/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (7)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (7)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (7)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (7)
PUBLISHED ON : செப் 15, 2024

பி.சுசீலா பாடிய எல்லா பாடல்களும், எனக்கு பிடிக்கும். அவரது குரல், என் குரலை பிரதிபலிப்பது போல் இருக்கும். சுசீலாம்மாவுக்கும் அதே உணர்வு தான். சென்னை வந்தால், அவரை சந்திக்காமல் இருக்க மாட்டேன். பெங்களூரு வந்தால், அவரும் என்னை சந்திக்காமல் திரும்ப மாட்டார். அப்படியொரு நட்பு எங்களுடையது.
பெரிய இடத்து பெண் படத்தில், சுசீலா எனக்காக பாடிய பாடல், 'ரகசியம் பரம ரகசியம் அது நமக்குள் இருப்பது அவசியம்...' இந்த பாடலை நான் தான் பாடி இருக்கிறேனோ என்று, பலரும் நினைத்து விட்டனர்.
பணக்கார குடும்பம் படத்தில், சுசீலா எனக்காகவும், டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆருக்காக, 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?' என்ற பாடலின் படப்பிடிப்பு, காலை, 7:00 மணிக்கு துவங்கி, பிற்பகல், 1:00 மணிக்குள் முடிந்து விட்டது. அன்றைய திட்டமிடல் அப்படி.
மழையின் பின்னணியில், அப்படி குறைந்த அவகாசத்தில், படப்பிடிப்பை முடிப்பதென்பது சாதாரணமா?
இந்தப் பாடலுக்காக மழையில் நனைந்து நடித்து, பிற்பகல், 2:00 மணிக்கு, புதிய பறவை படத்தில், சிவாஜியுடன் நடிக்கச் சென்றேன். அதற்காக, பணக்கார குடும்பம் ஒப்பனையைக் கலைத்து, புதிய பறவை படத்தில் நடிக்க, ஒப்பனையை மாற்றி, வேறு உடையணிந்து செல்வதற்குள், 2:30 மணியாகி விட்டது.
அங்கு, எனக்கு முன்பே காத்திருந்தார், சிவாஜி. எப்போதுமே படப்பிடிப்பில் அவர் முதல் ஆளாக தான் வந்து நிற்பார். நான் வேறு படப்பிடிப்பிலிருந்து வருகிறேன் என்று தெரிந்தும், வேண்டுமென்றே, 'ஏன் லேட்?' என்றார்.
'உங்களுடைய உடை, 'மேக் - அப்' பிரச்னையில்லை. எங்களுக்கு, உடை, சிகையலங்காரம், 'மேக் - அப்' எல்லாம் முடிவதற்கு நிறைய நேரம் எடுக்கும்...' என்றேன்.
அவர், சிரித்துக் கொண்டே எழுந்து, நடிக்க தயாரானார். சிவாஜியிடம் எனக்கு இருந்த ஒரே பயம், நான் பேசும் தமிழில் குறை காண்பாரோ என்பது தான். ஆனால், அதை அவர் பொருட்படுத்த மாட்டார்.
புதிய பறவை படம் உருவான நேரத்தில், நான் ஒரே நாளில், இரண்டு, மூன்று படப்பிடிப்புகளில் பங்கேற்கும் அளவில் நேர நெருக்கடி. அதனால், என்னை சிரமப் படுத்தாமல், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம், 'கால்ஷீட்' ஒதுக்கி தந்தால் போதும் என கேட்டு, என் படப்பிடிப்பு விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டார், சிவாஜியின் தம்பி சண்முகம்.
என் உடல்வாகு எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்களின் படப்பிடிப்புகளில் தொடர்ந்து கலந்து கொள்வேன். இதனால், இரவு வரை படப்பிடிப்பு நடக்கும்.
துாக்கம் குறைவு, சாப்பாடும் அளவோடு, நேரத்தில் சாப்பிட்டு விடுவேன். இதனால், என் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போனது. இதன் காரணமாக, சீரான உடல் வாகால், எனக்கு எந்த உடையும் பொருந்தி போனது.
நான் பொதுவாக, எவரிடமும் சண்டை போட மாட்டேன். யாராவது சண்டை போட்டாலும் அதைப் பார்க்க பிடிக்காது. அதனாலேயே அடிதடி சண்டைப் படங்கள் பார்ப்பதென்றாலே யோசிப்பேன்.
எம்.ஜி.ஆர்., படங்கள் எல்லாவற்றிலும் சண்டைக் காட்சிகள் இருக்கும். அந்தக் காட்சிகளில் நானும் இருந்தால், என் சம்பந்தப்பட்ட காட்சிகளை தனியாக படமாக்கி, என்னை முதலிலேயே அனுப்பி விடுவர். சண்டைக்காட்சி படப்பிடிப்பை நான் விரும்புவதில்லை என, எம்.ஜி.ஆருக்கு தெரியும்.
எவ்வளவு கோபம் வந்தாலும்,எம்.ஜி.ஆரிடமிருந்து தவறாக ஒரு சொல்லோ, வார்த்தையோ வராது. தவறு செய்தவர்களை, நான்கு பேர் மத்தியில் கண்டிக்க, தண்டிக்க மாட்டார். அப்படிப்பட்டவர்களின் தோள் மீது கையை போட்டு, ஒப்பனை அறைக்கு அழைத்து செல்வார். என்ன சொல்வாரோ, ஏது செய்வாரோ அறையிலிருந்து வெளியே வரும்போது, இருவரும் சிரித்த முகத்துடன் இருப்பர்.
எம்.ஜி.ஆரை, சினிமா உலகில், சின்னவர் என்று அழைப்பர். அவரது அண்ணன், வயதில் பெரியவர் என்பதால், பெரியவர் என்றழைப்பர். நானும், எம்.ஜி.ஆரை, சின்னவர் என்று தான் அழைப்பேன். அவர், தமிழக முதல்வரான பின்பும், அப்படித்தான் அழைத்தேன். மற்றவர்களுக்கு அவர் முதல்வர், சி.எம்., என்றாலும், எனக்கு அவர், சின்னவர் தான்.
ஜெயலலிதாவின் அம்மா இறந்தபோது, அவரை சந்தித்து ஆறுதல் சொன்னேன். அது ஜெயலலிதாவின் மனதை லேசாக்கியது.
'என் அக்கா உடனிருந்து ஆறுதல் சொன்னது போல் உணர்கிறேன்...' என்றார்.
என் கணவர் இறந்தபோது, அவர், எனக்கு ஆறுதல் கூறி தைரியமூட்டினார்.
ஜெயலலிதா, 1996 தேர்தலில் தோற்றபோது, நான், இந்திரா தோற்ற உதாரணம் கூறி, 'இந்திரா திரும்ப ஜெயித்தது போல நீங்களும் ஜெயிப்பீர்கள்...' என்றேன்.
இதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்தார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே ஏழ்மையானவர்கள் நிறைந்த பகுதியில், கல்லுாரி ஒன்று அமைந்தால் நல்லது என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை, முதல்வராக இருந்த சமயம் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதை உடனே ஏற்று, நிறைவேற்றினார்.
அதன்படி கல்லுாரி துவங்கியதும், அங்கு என்னை அழைத்து, நன்றி கூறினார்.
சினிமா உலகில் நடிக்க வந்ததிலிருந்து, ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, சித்தி வித்யாவதி, அவருடைய பாட்டி உட்பட அனைவரையும் எனக்குத் தெரியும். நல்ல பழக்கமுண்டு.
ஜெயலலிதா மறைந்த செய்தி அறிந்து, சென்னை வர முயன்றேன். அப்போது, விமானத்தில் வந்தால் தாமதமாகி விடும் என்று, ஹெலிகாப்டரில் வந்து சென்றேன். என் உடன் பிறந்தவர் மறைந்தது போன்று உணர்ந்தேன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என, இவர்களின் அடுத்தகட்ட நாயகராக வந்தவர், ஜெய்சங்கர். அவருடன், குழந்தையும் தெய்வமும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், 'கால்ஷீட்' பிரச்னை காரணமாக, என்னால் அதை ஏற்க இயலவில்லை.
எம்.ஜி.ஆருடன், ஒரு தாய் மக்கள் படத்தில் நான், அவருக்கு ஜோடியாகவும், இன்னொரு நாயகன் வேடத்தில், ஜெய்சங்கர் நடித்து சில காட்சிகள் படமாகி நின்று போனது. பின்னர், அந்த வேடங்களில் முத்துராமனும், ஜெயலலிதாவும் நடித்தனர்; கதையிலும் மாற்றம் செய்யப்பட்டது.
மலையாள படத்தில் தான் நடிக்காததற்கு காரணம்...
— தொடரும்
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததால், என்னால் சரியாக உறங்க முடிந்ததில்லை. அதனால், ஸ்டூடியோக்களில் படப்பிடிப்பு முடிந்து, அடையாறிலுள்ள வீட்டிற்கு காரில் திரும்பும்போது, துாங்கி விடுவேன்.
எஸ். விஜயன்