sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (1)

/

பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (1)

பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (1)

பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (1)


PUBLISHED ON : ஜன 05, 2025

Google News

PUBLISHED ON : ஜன 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'என் முதல் படம், சௌகார். அந்தப் படத்தின் பெயரே, என் பெயருக்கு முன், பட்டப்பெயராக இணைந்து விட்டது.

'நிஜ வாழ்க்கையில் கல்யாணம் என்றால் என்னவென்று தெரியாத வயதில், என் திருமணம் நடந்தது. என், 18வது வயதில், ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டேன்.

'குடும்பத்தையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டி, படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம். அப்போது என்னிடம், சினிமாவுக்கான கவர்ச்சி இல்லாவிட்டாலும், குடும்பப் பெண்ணாக நடிக்கும் அளவுக்கு முக வெட்டும், உடலமைப்பும் அமைந்திருந்தது. எனவே, எனக்கு, சௌகார் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகும் சந்தர்ப்பம் கிடைத்தது...'

கடந்த, 1988ல், 'பொம்மை' இதழில், செளகார் ஜானகி கூறியது இது.

தமிழின் மிகச்சிறந்த குணச்சித்திர தாரகை! 1960களின் நவரச நாயகி!

வெடுக்கென பேசும் துடுக்கு கேரக்டரையும், நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மாடர்ன் யுவதியையும், சர்வசாதாரணமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும் திறமை கொண்ட நடிகை தான், செளகார் ஜானகி.

பிறந்தது, ஆந்திராவின் ராஜமுந்திரியில். சென்னை, ஆல் இந்தியா ரேடியோவில் துவங்கியது, ஜானகியின் கலைப் பயணம். இயக்குனர் எல்.வி.பிரசாத் மூலம் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகத்துக்கு பின், நடிப்பில் பல உச்சங்களைத் தொட்டவர். 1950களில், துவங்கிய, சௌகார் ஜானகியின் சினிமா பிரவேசம், 2020ல், சந்தானம் நடிப்பில் வந்த, பிஸ்கோத் படத்தில் நிறைவடைந்தது.

அந்தப் படத்தில், சந்தானத்துக்கு, தன்னம்பிக்கை தரும் பாட்டியாக தோன்றி, கலக்கி இருந்தார்.

சினிமாவில் இன்றைய நடிகையர், ஒரு ஆண்டு, நடிகையாக நீடிப்பதே பெரிய விஷயம்.

செளகார் ஜானகியோ, திரையுலகில் தொடர்ந்து, 70 ஆண்டுகள் ஆளுமை செய்வது லேசுப்பட்ட விஷயம் அல்ல. அதற்கு, நடிப்பாற்றலும், தொழில் பக்தியும் இருந்தாலும், அனைவரின் அன்பும், மரியாதையும், திறமையான நடிகை என்ற பெயரும் பெற்றிருக்க வேண்டும்.

திரையுலக நெடும் பயணத்தில், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெமினி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் மற்றும் மம்முட்டி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார்.

அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மற்றும் என்.டி.ராமராவ் ஆகிய, ஐந்து முதல்வர்களின் பேரன்பையும், பாராட்டையும் பெற்றவர்.

கலையுலக வாழ்விலும், நிஜ வாழ்விலும் பல தலைமுறைகள் கடந்து, தமிழ் மற்றும் தெலுங்கு என, பல மொழிகளில், 380க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, 93ம் வயதில் அடியெடுத்து வைத்து, நுாற்றாண்டை நோக்கி நெருங்கும், சௌகார் ஜானகியின் வாழ்வின் சுவையான பதிவுகள் இங்கு...

'இந்தியாவில், பேசும் சினிமா எந்த ஆண்டில் வந்ததோ, அப்போது தான் நான், உலகை காண பிறந்து வந்தேன்...' என்பார், ஜானகி.

ஆம்! தமிழின் முதல் பேசும் படம், காளிதாஸ், அக்., 31, 1931ல் வெளிவந்தது. அதே ஆண்டில், டிசம்பர் 12ம் தேதி, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில், வெங்கோஜிராவ் - சச்சிதேவி தம்பதிக்கு மகளாக பிறந்தார், ஷங்கர மஞ்சு ஜானகி. இதுதான் பெற்றோர் அவருக்கு வைத்த பெயர். அவருடன் பிறந்தவர்கள், ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை.

அந்தக் காலத்தில், பேப்பர் டெக்னாலஜி படித்து, இங்கிலாந்தில், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து, நாடு திரும்பியவர், ஜானகியின் அப்பா.

தொழில் நிமித்தமாக அவருக்கு அடிக்கடி இடமாற்றல் வந்து கொண்டே இருக்கும். சென்னைக்கு குடியேற நேர்ந்ததும் அப்படித்தான்.

அப்போது அவர்கள் குடும்பம், சென்னை தியாகராய நகர், மேற்கு போக் ரோட்டில் வசித்தது. ஜானகியின் ஆரம்பக் கல்வி, சாரதா வித்யாலயாவில் தொடங்கியது.

ஜானகியின், 15வது வயதில், ஒரு திருப்பம் ஏற்பட்டது. சென்னை, ஆல் இந்தியா ரேடியோவில் குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

சுட்டித்தனமும், துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் கொண்ட ஜானகி, அந்த நிகழ்ச்சியில் ஒரு தெலுங்கு பாடல் பாடியும், சுலோகங்கள் சொல்லியும் தன் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் இனிமையான குரல் வளத்திற்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்த வானொலி நிகழ்ச்சியை கேட்ட, பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ஜானகியை அழைத்து, 'உனக்கு நல்ல குரல் வளம் இருக்கு. லட்சணமான முகவெட்டும் இருக்கு. நீ சினிமாவில் நடிக்கிறீயா?' என்று கேட்டதும், அவரும் ஆர்வத்துடன், 'சரி நடிக்கிறேன்...' என்று சொல்லி விட்டார்.

சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பைப் பற்றி வீட்டில் வந்து சொன்னதும், ஜானகியின் முதுகில், 'டின்' கட்டி விட்டனர்.

'ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்துட்டு, உனக்கு சினிமா கேக்குதா?' என்று அடித்தார், அவரது அண்ணன். வீட்டில் கடும் எதிர்ப்பு. அந்த விஷயம் அதோடு முடிந்து விடவில்லை. ஜானகிக்கு கல்யாணம் செய்து வைக்க, அவசர அவசரமாக வரன் தேட ஆரம்பித்து விட்டனர்.

அப்போது, குண்டூரில், ரேடியோ இன்ஜினியராக வேலை பார்த்து வந்த, சீனிவாச ராவ் என்பவருக்கு ஜானகியை மணம் முடித்து வைத்தனர்.

திருமணத்திற்குப் பின், மாமனார் வீட்டுக்கு வந்த மருமகன், அங்கேயே, 'டேரா' போட்டு தங்கி விட்டார். அவருக்கு நிரந்தர வேலை இல்லை. எப்போதாவது வேலை வரும் செய்வார். வருமானமும் பெரிதாக இல்லை.

இந்தச் சூழலில் கல்யாணமான அடுத்த ஆண்டே, ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார், ஜானகி. அந்த குழந்தைக்கு, யாக்ஞப்பிரபா என, பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

அந்தக் காலத்தில் ரேடியோ என்பது, பணக்காரர்கள் வீட்டில் மட்டும் தான் இருந்தது. எனவே, ரேடியோ இன்ஜினியருக்கு போதிய வருமானம் இல்லை. அதனால், அவர்களின் இல்லத்தில் வறுமை புகுந்து பந்தாடியது.

குடும்பத்தின் சுமையை தானே சுமக்க முடிவெடுத்தார், ஜானகி. சினிமாவில் வேலை தேட அனுமதி கேட்டார், கணவரிடம்.

'நம்மைப் போன்றவர்களுக்கு சினிமா சரிப்பட்டு வராது, ஜானகி! பின்னணிப் பாட்டு பாட வாய்ப்பு அமைந்தால் பாடு...' என்றார், கணவர்.

நன்றாக பாடக் கூடியவர் தான், ஜானகி. வானொலியில் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பாடியும், பாராட்டும் பெற்றிருந்தார். அப்போது, தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததையும், திருமணம் செய்து விட்டதையும் விளக்கிச் சொல்லி, 'இப்போது நான் நடிக்க போகலாமா?' என்று கேட்டார், ஜானகி.

அதற்கு அவரது கணவர்...



— தொடரும்.

- சபீதா ஜோசப்







      Dinamalar
      Follow us