தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்


PUBLISHED ON : செப் 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவாஜி கணேசன் நடித்த படங்களை, அணு அணுவாக ரசிப்பதுடன், அவருடன், 16 படங்களில் இணைந்து நடித்தவர், நடிகர் சிவகுமார். சிவாஜி மற்றும் அவரது, 'சூப்பர் ஹிட்' வெற்றிப் படங்கள் குறித்து, சுவையான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், சிவகுமார்:

சிவாஜி முதன் முதலாக நடித்து, தமிழகத்தை புரட்டி போட்ட படம், பராசக்தி. 60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த, அப்படத்தில் நடிக்கும்போது, சிவாஜிக்கு வயது, 24. அப்படத்துக்கு, தெறிக்கும் வசனம் எழுதி, சரித்திரம் படைத்திட்ட, கருணாநிதிக்கு வயது, 28.

வேலுாரில் நடைபெற்ற ஒரு நாடகத்தில், நுார்ஜஹான் என்ற பெண் வேடத்தில், சிவாஜி நடித்ததை பார்த்தார், பி.ஏ.பெருமாள் என்ற திரைப்பட விநியோகஸ்தர்; அவரை, எப்படியாவது சினிமாவில் நடிக்க வைக்க தீர்மானித்தார். நாடகமாக நடத்தி வந்த பராசக்தி படத்தை, ஏவி.எம்., செட்டியாரோடு இணைந்து, திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார், பெருமாள்.

கடந்த, 1952ம் ஆண்டு, தீபாவளிக்கு, பராசக்தி படம் வெளியாகி, 'சூப்பர் ஹிட்' சாதனை படைத்தது. அடுத்து, மனோகரா என்ற சரித்திர நாடகத்திற்கு, வசனங்களை சிறப்பாக எழுதியிருந்தார், கருணாநிதி. இந்த நாடகத்தையும், திரைப்படமாக எடுக்க முடிவு செய்தனர். 1954ல் வெளியானது, மனோகரா. இதன் இயக்குனர், எல்.வி.பிரசாத். இப்படத்தின் வசனம் பதிவு செய்த, 'ரிக்கார்டு'கள், தமிழகம் முழுவதும் விற்றுத் தீர்ந்து, சாதனை புரிந்தது.

ஜனவரி, 2, 1957ல், 'சிவாஜி நாடக மன்றம்' என்ற கம்பெனியை ஆரம்பித்தார், சிவாஜி. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஒரு நாடகத்தில் நடித்து திரும்பும்போது, கயத்தாறில் இறங்கி, அங்கு துாக்கிலிடப்பட்ட, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, தன்னுடன் வந்த எழுத்தாள நண்பர், சக்தி கிருஷ்ணசுவாமியிடம், 'நீண்ட நாட்களாக, கட்டபொம்மனாக நடிக்க ஆசை...' என்றிருக்கிறார்.

'உங்களுக்காக, கட்டபொம்மன் பற்றி நாடகம் எழுதி தருகிறேன்...' என்று உறுதி அளித்தார், சக்தி.

சேலத்தில் நடைபெற்ற பொருட்காட்சியில், ஆகஸ்ட் 15, 1957ல், சிவாஜியின், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. சிவாஜியின் உடை, நகை, ஆபரணம் மற்றும் நாடகத்திற்கு தேவையான பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டன. அக்காலத்தில், அது மிகப்பெரிய தொகை.

இந்த நாடகத்தை, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் போட்டனர். நடிகர் ராஜ்கபூரின் தந்தையான பிருத்வி ராஜ்கபூர், அசோக்குமார், திலீப்குமார் மற்றும் சுனில் தத் போன்ற இந்தி நடிகர்கள், நாடகத்தை பார்த்து, பிரமித்து போயினர்.

நாடகத்தை பார்த்த, பிரபல பின்னணி பாடகி, லதா மங்கேஷ்கர், 'சாகும் வரை நீ தான் எனக்கு சகோதரன்...' என்று, சிவாஜியிடம் உரிமையாக கூறினார்.

ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி, சாவித்ரி, பத்மினி நடித்த வெற்றிப்படம், அமரதீபம். அப்படத்தின் கதையை, சிவாஜியிடம் சொன்னபோது, 'உங்களுக்கு, 'அட்வான்ஸ்' கொடுக்க, என்னிடம் பணம் இல்லை சார்...' என்றார், ஸ்ரீதர்.

'பரவாயில்லை... படத்தை ஆரம்பியுங்கள்...' என்றார், சிவாஜி.

ஒரு ரூபாய் கூட, 'அட்வான்ஸ்' வாங்காமல், முழு படத்தையும் நடித்து கொடுத்தார்.

சிவாஜி, பெரிய நடிகராகி விட்ட நிலையில், 'பட்சி ராஜா ஸ்டுடியோ' அதிபரும், பெரிய தயாரிப்பாளருமான, ஸ்ரீராமுலு நாயுடு, அவரை சந்தித்தார்.

'நல்ல கதையை, தயார் செய்திருக்கிறோம். கதையை நீங்கள் கேட்டு, ஓ.கே., என்றால், உடனே, பட வேலைகளை ஆரம்பித்து விடலாம்...' என்றார்.

'அண்ணே... இப்போ நான் கொஞ்சம், 'பிசி'யா இருக்கேன். காலை, 7:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, 2:00 மணியிலிருந்து, இரவு, 9:00 மணி வரை, மேலும், ஒரு, 'ஷிப்ட்' என்று, மூன்று கம்பெனி படங்களில் நடிக்கிறேன். அதனாலும், உங்க படத்தை ஒத்துக்க முடியாது...' என்றார்.

'கதையாவது கேளுங்க...' என்றார்.

'வேணாம்ண்ணே, கதை பிடிச்சால், இந்த படத்தை பண்ணாமல் போயிட்டோமேன்னு வருத்தமாக இருக்கும்...' என்றார், சிவாஜி.

ஒரு முறை அல்ல, மூன்று முறை, ஸ்ரீராமுலு நாயுடு, சிவாஜியை சந்தித்து, மீண்டும் வற்புறுத்தினார். பிறகு, எம்.ஜி.ஆரை, 'ஹீரோ' ஆக போட்டு, படமாக்கினர்.

சிவாஜி தவற விட்ட அந்த படம், மலைக்கள்ளன். மாபெரும் வெற்றி பெற்றது; ஆறு மொழிகளில் வெளியானது.

எம்.ஜி.ஆர்., விரும்பியபடி, கருணாநிதியை இந்த படத்திற்கு, வசனம் எழுத வைத்தார், ஸ்ரீராமுலு நாயுடு.

பராசக்தி படம் வெளியாவதற்கு, சில மாதங்கள் முன், மே 1, 1952ல், தன் ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் கமலாவை, சுவாமி மலையில் திருமணம் செய்து கொண்டார், சிவாஜி. கவிஞர் கண்ணதாசன், மாலை எடுத்து கொடுத்தார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - பி.ஏ.பெருமாள், அரங்கண்ணல் மற்றும் நடிகர் சகஸ்ரநாமம் ஆகியோர் முன்னிலையில், சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது. வேட்டியை மடித்துக் கட்டி, சாப்பாடு பரிமாறினார்,

எம்.ஜி.ஆர்., திருமணத்திற்கு மொத்த செலவே, 500 ரூபாய் தான்.

திருச்சியில், எம்.ஆர்.ராதா குழுவினரின் நாடகம் நடைபெற்றது. அதற்கு முன், திருவிதாங்கூர் சகோதரிகளின் நடன நிகழ்ச்சி. திருவிதாங்கூர் சகோதரிகள் என்றால், லலிதா, பத்மினி மற்றும் ராகினி என்ற மூன்று சகோதரிகளை குறிக்கும்.

நடன நிகழ்ச்சியை முடித்து, காரில் ஏறும், பத்மினியிடம், 'உங்களோடு ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்...' என்று, தன் விருப்பத்தைத் தெரிவித்தார், சிவாஜி. ஆனால், ஒரு படம் அல்ல. ஏராளமான படங்களில், பத்மினியோடு ஜோடியாக நடித்து, தமிழ் திரை உலகின் மிக பிரபலமான ஜோடியாக திகழ்ந்தனர்.

இன்னொரு அபாரமான கதை, அப்துல்லா. கதை வசனம், இயக்கம், தயாரிப்பு, நடிகர் சந்திரபாபு. இந்துவாக பிறந்து, முஸ்லிமாக வளர்ந்து, கிறிஸ்தவ பெண்ணை மணந்து கொள்ளும் இளைஞனின் கதை. 3,000 அடி படம் எடுத்து, அதற்கு மேல் எடுக்க முடியாமல் போனது.

இந்த விஷயம், ஏவி.எம்., செட்டியாரின் காதுக்கு எட்டியது. படத்தை தானே தயாரிப்பதாக கூறினார்.

ஏவி.எம்., தயாரிப்பில், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி, ஜெமினி, எம்.ஆர்.ராதா, தேவிகா, சாவித்ரி மற்றும் நாகையா உட்பட, பலர் நடித்த படம், பாவ மன்னிப்பு. 25 வாரங்கள் ஓடிய, மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த, பாவ மன்னிப்பு படத்திற்காக, முதல் முறையாக, புதுமையாக, ராட்சத பலுானில், விளம்பரம் செய்து, பறக்க விட்டனர்.

- சிவாஜி கணேசன் மற்றும் அவர் நடித்த படங்கள் குறித்து, தன் நினைவு பெட்டகத்திலிருந்து அழகாக கூறி முடித்தார், நடிகர் சிவகுமார்.

அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய, சிவாஜிக்கு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில், இமாலய வரவேற்பு அளித்து கவுரவித்தார், எம்.ஜி.ஆர்.,

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், 99வது முறையாக மேடையேற்றப்பட்டது. நாடகத்தின், 'கிளைமாக்ஸ்' காட்சியில், நீண்ட வசனத்தை, உணர்ச்சிப்பூர்வமாக பேசி, இறுதியில், 'துா' என்று துப்ப வேண்டும். அன்று, சிவாஜி, உணர்ச்சிப்பூர்வமாக பேசப் பேச, அவர் வாயிலிருந்து, ரத்தம் கொட்டியது. சிவாஜியின் உடல்நலம் கருதி, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், அத்துடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

பராசக்தி படத்தில் நடிப்பதற்கு, சிவாஜிக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மாதத்திற்கு, 250 ரூபாய். பராசக்தி படம் வெளியாகும் முன்பே, வேறொரு படத்துக்காக நடிகர், என்.எஸ்.கிருஷ்ணன், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து, 'புக்' பண்ணினார்.

எஸ். ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us