sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 10, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெற்றோர்களே... எச்சரிக்கை!

என் தோழி, தன், 12 வயது மகளை, விடுமுறைக்கு தங்கை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறாள். ஒரு வாரத்திற்கு பின், வீட்டிற்கு திரும்பியதிலிருந்து யாரிடமும் பேசாமல், பிரமை பிடித்தது போல் இருந்துள்ளாள் சிறுமி. பேய் பிடித்திருக்கும் என்று எண்ணி, அதற்கு பரிகாரம் செய்தும், பயன் இல்லை.

தோழியின் மகளிடம், தனிப்பட்ட முறையில் பேசினேன் வெகு நேரத்திற்கு பின், விடுமுறைக்கு சென்ற இடத்தில், தன் சித்தப்பா, தன்னிடம் தவறான எண்ணத்தோடு அணுகியது பற்றி பயத்துடன் கூறினாள். இதை தன் தாயிடம் கூறினால், பெரிய பிரச்னையாகி விடும் என்று எண்ணி, தன் மனதிலேயே வைத்துள்ளாள்.

அவளுக்கும், என் தோழிக்கும் அறிவுரை கூறினேன். ஒருவாறு தெளிந்த தோழியின் மகள், பழைய நிலைக்கு திரும்பியுள்ளாள்.

பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளை, விடுமுறைக்கு தனியாக உறவினர் வீடுகளுக்கு அனுப்பாதீர்கள். முக்கியமாக, பெண் பிள்ளைகளுக்கு ஆபத்து அதிகம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ!

அத்துடன், பிள்ளைகள் தங்களுடன் பயமில்லாமல் எல்லா விஷயங்களையும் பகிரும் வகையில், பெற்றோர், அவர்களிடம் தோழமையுடன் பழக வேண்டும்.

— ஆர்.தீபா, சென்னை.

டூர் போனா, இதையும் மறக்காதீங்க!

என் நண்பர் சுற்றுலா செல்லும் போதெல்லாம், 'எக்ஸ்டன்ஷன் கார்டு' அதாவது, 'ஜங்ஷன் பாக்ஸ்' ஒன்றையும், தவறாமல் எடுத்து வைப்பார். ஒருமுறை அவ்வாறு எடுத்து வைத்த போது, 'இருக்கிற, 'லக்கேஜ்' போதாதா... இது வேறு இடத்தை அடைச்சுக்கிட்டு...' என்றேன். அதற்கு நண்பர் கூறிய பதில், சிந்திக்க வைத்தது.

'பலர் சேர்ந்து சுற்றுலா செல்லும் போது, தங்கும் அறையில் ஒரேயொரு, 'பிளக் பாயின்ட்' இருந்தால், சிரமமாகிடும். எல்லாரிடமும், மொபைல் போனும், கேமராவும் இருக்கிற நிலையில், ஐந்து ஆறு, 'பிளக் பாயின்ட்'கள் உள்ள, 'எக்ஸ்டன்ஷன் கார்டை' எடுத்து சென்றால், ஒரே நேரத்தில், இரண்டு, மூன்று கேமரா மற்றும் மொபைல் போனை, 'சார்ஜ்' செய்து கொள்ள வசதியாக இருக்கும்; அதனால், நேரமும் மிச்சமாகும்; 'பவர்கட்'டையும் சமாளிக்கலாம்.

'இது, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது போல உதவுவதால், சுற்றுலா செல்லும் போது சிரமம் பார்க்காமல், இதை எடுத்து வைத்து விடுவேன்...' என்றார்.

இது ஊர் சுற்றும் நேரமாச்சே... அப்ப நீங்களும் எடுத்து செல்வீர்கள் தானே!

— ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை.

முதலில் பாதுகாப்பு...

சமீபத்தில், என் நண்பர், தன் குடும்பத்தினரோடு, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்தவர்கள், பின், வாடகைக்கு இரு சைக்கிள்களை எடுத்து, ஒன்றில், கணவன், மனைவியும், மற்றொன்றில், அவர்களது பத்து வயது மகனுமாக மலைப்பாதையில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி சென்றுள்ளனர்.

அப்போது மாலை நேரம் என்பதால், திடீரென சாலையின் நடுவில், நான்கு காட்டெருமைகள் வர, எதிர்பாராமல் அதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த நண்பரும், அவர் மனைவியும் சுதாரித்து, அருகில் இருந்த பாதுகாப்பான இடத்திற்கு, சென்றுள்ளனர். ஆனால், பின்னால், சைக்கிளில் மெதுவாக வந்து கொண்டிருந்த மகனுக்கு, எப்படி எச்சரிக்கை விடுப்பது என்று தெரியாமல், 'டென்ஷன்' ஆகியுள்ளனர். அதற்குள், காட்டெருமைகள் மலைப்பக்கம் ஒதுங்க, இவர்களும் விட்டால் போதும் என்று, திரும்பியுள்ளனர்.

மலைப்பகுதி சுற்றுலா தலங்களில், மாலை நேரங்களில், காட்டு விலங்குகள் சாலைக்கு வருவது, அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு சாதாரண நிகழ்வாக இருக்கலாம்; ஆனால், சுற்றுலா செல்வோருக்கு அது ஆபத்தான விஷயம். அதனால், மாலை, 5:00 மணிக்கு மேல் தனியாக மலைப்பாதையில் செல்வதை தவிர்க்கவும். உள்ளூர் வாசிகளும், இதுபோன்ற விஷயங்களை கூறி, எச்சரிக்கை செய்யலாம்!

— என்.சுப்பிரமணி, அரக்கோணம்.

டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!

சமீபத்தில், நண்பர் ஒருவர், தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஏ.டி.எம்., கார்டு இருப்பதால், செலவுக்கு கொடைக்கானலில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று, கையில் கொஞ்சம் ரொக்க பணத்துடன் காரில் கிளம்பி விட்டனர்.

அங்கோ, சொல்லி வைத்தார் போல, எந்த ஏ.டி.எம்., மிஷினிலும் பணம் இல்லை. இதனால், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், இவரைப் போல சுற்றுலா வந்த இவரது நண்பரின் குடும்பத்தை எதேச்சையாக கண்டதும், விஷயத்தை அவரிடம் கூறியுள்ளார். நண்பரும் சில ஆயிரங்களை கொடுத்து உதவியுள்ளார். பெட்ரோல் போட்டு, மீதமிருந்த சொற்ப பணத்தில் சிக்கனமாக செலவிட்டு, ஊர் திரும்பியுள்ளனர்.

சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து போவதால், செலவுக்கு பணம் எடுக்க எல்லாருமே, ஏ.டி.எம்., மிஷினையே நாடுவர். இதனால், எல்லா நேரமும் மிஷினில் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. தேவையான முன்னேற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், மழைக்காலங்களில், இணையதள வசதி இன்றி, முடங்கிப் போகும் அபாயமும் உண்டு.

வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us