sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 15, 2024

Google News

PUBLISHED ON : செப் 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

மாலை, அலுவலகத்திலிருந்து கிளம்பியதும், 'வா மணி... டீ குடித்துவிட்டு போகலாம்...' என்று அழைத்துச் சென்றார், லென்ஸ் மாமா. கூடவே, குப்பண்ணாவும், 'திண்ணை' நாராயணனும் ஒட்டிக் கொண்டனர்.

வழக்கமாக செல்லும் டீ கடைக்கு சென்று, அனைவருக்கும், மசாலா டீ ஆர்டர் செய்தார், மாமா.

சுடச்சுட மசால் வடையின் வாசம், மூக்கை துளைத்தது. எங்களுக்கு ஆளுக்கொரு மசால் வடையை எடுத்துக் கொடுத்து, மசால் வடையை எண்ணெயிலிருந்து எடுத்து தட்டில் போடப் போட, மடமடவென்று எடுத்து சாப்பிட ஆரம்பித்தார், மாமா.

'போதும் மாமா, வயிறு கோளாறு ஏற்பட்டுவிடப் போகிறது...' என்று எச்சரித்தேன். அவர் கேட்டால் தானே! பட்டால் தான் தெரியும் இவருக்கு என்று விட்டு விட்டேன்.

டீ கடைக்கு வந்து அரசியல் பேசாவிட்டால் தலை வெடித்து விடாதா...

'அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக, கமலா ஹாரிஸ் பெயரை அறிவிச்சுட்டாங்களே... ஜெயிச்சுடுவாங்களா?' என்று ஆரம்பித்தார், குப்பண்ணா.

'அதில், என்ன சந்தேகம்? அங்கு குடியேறியுள்ள நம் மக்களே அவரை ஜெயிக்க வெச்சுடுவாங்க...' என்றார், நாராயணன்.

'அவங்க ஜெயிக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு முக்கிய விஷயம் என்னென்னா, இன்னும் கொஞ்ச நாளில், அமெரிக்கா, இன்னொரு இந்தியாவாக மாறிவிடுமாம்...' என்றார், லென்ஸ் மாமா.

'எப்படி?' என்றார், குப்பண்ணா.

'கடந்த, 15ம் நுாற்றாண்டில், கடற்பயணியான, கிறிஸ்டோபர் கொலம்பஸ், கடல் வழியாக இந்தியாவை கண்டுபிடிக்க வந்தவர், நிலபரப்பு ஒன்றுக்கு சென்று, அங்கிருந்த செவ்விந்தியர்களை பார்த்ததும், 'இந்தியாவை கண்டுபிடித்து விட்டேன்...' என்று குதித்தாராம்.

'ஆனால், அவர் கண்டுபிடித்தது இந்தியா அல்ல; அமெரிக்காவைத்தான். அதன்பின், அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் கண்டுபிடித்த அந்த நிலபரப்புக்கு, அமெரிக்கா என, தன் பெயரையே சூட்டினார். 350 ஆண்டுகளுக்கு பின், இன்று அமெரிக்கா, இன்னொரு இந்தியாவாக மாறி வருகிறது.

'தற்போது உதவி ஜனாதிபதியாக உள்ள, கமலா ஹாரிஸ், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார் என அறிவித்ததும், டொனால்ட் டிரம்ப் அலறுகிறார். 'கமலா ஹாரிஸ் ஜெயித்தால், அமெரிக்க தொழில்கள் பாதிக்கப்படும்...' என்கிறார். இத்தனைக்கும், டிரம்புடன், உதவி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வான்ஸின் மனைவி உஷாவும் இந்தியர் தான்.

'அதுமட்டுமல்ல அமெரிக்காவின் ஐ.டி., துறை உட்பட அறிவியல், சட்டம் என, எல்லா துறைகளிலும், இந்தியர்கள் அதிகார உச்சியில் இருக்கின்றனர்.

'தற்போது, அமெரிக்காவில், 51 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இது, மொத்த அமெரிக்க ஜனத்தொகையில், 1.5 சதவீதம்; வரி கட்டுவதில், 6 சதவீதம் இந்தியர்கள் தான். இவர்களுடைய வெற்றி, மேலும், பல இந்தியர்களை அமெரிக்கா வரத் துாண்டும்.

'இந்த ரீதியில் போனால், அடுத்த நுாறு ஆண்டுகளில், அமெரிக்கா, இரண்டாவது இந்தியாவாகி விடும். இதை, கொலம்பஸ் இப்போது பார்த்தால், 'அன்றே நான் இதைத் தான் கூறினேன்...' என, ஆறுதல் படுவார்...' என்று, லென்ஸ் மாமா கூறி முடிக்க, டீ குடிக்க வந்திருந்த சில இளைஞர்கள், இதை கேட்டு, கைதட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். லென்ஸ் மாமா முகத்தில், ஆயிரம் வாட், பல்ப் எரிந்தது.





'பழைய கணக்கு' நுாலில், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான, சாவி எழுதியது இது:

ஆரம்பத்தில், முக்கால் கை கதர் சட்டை அணிவதை வழக்கமாக வைத்திருந்தார், கல்கி. அந்தக் காலத்தில் வாசன், மாலி, தேவன் எல்லாருமே முக்கால் கை கதர் சட்டையை தான் அணிவர். ஆனந்த விகடனை விட்டு விலகி, சொந்தப் பத்திரிகை துவங்கிய பிறகு கூட, முக்கால் கை சட்டை தான் அணிந்து கொண்டிருந்தார், கல்கி.

திடீரென, ஒருநாள் முக்கால் கை சட்டையை மாற்றி, முழுக்கை ஜிப்பா போடத் துவங்கி விட்டார். அப்போது, நான், 'கல்கி'யில் உதவி ஆசிரியராக இருந்தேன். எனக்கும், மற்ற உதவி ஆசிரியர்களுக்கும், கல்கி ஏன் ஜிப்பாவுக்கு மாறினார் என்பது புரியவில்லை. நாங்கள் அவரிடமே இது பற்றிக் கேட்டோம்.

அதற்கு, 'நான் என்னமோ, ராஜாஜியையும், டி.கே.சி.,யையும் என், சட்டைப் பையில் வைத்திருப்பதாக, வெளியே பலர் பேசிக் கொள்கின்றனர். என் சட்டையில் இருப்பதோ ஒரே ஒரு பாக்கெட்.

'அவர்கள், இரண்டு பேரையும் என் ஒரே பாக்கெட்டில் வைத்தால், இட நெருக்கடி ஏற்படாதா? அதற்காகத்தான் இப்போது, இரண்டு பாக்கெட் வைத்த, ஜிப்பா போட்டுக் கொள்கிறேன்...' என்று சிரித்துக்கொண்டே கூறினார், கல்கி.

ஒரு முறை, சேலம், ஆத்துாரில், காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. நான், அந்த மாநாட்டுக்கு போயிருந்தேன். ஒரு பக்கமாக உட்கார்ந்து குறிப்பெழுதிக் கொண்டிருந்தேன். கல்கியும், அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்.

என்னைத் தாண்டி, போன போது, குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து சைகையால், 'என்ன எழுதுகிறாய்?' என்று கேட்டார், கல்கி.

'குறிப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன்...' என்றேன்.

'அதையெல்லாம் மூடி வை...' என்று கூறிவிட்டுப் போய் விட்டார்.

பின்னர், 'இதோ பார். பேச்சைக் குறிப்பெடுத்து எழுதுவது, தினப் பத்திரிகைகள் செய்யும் வேலை. வாரப் பத்திரிகைக்கு அந்த, 'ரிப்போர்ட்டிங்' ஒத்து வராது. நீ, பேசாமல் உட்கார்ந்து நடப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். உன் உள்ளத்தில் பதியும் சுவாரஸ்யமான விஷயங்களை மட்டுமே கட்டுரையாக எழுத வேண்டும்...' என்றார்.

'மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குறித்து வைத்துக் கொண்டேன்...' என்றேன்.

'நல்ல விஷயங்கள் என்றால், அது எப்படி மறந்து போகும். மறந்து போகக் கூடிய விஷயங்கள் என்றால், அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல; பிரசுரத்துக்கு ஏற்றதல்ல என்பது தானே பொருள்?' என்றார்.

அவர் அன்று சொன்ன வார்த்தைகள், என் நெஞ்சில் வேத வாக்காய் பதிந்து விட்டன. இந்தக் குறிப்பெழுதும் வேலையை அன்றோடு விட்டு விட்டேன்.

கல்கியிடம் இருந்த இன்னொரு விஷயமும், எனக்கு முன் உதாரணமாக இருந்தது. அது...

ஒரு விஷயத்தை எழுதுவதற்கு முன், அதை பற்றிய எல்லாத் தகவல்களையும் படித்து, அறிந்து கொண்ட பின்னரே, பேனாவை கையிலெடுப்பார், கல்கி.

'சிவகாமியின் சபதம்' தொடரை எழுதும் போது, புத்த பிட்சுகளை பற்றி எழுத வேண்டியிருந்தது. அதற்காக, புத்த பிட்சு ஒருவரை அழைத்து வர சொல்லி, அவரது நடை, உடை, பாவனை மற்றும் பழக்க வழக்கங்களை எல்லாம் கூர்ந்து கவனித்து, அதையே எழுத்தில் கொண்டு வந்தார்.






      Dinamalar
      Follow us