/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (8)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (8)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (8)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (8)
PUBLISHED ON : செப் 22, 2024

டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், மணப்பந்தல் என்ற படத்தில், எனக்கு ஜோடியாக, அசோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர், புதுமுக நடிகராக வந்த சமயம் அது. நான் அவரோடு நடிப்பேனா என்ற சந்தேகம் வந்த போது, என் அம்மா தலையிட்டு, நடிக்க ஒப்புதல் அளித்தார்.
நான் மலையாள மொழியில் மட்டும் நடிக்கவில்லை. அப்படி வந்த வாய்ப்புகளை தவிர்த்தேன். காரணம் எந்த வேடமானாலும் முழுக்க மூடி நடித்துப் பழகிய எனக்கு, மலையாள கலாசாரப்படி உடையணிந்து நடிக்க வந்த அழைப்புகளை, என்னால் ஏற்க இயலவில்லை. அப்படி நடிப்பது தவறில்லை என்றாலும், அந்த சமயம் ஏனோ, என் மனம் இசையவில்லை.
எம்.ஜி.ஆர்., என்னை தமிழில் அறிமுகம் செய்தார் என்றால், தெலுங்கில், பாண்டுரங்க மகாத்மியம் என்ற படத்தில், என்.டி.ராமாராவ், அறிமுகமானார். அதில், அஞ்சலிதேவி நாயகி. எனக்கு நடனமாடும் வேடம்.
அதற்கு பின்,என்.டி.ஆரின் சொந்த படம் உட்பட, பல படங்களில் நான் நடித்தேன். அவர் தயாரித்து, இயக்கிய, தான வீர சூர கர்ணா படத்தில், துரியோதனன், கர்ணன், கிருஷ்ணன் வேடங்களை அவரே செய்தார்.
அதில், நடிப்பதற்கு முன் என்னிடம், 'உனக்கு என்ன வேடம் வேண்டும்?' என்று கேட்டார். என்.டி.ஆர்.,
'கர்ணன் ஜோடி...' என்றேன்.
என்னை எப்போதுமே, 'சரோஜா காரு' என்று அழைப்பார், என்.டி.ஆர்., நான் அவரிடம், அப்படி அழைக்க வேண்டாம் என்று கூறினாலும், அவர் அதை கேட்க மாட்டார். என்னை மட்டுமின்றி வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும், அப்படித்தான் மரியாதையாக அழைப்பார்.
என் கணவர் இறந்தபோது, அவரால் வர முடியவில்லை என்றாலும், எனக்கு நீண்ட கடிதம் எழுதி ஆறுதல் கூறினார். அந்தளவு அவரது குடும்பத்தில் ஒருவராக என்னை கருதினார், என்.டி.ஆர்.,
திருப்பதியில், சில ஆண்டுகளுக்கு முன், என்.டி.ஆர்., மகனும், நடிகருமான பால கிருஷ்ணனை பார்த்தேன். என்னைப் பார்த்ததும் உற்சாகமாகி, என் தெலுங்கு பட வசனங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார். நான் வியந்து போனேன்.
நான் தெலுங்கில் நடிக்க வந்தபோது, எனக்கு தெலுங்கு மொழி சரியாகத் தெரியாது. படிப்படியாகத் தான் கற்றுக் கொண்டேன். தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதை போல, ஆந்திர மக்களும் ஏற்றுக் கொண்டனர்.
நடிப்புத் தொழிலை தெய்வம் என்று கருதுபவர், நாகேஸ்வரராவ். படப்பிடிப்பு நடைபெறும் இடம் தான் அவருக்கு கோவில். மற்றபடி, கோவிலுக்கெல்லாம் செல்ல மாட்டார். உற்சாகமான மனிதர். கோபமே வராது. என்னை எப்போதும், 'ஹீரோயின்' என்றே அழைப்பார். நான் அவரை, 'ஹீரோ' என்பேன்.
கடந்த, 2002ல், ஹைதராபாத்தில், அவரது அன்னபூர்ணா ஸ்டுடியோவில், விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதற்கு என்னை அழைத்திருந்தார்.
அப்போது, 'நடிக்கும்போது, கேமரா இயங்குவதற்கு முன், சரோஜாதேவி ரொம்ப அமைதியாக இருப்பார். நடிக்க ஆரம்பித்தால், நம்மை துாக்கி சாப்பிட்டு விடுவார். அப்படியொரு திறமை கொண்டவர்...' என்று, என்னை பாராட்டினார்.
தமிழில் நான் நடித்த, கல்யாண பரிசு, பாசம், மணப்பந்தல் மற்றும் பெரிய இடத்துப் பெண் ஆகியவை தெலுங்கிலும் உருவானது. அதிலும் நான் தான் கதாநாயகி.
இவற்றில், மணப்பந்தல் தெலுங்கில், இன்டிகி தீபம் இல்லாலே என்றும், பாசமலர் தெலுங்கில், மஞ்சி செடு என்றும் படம் உருவானது. அவற்றை டி.ஆர்.ராமண்ணாவே இயக்கினார். இரண்டிலும், என்.டி.ஆர்., தான், எனக்கு ஜோடி.
தமிழில், நிச்சயதாம்பூலம், பட்டிக்காட்டு பொன்னையா படங்களை தயாரித்து, இயக்கிய, பி.எஸ்.ரங்கா, கன்னடத்தில், அமர சில்பி ஜக்கன்ன சொரி என்ற படத்தை உருவாக்கினார். இது தமிழில், சிற்பியின் செல்வன் என்று, 'டப்' செய்யப்பட்டு வெளியானது.
இந்த படம், கர்நாடகாவிலுள்ள பேளூர், ஹளபேடு ஆகிய, சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் உள்ள இடங்களின் சரித்திரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதன் நாயகன், கல்யாண் குமார்.
சிற்பக் கலை என்றாலே, நடனக்கலைக்கும் முக்கியத்துவம் இருக்குமே. அந்த வகையில் நான், நடனக் கலைஞராக நடித்தேன். ஏராளமான விருதுகளைப் பெற்ற, இந்த படத்தால், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு, அன்றைய கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா, என்னைப் பாராட்டி, 'அபிநய சரஸ்வதி' என்று பட்டம் சூட்டினார். இன்றைக்கும் எனக்கு கவுரவம் தந்து கொண்டிருக்கும் பட்டம் இது.
சிவாஜியுடன் முதல் படம், பாகப் பிரிவினை படத்தைத்தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் நடித்த போது ஒரு சம்பவம்:
ஒருநாள், கொஞ்சம் சோகத்துடன் நின்றிருந்தேன்.
'என்ன சரோஜா, சோகத்துடன் இருக்கிறாய்?' என்று, என் முகத்தைப் பார்த்து கேட்டார், சிவாஜி.
'இல்லை, அடுத்த காட்சியில் நான் பிரசவ காட்சியில் நடிக்க வேண்டும். நான் சின்னப் பொண்ணு. இன்னமும் கல்யாணமே ஆகாதவள். எனக்கு எப்படி பிரசவம் பற்றித் தெரியும்? அதான், யோசனையா இருக்கு...' என்றேன்.
'அட, இதுக்குப் போயா குழம்பறே?' என்று மறுகணமே, அந்த இடத்தில் படுத்து விட்டார், சிவாஜி.
நாங்கள் பேசிக் கொண்டிருந்தது, ஒரு மரத்தடி.
அங்கே கீழே சிறு சிறு குச்சிகளும், மரத்துண்டுகளும் கிடந்தன. ஒரே புழுதி வேறு. எதைப் பற்றியும் கவலைப்படாமல், அங்கு படுத்து, ஒரு பெண் பிரசவத்தின் போது, எப்படியெல்லாம் துடிப்பாள் என்பதை அனுபவித்து நடித்து காட்டினார், சிவாஜி.
'இப்படி நடி, போதும்...' என்றார்.
அதன்படியே நடித்தேன். காட்சி பிரமாதமாக வந்தது.
நான் பேசிய தமிழை பற்றி, சிவாஜி என்ன கூறினார் தெரியுமா?
தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்
எஸ். விஜயன்