sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சாவித்திரி (2)

/

சாவித்திரி (2)

சாவித்திரி (2)

சாவித்திரி (2)


PUBLISHED ON : ஏப் 10, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

சாவித்திரியின் இல்லம், அரண்மனை போன்று அட்டகாசமாக காட்சியளித்தது.

பரபரப்பில்லாமல் காணப்படும் அபிபுல்லா சாலை, அன்று சாவித்திரி இல்லத்தின் பரபரப்பில், தன்னையும் இணைத்து கொண்டது.

வீட்டினுள், ஜெமினி கணேசனின் மனைவியர் பாப்ஜியும், சாவித்திரியும் விருந்தினரை வரவேற்று, உபசரித்தபடி இருந்தனர்.

அங்கே, ஒரேயொரு அறை மட்டும், சற்று வேறுபாட்டுடன் காணப்பட்டது.

திடீர் என கதவு திறக்கப்பட்டதும், அந்த அறையில் இருந்து, தேவதை போல வெளியே வந்தாள் ஓர் இளம்பெண். 16 வயதான அந்த அழகு மங்கைக்கு, மிஸ்ஸியம்மா படத்தில், சாவித்திரி இருந்ததை போன்ற தோற்றம்!

வெளியே திரையுலகின் முதன்மை பெரியவர்கள், அப்பெண்ணை வாழ்த்த போகும் மகிழ்வுக்காக காத்திருந்தனர்.

'சிவாஜியும், அவர் மனைவி கமலம்மாவும், அஞ்சலிதேவியும் வந்து விட்டனர்...' என, ஒருவர் கூற, சாவித்திரியும், பாப்ஜியும் மணப்பெண்ணை சிவாஜியிடம் அழைத்துச் சென்றனர்.

அப்பெண்ணின் மணக்கோலம் கண்டு, தன் மகள் சாந்தி மற்றும் தேன்மொழியை அக்கோலத்தில் கண்ட போது அடைந்த மகிழ்ச்சி சிவாஜிக்கு!

தன் அருகில் வந்த அப்பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதித்தார் சிவாஜி.

சாவித்திரியின் கண்களில் ஆனந்த கண்ணீர்; பாப்ஜியும் தன் கண்ணீரை அடக்க முடியாமல், முந்தானையால் கண்களை ஒற்றினார்.

சிவாஜி முத்தமிட்டு, ஆசீர்வதித்த பெண், சாவித்திரியின், 16 வயது நிரம்பிய மகள் சாமுண்டீசுவரி. முழுப்பெயர், விஜய சாமுண்டீசுவரி!

எச்சூழலிலும், செய்நன்றி மறவாத குணம் கொண்டவர் சாவித்திரி. தனக்கு யாராவது சிறு உதவி செய்தால் கூட, அவர்கள் மலைத்து போகும் அளவில், பெரிய உதவிகளை செய்து அசத்தி விடுவார்.

திரையில் தனக்கு வாழ்வு தந்த, விஜயா புரொடக் ஷன்ஸ் அதிபருக்கு நன்றி சொல்லும் விதமாக, விஜயா என்ற பெயரையும்; ஜெமினி கணேசனின் இஷ்ட தெய்வமான சாமுண்டீசுவரியையும் இணைத்து, தன் மகளுக்கு விஜய சாமுண்டீசுவரி என்ற பெயரை சூட்டியிருந்தார்.

இன்று, சாமுண்டீசுவரிக்கு திருமண நலங்கு விழா; மறுநாள், திருமணம்.

சாவித்திரிக்கு மழை என்றால் கொள்ளை பிரியம். மழை பொழிவதை கண்டு விட்டால், அவரை கையில் பிடிக்க முடியாது. குழந்தையாக மாறி விடுவார்.

தன்னோடு மழையில் நனைந்து, ஆட்டம் போட்ட சாமுண்டீசுவரியை, இன்று மணக்கோலத்தில் காண்பது வியப்பு தானே!

தன் உறவுப் பையனான கோவிந்தராவை, தன் மகளுக்கு மாப்பிள்ளை ஆக்கியிருந்தார் சாவித்திரி.

திட்டமிடுதலில் சாவித்திரியின் ஆற்றல் வியப்புக்குரியது. 'தன் காலத்திற்கு பின், தன் மகளை பாதுகாக்க, சராசரி மனிதநேயமுள்ள மனிதன் போதும்...' என, அவர் கோவிந்தராவை முடிவு செய்த போது, சில எதிர்ப்புகள் கிளம்பின.

ஆனால், சாவித்திரியின் முடிவுக்கு பக்கபலமாய் இருந்து, இத்திருமணத்தை நடத்தியது ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி!

தன் கணவரின் இன்னொரு மனைவியின் மகளையும், தன் மகளாக பாவித்த பாப்ஜியின் தாய்மை, காலம் கடந்தும் பேசப்படும் செய்தி!

வங்கி வேலைக்காக, நெல்லூரில் இருந்து சென்னை வந்தவர் கோவிந்தராவ். சாமுண்டீசுவரியின் முறை மாப்பிள்ளை!

இன்று சாவித்திரியின் குடும்பம் என்ற அடையாளம், ஆலமரமாய் விரிந்து இருக்கிறது என்றால், அதற்கு காரணம், கோவிந்தராவ்.

சாவித்திரி செய்த எத்தனையோ நல்ல விஷயங்களில், கோவிந்தராவை தனக்கு மருமகனாக்கி கொண்டதும் ஒன்று!

திருமண நலங்கு விழா, தடபுடலாக நடைபெற்றது. மறுநாள் திருமணம் என்பதால், சாவித்திரி மற்றும் ஜெமினியின் உறவினர்கள், இரவை, பகலாக்கி கொண்டிருந்தனர்.

கடந்த, டிச., 5, 1973 அன்று காலை, 9:00 மணியிலிருந்து, 10:00 மணிக்குள், சாமுண்டீசுவரி - கோவிந்தராவ் திருமணம் நடைபெற்றது.

தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என, அத்தனை மொழி கலைஞர்களும் வருகை புரிந்திருந்தனர்.

நாகேசுவரராவ், சரோஜாதேவி, காஞ்சனா, கே.ஆர்.விஜயா, எம்.ஆர்.ஆர்.வாசு, வி.நாகையா, கே.பாலாஜி, ஜமுனா, எஸ்.வி.ரங்கராவ், சந்தியா மற்றும் நாகேஷ் என, பட்டியல் நீளமானதாகவே இருந்தது.

தென்னாப்ரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபடியால், சாமுண்டீசுவரி திருமணத்திற்கு ஜெமினியால் வர முடியவில்லை என்று சொல்லப்பட்டது. ஆந்திரா முறைப்படி நடைபெற்ற அத்திருமணத்தில், ஒரு புதுமை பதிவானது.

மணமகன் கையில் பெண்ணை தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்ச்சியில் சாவித்திரியும், பாப்ஜியும் இணைந்து, மகளை தாரை வார்த்துக் கொடுத்தனர்.

'ஒரு பெண்ணை, இரு தாய்கள் இணைந்து, ஒற்றுமையாக தாரை வார்ப்பது, இது தான் முதல் முறை...' என, திருமணத்திற்கு வந்தவர்கள் ரசித்து, பாராட்டிப் பேசினர்.

தன் மகளை உரிய இடத்தில் சேர்த்து விட்டதில் சாவித்திரிக்கு மன நிம்மதி. மணமக்களை அகம் குளிர வாழ்த்திய பின், ஓய்வுக்காக அறைக்குள் சென்றார் சாவித்திரி.

இருக்கையில் அமர்ந்து, சற்று இளைப்பாறியவருக்கு தலைக்கு மேலே ஓடிய மின்விசிறி எழுப்பிய சின்ன ஓசையில், பழைய கால நிகழ்வுகள், தன் சிறகை விரிக்க துவங்கியது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த, ஜெமினி - சாவித்திரி இணைந்து எடுக்கபட்ட புகைப்படமும், அதற்கு வலு சேர்ப்பது போல, சாவித்திரியின் விழிகளில் பட்டது.

அவரது இதழ்கள், மெல்லியதாக, 'ஜெமினி...' என்று உச்சரிக்க, மத்தாப்புக்கள், மனதுக்குள் பூபாளம் மீட்டியது.

காதலை யார் மெல்லினம் என்ற அடைமொழிக்குள் இருக்கை போட வைத்தது! அது வல்லினத்தை விட வலுவானது. சீண்டல், செல்ல சிணுங்கல், சின்ன கோபம், பெரிய அரவணைப்பு என்ற அந்த விழி பேசிய காதலில் தான், எத்தனை வலிமை!

'ஜெமினியோடு தான் கலந்த அந்த நாட்களின் இன்ப நினைவுகள், மறுபடியும் பிறந்தால், நலமாய் இருக்குமோ...' என்ற எண்ணம், சாவித்திரியின் அடிமனதில் ஏற்பட்டது.

இறுமாப்பாய் நடந்த அந்த காலங்களை அழைத்து வந்து, யாராவது பரிசாகத் தர மாட்டார்களா என்ற ஏக்கம் அவர் விழிகளில்!

பெண்களின் மனம், எப்போதும் அன்பை மட்டுமே தேடி பயணிக்கும். அந்த அன்பில் கிடைக்கும் அரவணைப்பு தான், அவர்களின் உலகம்.

சாவித்திரியின் உலகம் ஜெமினி!

— தொடரும்.

- ஞா. செ. இன்பா






      Dinamalar
      Follow us