sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (3)

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (3)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (3)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (3)


PUBLISHED ON : ஆக 18, 2024

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி ஆண்டு விழாவில், நாடகம் ஒன்றில் நடித்ததைப் பார்த்த, ஹொன்னப்ப பாகவதர், 'சினிமாவில் நடிக்க விருப்பமா...' என்று கேட்டார்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால், என் பெற்றோரை பொறுத்தவரை, அவர்களுக்கு, நான் சினிமாவில் நடிப்பதில் சம்மதம் தான்.

அம்மாவின் ஆசைக்காக, முதலில் இரண்டு கன்னட படங்களில் நடித்தேன்.

'இன்னொரு படத்திலும் நடிச்சுடு. அதன்பின் படிக்கலாம்...' என்றார்.

அம்மாவின் ஆசைக்காக தான் நடிக்க ஆரம்பித்தேன்.

நான் நடிகையாகி, நடனம் ஆடும்போது, காலில் பெரிய பெரிய சலங்கைகளை கட்டி ஆடுவேன். பெரிய சலங்கை என்பதால், காலில் குத்தி காயம் ஏற்பட்டு, புண்ணாகி விடும். அப்போதெல்லாம் என் காலை துடைத்து, யுடிகோலன் மற்றும் விளக்கெண்ணெய் எல்லாம் பூசுவார், அப்பா.

ஒருசமயம், அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாறுதல் ஆனது. இந்த செய்தி, என்னை மிகவும் வாட்டியது. கான்வென்ட்டை விட்டு போக வேண்டுமே என்பது தான், என் கவலை.

மறுபடியும், ஹொன்னப்ப பாகவதர் வந்து, காளிதாசன் படத்தில், ஒரு பாடல் காட்சியில் நடிக்க ஏற்பாடு செய்தார்.

'பாடல் காட்சியில் நடிக்க, 'ஸ்கிரீன் டெஸ்ட்' எடுக்க வேண்டும்...' என்றார்.

அப்போது கூட, சினிமாவில் நடிக்கலாம் என்ற யோசனை என்னுள் இல்லை.

கன்னியாஸ்திரீ ஆகும் யோசனையில் இருந்த நான், சினிமா நடிகையாவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அப்போது, எந்தவிதமான முடிவும் எடுக்க தெரியாத வயது அது.

எந்த வழியில் போவது என்று தெரியவில்லை. கடைசியாக, சினிமாவில் நடிப்பது என, பெற்றோர் முடிவுக்கு, நானும் வர வேண்டியதாயிற்று.

அப்பாவுக்கு மாற்றலாகி விட்டதாக, பள்ளியில் சொல்லி, நின்று விட்டேன்.

அதன்பின், பத்திரிகைகளில் வந்த என் புகைப்படங்களை பார்த்து, சிஸ்டர்ஸ் எல்லாரும் ரொம்ப வருத்தப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

கன்னட சினிமாவில், நான் பிரபலமான நேரம் அது.

காளிதாஸ் படத்தில் நடிக்க, சென்னை கிளம்புவதற்கு முன், கோட்டை ஆஞ்சநேய கோவிலுக்கு சென்றோம். பூஜை வேளையில், முன்பு விழுந்ததை போலவே, இந்த முறையும், சுவாமி மேலிருந்து ஒரு பூ விழுந்தது.

கச்சதேவயானி என்ற கன்னட மொழி படத்தில் ஒப்பந்தமானேன்.

அடுத்த படமான, பஞ்சரத்னா படத்திலும், என்னை ஒப்பந்தம் செய்தார், ஹொன்னப்ப பாகவதர். என்ன காரணத்தாலோ அந்த படம் ஆரம்பிப்பது தள்ளிக்கொண்டே போனது.

நான் பிறரது படங்களில் நடிப்பதற்கு, ஹொன்னப்ப பாகவதருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், பெரிய தடையாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தால், கச்சதேவயானி படத்தில், என்னால் நடிக்க முடியாமல் போனது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

அன்று இரவு, எனக்கு ஒரு கனவு வந்தது.

நெற்றி நிறைய விபூதியும், கையில் திரிசூலம் வைத்து, ஒரு சிறுவன் வந்து ஆசிர்வாதம் செய்தான்.

மறுநாள், என் கனவை, அம்மாவிடம் சொன்னதும், சாட்சாத் முருகன் தான் கனவில் வந்து, அருள்பாலித்திருப்பதாக, பரிபூரணமாக நம்பினார்.

'சரோஜா, நீ வேணும்ன்னா பார்த்துகிட்டே இரு, இதுக்கு மேல எல்லாமே நல்லது தான் நடக்கும்...' என்றார், அம்மா.

அதற்கு ஏற்றார் போலவே, மறுநாள், பஞ்சரத்னா படத்திலிருந்து எனக்கு முழு விலக்களித்தார், ஹொன்னப்ப பாகவதர்.

கே.சுப்பிரமணியத்தின், கச்சதேவயானி என்ற கன்னட படத்தில் நடித்தேன். தேவயானி பாத்திரத்தில், தமிழில், டி.ஆர்.ராஜகுமாரி நடித்திருந்தார். படம், மிகவும் பிரபலமாகி இருந்தது.

கன்னடத்தில், இந்த படம் பிரமாதமாக போக வேண்டும் என்றால், டி.ஆர்.ராஜகுமாரி அளவுக்கு, நானும் செய்ய வேண்டும் என்று நினைத்தார், இயக்குனர், கே.சுப்பிரமணியம். என் எண்ணமும் அதுவாகவே இருந்தது. படம் சிறப்பாக அமைய, கன்னட சினிமா உலகம் என்னை ஏற்றுக் கொண்டு விட்டது.

கச்சதேவயானி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, என்னை பார்க்க அந்த தளத்திற்கு வந்தார், நடிகை பத்மினி.

நான் மிக விரும்பிய நடிகை அவர். அப்போது, மிகப்பெரிய நடிகையாக இருந்தவர்.

என்னைப் பார்த்து, 'யார் இந்த பொண்ணு, நன்றாக இருக்கிறாளே...' என்று, என் முகவாய் கட்டையை பிடித்து கேட்டபோது, எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அன்றைக்கு ஆரம்பித்த நட்பு, அதன்பின், அவருக்கு நெருங்கிய தோழியானேன். பெங்களூரு வந்தால், என் வீட்டில் தான் தங்குவார்.

நான் அமெரிக்கா போனால், அவர் வீட்டிற்கு செல்வேன். அந்த அளவிற்கு நெருங்கிய நட்பு எங்களுக்குள் இருந்தது.

சென்னை அடையாறு பகுதியில், நாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு அருகிலேயே, சினி யூனிட்டும் தங்கியிருந்தது.

அப்போதெல்லாம் யூனிட் என்பது, ஒரு குடும்பம் மாதிரி.

அடுத்த நாள் எனக்கு, 'ஸ்கிரீன் டெஸ்ட்!'

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று, உருக்கமுடன் வேண்டி, வாகினி ஸ்டுடியோ சென்றோம்.

அங்கே, எனக்கு, 'மேக் - அப்' போடும் போதே, 'இந்த பெண், பத்மினி மாதிரியே இருக்கிறாளே...' என்றார், இயக்குனர் எஸ்.ராமநாதன்.

'மேக் - அப்' டெஸ்டில் வெற்றி பெற்றது போல் உணர்ந்தேன்.

காளிதாஸ் படத்தில், காளிதாசின் மனைவியாக நடிக்க, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இந்த சமயத்தில் தான், ராமநாதனிடமிருந்து அந்த வேட்டு வந்தது.

'இந்த பெண்ணின் வலது கண்ணில் ஒரு மச்சம் உள்ளது. இது, 'குளோஸ் - அப்'பில் எடுப்பாக தெரிகிறது. ஆபரேஷன் மூலம் அகற்றி விடலாம்...' என்றார்.

நான் அழத் துவங்கினேன்.

'என்ன இது, படத்தில் நடிக்க வா என்று சொல்லிவிட்டு, இப்போது ஆபரேஷன் என்கின்றனரே...' என்று கவலைப்பட்டார், அம்மா.

அப்போது அங்கு வந்தார், சீதாராம சாஸ்திரி. அவரிடம், அம்மா இந்த விஷயத்தை சொல்ல, 'இல்லம்மா, விளையாட்டுக்கு அப்படி சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

'உன் மகள் கண்ணில் உள்ள மச்சம் அவருக்கு தெரியாமலேயே இருந்து, மற்றவர்களின் கண்ணிற்கு தெரிந்தால், அது அதிர்ஷ்டம். அதுபற்றி அதிகமாக மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளாதே...' என்று, ஆறுதல் கூறினார். ஆனாலும், எனக்குள் குழப்பமாக இருந்தது.

— தொடரும்

நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்






      Dinamalar
      Follow us