/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: வளம் சேர்த்து வாழுவோம்!
/
கவிதைச்சோலை: வளம் சேர்த்து வாழுவோம்!
PUBLISHED ON : ஜன 05, 2025

புதுப்புது சிந்தனைகள்
இப்புத்தாண்டில் பிறக்கட்டும்
நித்தம் வாழ்வு சுகமாய்
எல்லாருக்கும் இருக்கட்டும்!
உழைக்கிற எண்ணமது
உள்ளத்தில் ஒளிரட்டும்
ஒருநாளும் சோர்வின்றி
இளையோர் படை நடக்கட்டும்!
வீர சரித்திரங்கள் எல்லாம்
கூறுவதென்ன கேளுங்கள்
வெற்றி வேண்டுமா
விவேகத்தோடு வாழுங்கள்!
அறுவடை செய்வோன் தமக்கு
உரியவிலை கிடைக்கட்டும்
அதற்கேற்ற சூழலே
நாடெங்கும் நிலவட்டும்!
இருப்பவன் இல்லாதவன்
பேதங்கள் ஒழியட்டும்
எல்லாருக்கும் எல்லாமே
கிடைக்கும் நிலை வரட்டும்!
மார்கழி பனி நாளாய்
மகிழ்ச்சி நிலவட்டும்
வீணான பிடிவாதம்
நம்மை விட்டு விலகட்டும்!
உருவில்லா பொருளுக்காய்
ஒருவருக்கொருவர்
சண்டையேனோ...
கருவிலே பிறந்தோரெல்லாம்
கடவுளின் பிள்ளைகளன்றோ!
நமக்கென்றும் உயர்வு
நாலு நாளில் வந்து விடாது
நாம் நடக்க முனையா விட்டால்
பாதையின் துாரம் குறையாது!
பொறுமையிலா மனிதர் தம்மை
பூமியும் ஏற்றுக் கொள்ளாது
வலிமையின்றி வாழ்ந்திருந்தால்
எளிய எதிரியும் வென்றிடுவான்
வளங்கள் சேர வழிவகுத்து
வாழ்வை நடத்திட வாருங்கள்!
— மு.குமாரசாமி, திருநெல்வேலி.

