PUBLISHED ON : ஜன 19, 2025

'இயக்குனர், 'கட்' சொல்லிய பிறகும் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதைப் பார்த்த தயாரிப்பாளர் நாகிரெட்டியார் வந்து, என்னைச் சமாதானப்படுத்தினார். 'நீ நல்லா நடிக்கணும் என்று தான் இயக்குனர், இப்படிச் சொன்னார். மற்றபடி உன் மனம் புண்படுத்தணும்ன்னு இல்லே...' என்று தேற்றினார்.
'இயக்குனர் எல்.வி.பிரசாத் வந்து, 'அட! இதுக்காகவா அழுற? நான், உன் திறமையை குறைத்து எடை போட்டு சொல்லவில்லை. உன் திறமையை வெளியே கொண்டு வரத் தான்...' என்றார்.
'இரண்டு மணி நேரத்துக்கு பின் தான், என் அழுகை நின்றது. இன்று அதை நினைத்துப் பார்த்தாலும் எனக்கு சிரிப்பு வரும்.
'செளகார் படம் முடிந்து வெளியானது. மாபெரும் வெற்றி பெற்றது. சாதாரண ஜானகியாக இருந்த நான், நடிகை, சௌகார் ஜானகி ஆனேன். படம் வெற்றி. ஆனால் அடுத்தடுத்து வாய்ப்பு வரவில்லை... காரணம்?
'வாழ்க்கை என்பது ஒரு தொடர் நாவல். சோகத்தில் முடியும் நாவல்களும் உண்டு. இன்பத்தில் முடிக்கப்படும் நாவல்களும் உண்டு. இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் நாவல்களும் உண்டு. என் வாழ்க்கையை, மூன்றாவது வகை நாவலுக்கு தான் ஒப்பிட வேண்டும்.
'முதல் ரகத்தில் அது முடியுமோ, இரண்டாவது வகையில் அது முடிக்கப்படுமோ, அது கடவுள் கையில் தான் இருக்கிறது. அதை இப்போதே எப்படி சொல்ல முடியும்!
'என் சிந்தனை எங்கெல்லாமோ இப்போது பறக்கிறது. என் வாழ்நாளின் இளமைப் பருவத்துக்கு பறக்கிறது. அங்கேயே வட்டமிடுகிறது. பின்னர் மீண்டும் மெல்ல மெல்ல நகர்ந்து, என் தற்போதைய வாழ்க்கைக்கு வருகிறது.
'என் மனமோ எல்லாவற்றையும் சொல்லிவிடத் துடிக்கிறது. கையளவு உள்ள இதயத்தில் தான், எத்தனை விஷயங்கள் அடங்கிக் கிடக்கின்றன. எல்லையற்ற கடலை விட, பெரியது இது...'
- 'பொம்மை' பிப்ரவரி 1967 இதழில், செளகார் ஜானகி கூறியது இது.
'விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம், சௌகார். அதன் பின், அந்த நிறுவனம் தயாரித்த படங்களில் நடிக்க, எனக்கு ஏனோ வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனால், அந்த நிறுவனத்தில் கற்றுக் கொண்டவை தான், என் வாழ்வின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்ததாக, இப்போதும் நினைக்கிறேன்.
'முதல் படம் வெற்றி பெற்றும், அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. காரணம், அப்போது நான் ரொம்ப சின்ன பெண்ணாக, மிகவும் மெலிந்தும் இருந்தேன். அதனால், கதாநாயகி வேடத்துக்கு சரியாக இருக்காது என்று நினைத்திருக்கலாம்...' என்கிறார்.
ஒரு நடிகை என்ற வகையில், பட உலகில் முழு அளவில் அவர், 'செட்டில்' ஆகாத நேரம். பட வாய்ப்பு கேட்டு ஜெமினி ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கே ஒரு அறையில், ஜெமினி கணேசன் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் நடிகராகவில்லை. ஜெமினி ஸ்டுடியோவில், 'காஸ்டிங் மேனேஜர்' ஆக இருந்தார்.
ஜானகியை அழைத்து விசாரித்தார்.
'சார், நான் நடிக்க வாய்ப்புத் தேடி வந்திருக்கேன். ஏதாவது வாய்ப்பு இருந்துச்சுன்னா குடுங்க சார்...' என்றார், ஜானகி.
'அதுசரி. என்னம்மா கையிலே குழந்தையெல்லாம்...' என்று கணேசன் கேட்க, 'இது என் குழந்தைங்க. குடும்பக் கஷ்டம் காரணமா சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை. என்னோட புகைப்படங்கள் சில வச்சிருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க, சார்...' என்று கையில் இருந்த புகைப்படங்களை கொடுத்தார்.
அதை வாங்கி வைத்து, ஜானகியின் முகவரி மற்றும் தகவல்கள் கேட்டு, டைரியில் குறித்து, 'சந்தர்ப்பம் வரும்போது சொல்லி அனுப்புகிறேன்...' என்றார், கணேசன்.
குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பினார், ஜானகி.
நடிகர் ஜெமினி கணேசன் பற்றி, அவர் குறிப்பிடும் போது, 'இன்றும் நான், 'அண்ணா' என்று பட உலகில் அழைக்கும் ஒரே மனிதர், ஜெமினி கணேசன் தான். பிற்காலத்தில் அதே கணேசன், நடிகராக வருவார். அவருடன் நடிப்போம் என, அப்போது எங்கள் இருவருக்கும் தெரியாது.
'பல மாதங்களுக்குப் பிறகு, ஜெமினி ஸ்டுடியோவில் இருந்து அழைப்பு வந்தது. ஜெமினி கணேசன் என்னைப் பார்த்து, 'இந்தா பாரும்மா... ஒரு தெலுங்கு படம் எடுக்கிறோம். 'மேக்-அப் டெஸ்ட்' எடுத்துக்கோ...' என்றார்.
'முக்குரு கொடுகுலு என்ற தெலுங்கு படத்தில், என்னை ஒப்பந்தம் செய்தனர். அதே படம் தமிழில், மூன்று பிள்ளைகள் என்ற பெயரில் உருவானது. ஜெமினியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. ஆனால், படப்பிடிப்பு தள்ளிப்போனது.
'பெரிய இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு துவங்கிய நேரம், இரண்டாவது ஆண் குழந்தைக்கு நான், தாயாகி விட்டேன்.
'குழந்தை பிறந்து, 20 நாளான நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். பிரசவ சமயத்தில் எனக்கு போதிய சத்துணவு இல்லாமல், பலகீனமாக இருந்தேன். இருந்தாலும், நடித்தால் தான் வீட்டுச் செலவுக்கே பணம் என்ற சூழ்நிலை. நடிக்க வந்து விட்டேன்...'
இயக்குனரும், நடிகருமான, ஆர்.நாகேந்திர ராவ் இயக்கிய ஜெமினியின், மூன்று பிள்ளைகள் படத்தில் ஒரு கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது.
ஜானகியின் புகைப்படத்தைப் பார்த்த, எஸ்.எஸ்.வாசன், 'மருமகள் வேடத்திற்கு இவள் பொருத்தமானவள்...' என்று தேர்ந்தெடுத்தார்.
அந்தப் படத்தில் நடிக்கும் போது, படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார், ஜானகி.
அன்றைய தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்களின் நலன்களில் எவ்வளவு அக்கறை காட்டினர் என்பதற்கு, இதை ஒரு உதாரணமாக சொல்லலாம்.
இதுகுறித்து செளகார் ஜானகி கூறியதாவது:
மூன்று பிள்ளைகள் படத்தில் நடிக்கும் போது, வீட்டில் சரியானபடி எனக்கு ஆகாரம் கிடைக்கவில்லை. அதே சமயத்தில், இரண்டு குழந்தைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. அதனால், உடல் மிக பலவீனமாகி, ஒருநாள் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த போதே, மயக்கம் அடைந்து விழுந்து விட்டேன்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரே பரபரப்பு. 'என்ன ஆகி விட்டது இந்தப் பெண்ணுக்கு?' என்று தெரியாமல் திணறினர். உடனே, டாக்டர் வரவைக்கப்பட்டார். எனக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின், மருத்துவமனையில் சேர்த்து செலவுகளை அவர்களே பார்த்துக் கொண்டனர்.
பெரிய கம்பெனியில், முதல் பட வாய்ப்பு கிடைத்து, இப்படி சொதப்பி விட்டோமே என, எனக்குள் பயம். அதே வேளையில், 'உன்னை, பாஸ் பார்க்கணுமாம், போய் பாரு...' என்றார், ஜெமினி கணேசன்.
எனக்கு ஒரே உதறல். அப்போது தான் முதல்முறையாக, எஸ்.எஸ்.வாசனை சந்தித்தேன். அவர் என்ன சொல்வாரோ என்ற பதட்டத்துடன், அவரைப் பார்க்க சென்றேன்.
அப்போது...
— தொடரும்.சபீதா ஜோசப்