாமல் விழித்தவரிடம், 'நான் மணி பேசுறேன்... அப்படியே தலையைத் தூக்கி மூன்றாவது மாடியைப் பார்...' என்றேன்.

பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி பிரகாசம். 'உடை மாற்றி ஒய்ப்புடன் வருகிறேன்...' எனக் கூறி, நீச்சல் அடிக்கும் பெண்மணியை சுட்டிக் காட்டினார்.

சொன்னபடி, அரைமணி நேரத்தில், தன் மனைவியுடன் என் அறைக்கு வந்தார்.

காதல் திருமணம் செய்து கொண்ட கதையைக் கூறி, மனைவியை அறிமுகம் செய்து வைத்தார். மதம் மாற மனைவியை வற்புறுத்தவில்லை என்றும், வீட்டில் அவருக்கென்று இந்து கடவுள் பூஜை அறை உள்ளது என்றும் கூறினார்.

அவரது மனைவி, சிறிது காலம் மும்பையில் உள்ள பெரிய டெலிவிஷன் நிலையம் ஒன்றில், தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்ததாக கூறினார். உடனே பேச்சு, 'டிவி'யைப் பற்றி திரும்பியது. அவரது மனைவி சின்னத்திரை தொடர்கள் பற்றி சாடு சாடு என்று சாடினார். அவர் கூறியது:

சமீப காலமாக சின்னத்திரைக்கும், சினிமாவுக்கும் இடையே யார் பலசாலி என்ற ரீதியிலான மல்யுத்தப் போட்டி நடக்கிறது.

படிப்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமியரின் இயல்பான ஈர்ப்பை, 'காதல்' என்று கண்டுபிடித்து, அந்த இரண்டுங்கெட்டான் வயதில், அவர்கள் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதாக, 'காதல் காவியங்கள்' பல படைத்து, இன்றைய சமூக சீர்கேட்டிற்கு பாதை போட்டுக் கொடுத்தது சினிமா. தாங்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்று, சமீபகாலங்களில் சின்னத்திரைகளில் வெளியாகும் சில சீரியல்கள் காட்டுகின்றன.

வித்தியாசமான தொடர் என்ற முன் குறிப்போடு, புதுமையான கதை, புரட்சிகரமான கருத்து என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும், பெரும்பாலான இந்தி சீரியல்களின் மூலக் கருவே, இளம் தம்பதியர் டைவர்ஸ் செய்து கொள்வது, தனக்கு துரோகம் செய்து வேறொருத்தியுடன் தொடர்பு கொள்ளும் கணவனை பழிவாங்க, தானும் அவ்வாறே நடந்து கொள்வது போன்ற சங்கதிகள் தான். அதை, இங்கே தமிழிலும் இறக்குமதி செய்து, சமூகச் சீர்கேட்டிற்கு பாதை போடும் நோக்கோடு, சில சேனல்கள் களம் இறங்கியுள்ளன.

திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு, அது கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடித்தனமாக இருந்தாலும், கணவனிடமும், உறவினர்களிடமும் சிறு கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் ஏற்படுவது இயற்கையே... ஆனால், அதற்கு விவாகரத்து தான் தீர்வு என்பது போல், காட்டப்படுகிறது.

இதில், என் தோழி ஒருவரின் கதையை விளக்குவதில் தவறில்லை என, நினைக்கிறேன். உயர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள் என் தோழி. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து, தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரியும் அவளை, நல்ல பதவியில் இருக்கும் மத்திய அரசு அதிகாரி ஒருவருக்கு, திருமணம் செய்து கொடுத்தார் அவள் தந்தை.

கணவருடன் மாமியார், மாமனார், திருமணம் ஆகாத நாத்தனார் இவர்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டிய சூழ்நிலையில், ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு விதமான கருத்து வேறுபாடுகள், பிரச்னை ஏற்பட்டு, இறுதியில் கணவனிடம், 'தனிக்குடித்தனம் சென்றே தீர வேண்டும்...' எனக் கட்டாயப்படுத்த, அவர் மறுக்க, பிடிவாதமாக இருந்த தோழி, ஓராண்டுக்குப் பின், 'டைவர்ஸ்' வாங்கி விட்டாள்.

சில மாதங்களுக்குப் பின், அலுவலகத்தில் அவளுடன் பணியாற்றும் திருமணமாகாத சக ஆண் ஊழியர் ஒருவர், என் தோழியை அவளது திருமணத்திற்கு முன்பிருந்தே நேசித்ததாகவும், தன் காதலை அவளிடம் சொல்வதில் ஏற்பட்ட தயக்கத்தால், பேசாமல் இருந்து விட்டதாகவும், விவாகரத்து வாங்கிய இந்த நிலையிலும் அவளைக் காதலிப்பதாகவும், அவள் சம்மதித்தால், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.

எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய குழப்பத்தில் இருந்த தோழி, அவருடைய கருத்திற்கு உடன்பட்டு, தன் குடும்பத்தாரிடம் கூற, 'மகளின் வாழ்க்கை நன்றாக அமைந்தால் சரி' என்ற எண்ணத்தில், அவளது பெற்றோர், எளிமையான முறையில், மகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே அவளது கணவர், ஏற்கனவே அவர் குடியிருந்த வீட்டிற்கு அருகே வசித்த, அவரைவிட வயதில் மூத்த, அரசுத் துறையில் பணியாற்றும் விதவைப் பெண் ஒருவருடன் ரகசியமாக குடும்பம் நடத்துவது தெரிய வர, கொதித்துப் போய், ஆத்திரத்தில் கணவனை தட்டி கேட்க, அவரோ, 'ஒரு வருடம், வேறொருவருடன் குடும்பம் நடத்திவிட்டு வந்த உன்னை நான் ஏற்றுக்கொண்டதைப் போல, இதையும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்...' என்று, 'கூலாக' கூறி இருக்கிறார்.

'அப்படியானால், அவளையே திருமணம் செய்திருக்க வேண்டியது தானே, என் வாழ்க்கையை ஏன் கெடுத்தீர்கள்...' என்று தோழி வெடிக்க, 'அவளுக்கு என் சித்தி வயது, என் வயதில் மகன் இருக்கிறான்... அவளை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும்...' என்று கேட்டதுடன், தான் உயிருக்கு உயிராக தோழியை நேசிப்பதாகவும், அதனால், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என, அவளிடம் கெஞ்சியதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே ஒரு முறை விவாகரத்து வாங்கி விட்டதாலும், இப்போது இரண்டாவது கணவனையும் விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொன்னால், தன் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் இச்சமுதாயம் தன்னை தவறாக கருதுமே என்ற நிர்பந்தத்தில், வேறு வழியின்றி, வெளியுலகுக்கு மட்டும் கணவன் மனைவி போல, விரக்தியுடன் போலியாக வாழ்ந்து வருகிறாள்.

பொருளாதார ரீதியாக தன் குடும்பத்தைச் சாராது, சொந்தக் காலில் நிற்கும் தொழிற்கல்வி படித்த பட்டதாரி பெண்ணுக்கே இந்த நிலை என்றால், படிக்காத பெண்கள் மற்றும் வாழ்க்கையில் பொருளாதார நிலையில் மற்றவரைச் சார்ந்து இருக்கும் பெண்களின் பிரச்னைகள், விவாகரத்தால் மட்டுமே தீர்ந்து விடுமா?

அதற்காக கணவன் என்ன தவறு செய்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் அவனுடனே வாழ்ந்து தீர வேண்டும் என்ற பத்தாம் பசலித்தனமும் பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால், விவாகரத்து என்பது, சேர்ந்து வாழக் கூடிய சாத்தியக்கூறான எல்லா வழிகளும் அடைபட்டு விட்டது, இனி, வேறு வழியில்லை என்ற நிலை வந்தால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கடைசி ஆயுதம் என்பதை, இளம் மனைவியர் மற்றும் பெண்கள் மறந்து விடக் கூடாது.

சின்னத்திரைகளில் புதுமை, புரட்சி, வித்தியாசம் என்ற பெயரில் வெளியாகும் இது போன்ற தொடர்களை, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பெண்கள் ரசிக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது, சமூக, பொருளாதார நிலையை பல கோணங்களிலும் சிந்தித்து, பிரச்னையை ஆக்கப்பூர்வமாக அணுகி, நல்ல முடிவை மேற்கொள்ள முயல வேண்டும்.

சின்னத்திரை கதைகளில் காட்டப்படுவது போல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும், பெண்களின் வாழ்க்கையை கானல் நீராக மாற்றி விடும்.

மொத்தத்தில் பெண்களின் வாழ்வை சீர்குலைக்கத் தூண்டும் இது போன்ற தொடர்களை, பெண்கள் பார்க்காமலிருப்பது உத்தமம் என, இடி, மழை ஓய்ந்தது போல சொல்லி முடித்தார்.

நீங்க என்ன சொல்றீங்க... பெண்களே!






      Dinamalar
      Follow us