PUBLISHED ON : பிப் 23, 2025

இயக்குனர் கே.பாலசந்தர், ஜானகி பற்றி கூறியது:
காவியத்தலைவி என்ற பெயரில், தமிழில் திரைக்கதை எழுதி, இயக்கும்படி என்னிடம் கூறினார், ஜானகி. தாய், மகள் இரு வேடத்தில் நடித்தார்.
படத்தின் தயாரிப்பாளர் அவர் தான் என்றாலும், படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதாக இருந்தால், உடனே எனக்கு தகவல் கொடுத்து விடுவார்.
காவியத்தலைவி எனக்கு பிடித்த படம். கணவனையே, மனைவி சுட்டுக் கொல்லும் விஷயம், புதுமையாக இருந்த நேரம் அது.
எம்.ஆர்.ஆர்.வாசுவும் மிக சிறப்பாக நடித்திருந்தார்.
ஜானகி குடும்பத்தில் நிகழ்ந்த சில துக்ககரமான சம்பவங்கள், அவரை பெரிதும் பாதிக்கப்பட்ட போதும், அதை வெளியே காட்டாத அவரது மனோபலம், எத்தனை பேருக்கு இருக்கும்.
வாழ்வில் எத்தனையோ சாதனைகளைக் கண்டு, கூடவே சோதனைகளையும் ஒரு முகமாக தாங்கி, எதிர்நீச்சல் போட்டு, வாழ்ந்து காட்டும் இவரை போன்ற துணிச்சல் மிகுந்த பெண்மணியைக் காண்பது அபூர்வம். பாரதி கண்ட புதுமைப்பெண், இவரைப் போன்றவர்களைப் போல் தான் இருக்க வேண்டும்.
எத்தனையோ பேர் வந்து போகும் திரையுலகில் ஏதோ வந்தோம், போனோம் என்றில்லாமல் மதிப்போடு, மரியாதையோடு வாழ்ந்து வருபவர், இவர்.
ஜானகியிடம் உள்ள மற்றொரு தனி சிறப்பு, அவர் ஆங்கிலம் பேசுவது. அவர், ஆங்கிலம் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். உச்சரிப்பில் உள்ள இனிமை, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசும் திறன். இவை, ஜானகிக்கு கைவந்த கலை. சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் டைரக்ட் செய்த, தில்லுமுல்லு படத்தில், நகைச்சுவை கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் மனமுவந்து ஒப்புக் கொண்டார்.
- இப்படி, ஜானகி பற்றி சொல்லியிருக்கிறார், இயக்குனர் கே.பாலசந்தர்.
சினிமாத் துறையில் மிக நீண்ட காலம் இருந்த முன்னணி நடிகர்களான, திலீப் குமார், தேவ் ஆனந்த், பிரான், அசோக் குமார் மற்றும் நாகேஸ்வரராவ் போன்றவர்களை விட, மிக நீண்ட காலம், 74 ஆண்டுகளாக சினிமா பயணியாக இருப்பவர் என்ற பெருமைக்குரியவர் தான், ஜானகி.
கடந்த, 1961ல், ஜானகி, அவரது கணவர் சீனிவாசராவ் இடையே விவாகரத்து நடந்தது.
ஜானகியம்மாவுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள், யக்ஞபிரபா. அவரது கணவர், உதயபானு. இந்த தம்பதியின் மகள், வைஷ்ணவி அரவிந்த்.
லண்டனில் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக இருந்த, இரண்டாம் மருமகன் திடீரென மரணமடைந்ததும், இரண்டாவது மகள் அம்முலு, குழந்தைகளுடன் தாயிடம் திரும்பி விட்டார். மகளுக்காக தன்னுடைய தியாகராய நகர் வீட்டை ஒதுக்கி கொடுத்தார், ஜானகி. தன் ஒரே மகனுக்கு விமரிசையாகத் திருமணம் செய்து வைக்க, அவர் விரும்பியிருந்தார்.
ஆனால், மகனோ, அமெரிக்காவில் வேலை செய்தபோது, ஒரு குஜராத்தி பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
'ஒரே மகன், 'லவ் மேரேஜ்' செய்து கொண்டு, 'ஹாப்பி'யாக இருக்கிறான். வேறு என்ன வேண்டும் எனக்கு?' என்று மகிழ்ச்சியாக கூறுவதுண்டு.
செல்லப் பேத்தி வைஷ்ணவி, 1989ல், இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜனின், நெத்தியடி படம் மூலம், கதாநாயகியாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து, நாட்டாமை, சந்தனக் காற்று, புலன் விசாரணை, மாநகர காவல், தர்மதுரை, மகாபிரபு, ஜெய்ஹிந்த் மற்றும் வா அருகில் வா என்று, தமிழ் மற்றும் பிற மொழிகளில், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
திருமணமானதும் நடிப்பை நிறுத்திவிட்டார். தற்சமயம், சில நடிகையருக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார், வைஷ்ணவி. ராக்கெட் படத்தில், சிம்ரனுக்கு குரல் கொடுத்தவர், இவர் தான்.
தற்போது, பெங்களூருவில், சகோதரி கிருஷ்ணகுமாரியின் எஸ்டேட்டில் இடம் வாங்கி, வீடு கட்டி வாழ்ந்து வருகிறார், ஜானகி.
வீட்டைச் சுற்றி நிறைய ரோஜா, மல்லி, கனகாம்பரம் ஆகிய மலர் செடிகளை வளர்த்து வருகிறார். பெரும்பாலும், பூக்களை அவரே பறித்து, மாலை கட்டி சாய்பாபாவுக்கு போட்டு மகிழ்வார்.
ஜானகி மீது, ரஜினிக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.
குருநாதர் கே.பாலசந்தர் இயக்கிய முதல் படத்தின், 'ஹீரோயின்' என்பது மட்டுமல்ல, பாலசந்தர் படங்களில், 'வெரைட்டி'யான கதாபாத்திரங்களில் நடித்தவர், சிவாஜிக்கு பொருத்தமான ஜோடி என, பல காரணங்களால், ஜானகியம்மாவை, ரஜினிக்கு மிகவும் பிடிக்கும்.
ரஜினி நடித்த, தீ மற்றும் பாலசந்தரின் இணை இயக்குனர் அமீர் ஜான் இயக்கிய, சிவா படங்களில், ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் என்பதால், அவரை ஒரு அம்மாவைப் போல மதிப்பார்.
ரஜினியின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட காரணமானது, ஜானகி அம்மா வீடு தான்.
தில்லுமுல்லு படத்தின் சில காட்சிகள், ஜானகி அம்மா வீட்டில் படமாக்கப்பட்டது. அங்கு தான் முதல் முறையாக, லதாவை சந்தித்தார், ரஜினி. காதல் மலர்ந்தது.
'ரஜினியுடன் சில படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என்னுடைய மகன் மாதிரி. அவர் பிறந்த நாள், என் பிறந்தநாள் இரண்டும், டிசம்பர் 12 தான்...' என்பார், ஜானகி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என, ஐந்து மொழிகளில், 390 படங்களிலும், சில, 'டிவி' சீரியல்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார், ஜானகி. இருப்பினும், அவருக்குள் ஒரு குறையுண்டு.
'சினிமாவில் எனக்குரிய இடம் கிடைக்காமல் போனதற்கு காரணம், திரை உலகத்தின் கணக்கு தெரியாதது தான். நான் இரண்டே முறை தான் வாய்ப்புகளைத் தேடி போயிருக்கிறேன். முதல் முறை, சௌகார் படத்தில் நடிக்க, இரண்டாவது முறை, ஒளிவிளக்கு படத்திற்காக...' என்ற, ஜானகிக்கு, தற்போதைய தமிழ் சினிமா மீது ஒரு வருத்தம் உண்டு.
'என்ன காரணமோ தமிழ் திரை உலகம் என்னை முழுமையாக மறந்து விட்டது. தெலுங்கு படங்களில், அவ்வப்போது தலை காட்டுவேன்...' என்கிறார்.
தன், கடைசி படத்தில் சுறுசுறுப்பாக நடித்திருந்தார், ஜானகி. அவரைப் பார்க்கும் மற்ற நடிகையர் மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகள் என்ன தெரியுமா?
'உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? அழகின் ரகசியம் என்ன?'
— தொடரும்
1968 - முதல்வர் அண்ணாதுரை கையால் கலை மாமணி விருது பெற்றார்.
1970 - இருகோடுகள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது பெற்றார்.
1984 - பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது.
1985 - மகாநடி சாவித்திரி விருது.
1985 - அரிசோனாவின் வேர்ல்ட் யூனிவர்சிட்டி வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம்.
1987 - சம்சாரம் ஒரு சதுரங்கம் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான, நந்தி விருது ஆந்திரா அரசு வழங்கியது.
- சபீதா ஜோசப்