
முதலீடு தேவையில்லை!
என் பக்கத்து வீட்டுக்காரர் மகன், பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ளான். மேற்படிப்பு படிக்க விருப்பமில்லாமல், ஏதாவது வேலைக்குப் போக வேண்டுமென விரும்பினான்.
அவனுடைய சுய முயற்சியில், சில இடங்களில் வேலைக்குப் போனாலும், அதில் அவனுக்கு திருப்தி இல்லாமல், சில மாதங்களிலேயே நின்று விடுவான்.
சொந்தமாக தொழில் செய்ய விரும்பினாலும், பொருளாதார ரீதியில் உதவும், குடும்பச் சூழ்நிலை இல்லை.
அவன் அப்பா, பக்கவாதத்தில் படுத்த படுக்கையாகி விட, அம்மாவின் இட்லி கடை வியாபாரத்தில் தான் குடும்பமே நடந்து வந்தது.
இந்நிலையில், பைசா முதலீடு இல்லாமல், பக்கத்து கிராமங்களில், கொத்தனார், சித்தாள், கரும்பு வெட்டுதல், நடவு நடுதல், களை பறிக்கும் போன்ற வேலை செய்வோர் என, பலரிடமும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டான்.
கமிஷன் அடிப்படையில், தேவைப்படுவோருக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு, முன்னேறி வருகிறான்.
நிதானமாக யோசித்தால், முயற்சியை மூலதனமாக்கி முன்னேறலாம் என்பதை நிரூபித்து வரும் அவனை, அனைவருமே பாராட்டுகின்றனர்!
— மு.ஆதினி, சேலம்.
ராயல் சல்ரூட்!
நான், காவல்துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்று, தனியார் நிறுவனத்தில், குறை தீர்க்கும் அதிகாரியாக பணிபுரிகிறேன். அலுவலகத்தில், சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும்.
சட்டையில் அணியும் தேசிய கொடியை காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்று, இருந்து விட்டேன். காலை, 7:00 - 10:00 மணி வரை, பத்துக்கும் மேற்பட்ட கடைகளில், 'கொடி இருக்கா...' என்று, தேடி தேடி அலைந்தும், கிடைக்கவில்லை.
'பான்பராக், குட்கா, ஹான்ஸ், கூல் லிப் போன்ற பொருட்களை கடைகளில் விற்பர். தேசிய கொடியை யார் விற்க போகின்றனர் தம்பி...' என்றனர்.
என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊர் காவல் படை நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்ன இடத்தில் பாட்டி ஒருவரின் பெட்டிக்கடையில் கிடைத்தது. பணம் கொடுத்தேன்.
'வேண்டாம் தம்பி, தேசிய கொடிக்கு காசு வாங்க மாட்டேன். தேச உணர்வோடு வாங்கும் உங்களிடம், காசு வாங்குவது சரியல்ல...' என்றார்.
மனதில் ஒருபுறம், கொடி கிடைத்த மகிழ்ச்சி. மறுபுறம், தேசிய கொடியை கூட வாங்கி விற்காத வியாபாரிகளை நினைத்து, வேதனைப் பட்டேன்.
இத்தனைக்கும் பள்ளி அருகிலேயே தான் அதிகம் தேடினேன்; கொடி கிடைக்கவில்லை. 'இந்த நாளை மறக்க முடியாது...' என்று சொல்லி, அந்த பாட்டிக்கும் சேர்த்து, ராயல் சல்யூட் அடித்தேன்.
— தே.மாதவராஜ், கோவை.
செய்யும் தொழிலே தெய்வம்!
சமீபத்தில், கடைத்தெரு ஒன்றில், வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்த, பைக்கின் முன்புறம், புத்தர் பட ஸ்டிக்கரும், அதன் மேல், 'தினக்கூலி' என்று எழுதப்பட்டு இருப்பதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்தேன்.
வண்டியின் உரிமையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளும் ஆவலில், அங்கேயே காத்திருந்தேன். சிறிது நேரத்தில், அந்த பைக்கை எடுக்க வந்தார், இளைஞர் ஒருவர்.
அவரிடம், 'டாக்டர், வக்கீல், போலீஸ் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டிய வாகனங்களைத்தான் பார்த்துள்ளேன். ஆனால், நீங்கள், எந்தவித தயக்கமும் இல்லாமல், 'தினக்கூலி' என்று எழுதி இருக்கிறீர்களே... ஏன்?' என்று கேட்டேன்.
'இதிலென்ன சார் கவுரவம்... நான் செய்யும் தொழில் இது; இதுதான் என்னை வாழ வைக்கிறது. என் மொபைல் எண்ணையும் பக்கவாட்டில் எழுதி இருக்கிறேன். பலருக்கு என் உழைப்பு, அடுக்கடுக்காக தேவைப்படுகிறது. எனக்கும், இடைவிடாமல், வேலை கிடைக்கிறது.
'செய்யும் வேலைக்கு உரிய கூலியை பெற்று, குடும்பத்தையும் காப்பாற்றி, பலரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறேன். செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்கிறேன். எனவே, 'தினக்கூலி' என, போட்டுக் கொள்வதில், எனக்கு எந்த சங்கடமும் இல்லை; மாறாக பெருமை கொள்கிறேன்...' என்றார்.
அவரது தெளிவான விளக்கத்தைக் கேட்டு, இதை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, மனதில் தீர்மானித்தேன்.
— கோவி. திருநாயகம், கடலுார்-
பெற்றோரை சிறை வைக்காதீர்!.
எங்கள் வீட்டில் வாட்டர் பைப் லைன் பழுதாகி விட்டதால், நண்பர் ஒருவர் மூலம், பிளம்பரை வரவழைத்தோம்.
அறுபது வயது மதிக்கத்தக்கவரிடம், பழுது குறித்து கூறியதும், 'மடமட'வென பழுதை சரி செய்தார்.
அவரிடம் இருந்த சுறுசுறுப்பு மற்றும் தொழில் நுட்பத்தைக்கண்டு வியந்து, 'எங்கிருந்து வருகிறீர்கள்...' என, கேட்டோம்.
அவர், பெங்களூரிலிருந்து வந்ததாக கூறினார்.
'பெங்களூரில் வேலை நடக்கிறதா...' என, கேட்டோம்.
'என் மகன் வீட்டிற்கு போய் இருந்தோம். தனியார் நிறுவனத்தில் நல்ல பணியில் இருக்கிறான். 'நீங்க வேலைக்கு செல்ல வேண்டாம்...' என கூறி, எங்களை பெங்களூருக்கு அழைத்தான். நானும், மனைவியும் பெங்களூரு சென்றோம்.
'வீட்டிலிருந்து வெளியே போனால், 'தாத்தா வயதான காலத்தில் வெளியே போகாதீங்க. ஒரு இடத்தில் போய் அமருங்கள்...' என்று கூறுவர், பேரன் - பேத்திகள்.
'வயதாகி விட்டதே, மூலையில் இருக்க சொல்கின்றனரே என்ற தாழ்வு மனப்பான்மையால், தன்னம்பிக்கை குறைய துவங்கியது. நாட்கள் செல்ல செல்ல மன அழுத்தம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உருவாகின.
'இனிமேலும் இங்கு அடைந்திருந்தால், உடல் கெட்டு விடும் என எண்ணி, சொந்த ஊருக்கே வந்து விட்டோம். இங்கே வந்து பழைய வேலையை தொடர்கிறேன். முன்பு போல் சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும், மன தைரியமும் வந்து விட்டது.
'நான் வேலைக்கு செல்வதால் மனைவியும் அதிகாலை எழுந்து, வாசல் தெளித்து, சமைத்து, அக்கம் பக்கத்தினரோடு அன்பு பாராட்டி மகிழ்கிறாள். இதனால், அவளும் ஆரோக்கியமாக இருக்கிறாள்...' என்றார்.
தாங்கள் சம்பாதிப்பதே போதும் என்று, பெற்றோர் செய்து வரும் வேலையை செய்ய விடாமல் தடுப்பது, பெற்றோரை சிறை வைப்பதற்கு சமம். இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கை கெட்டு, குறுகிய காலத்திலேயே உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பெற்றோரின் மனம் அறிந்து, பிள்ளைகள் செயல்பட வேண்டும்!
ப.சிதம்பரமணி, கோவை.

