
பா - கே
அலுவலகம். காலை நேரம்.
அன்றைய நாளிதழை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த உதவி ஆசிரியை ஒருவர், 'யானைகளுக்கு வந்த திடீர் மவுசை பாருங்க. ஒரு பக்கம், யானைகளின் வழித்தடத்தை மறித்து, ஊருக்குள் வரவைத்து, 'கிலி' ஏற்படுத்தியும், அன்னாசி பழத்தில் குண்டு வைத்து கொன்றும் வருகின்றனர்.
'இன்னொரு பக்கம், ஓணம் மற்றும் தசரா விழாக்களில், யானைகளை அலங்கரித்து, பூஜை செய்கின்றனர். பீகார் மாயாவதி முதல், நடிகர் விஜய் வரை, தங்கள் கட்சி கொடியில் யானை படத்தை போட்டு ஜமாய்க்கிறாங்க. இந்த மனுஷங்ககிட்ட யானைகள் மாட்டிக்கிட்டு படும்பாடு இருக்கிறதே...' என்று இழுத்தார்.
அப்போது, கேமரா பை சகிதம் உள்ளே வந்த, லென்ஸ் மாமா, 'யானை என்றாலே எல்லா காலத்திலும் நமக்கு, ஸ்பெஷல் தாம்மா. யானையை பார்த்து குதுாகலிக்காதவர்கள் யாராவது இருக்கின்றனரா! அது சரி... நீ யானையை கிட்டத்துல பார்த்திருக்கிறயா?' என்று கேட்க, மாமா மீது அக்னி பார்வையை வீசினார், உ.ஆ.,
'சரி... சரி... யானைகளை எப்படி பழக்கப்படுத்தறாங்க தெரியுமா?' என்றார்.
'தெரியாது' என்பதற்கு அடையாளமாக உதட்டை பிதுக்க, சொல்ல ஆரம்பித்தார், லென்ஸ் மாமா:
காட்டிலிருந்து பிடித்து வந்த யானையை சுத்தி முதலில், நாலைந்து கும்கி யானைகளை நிறுத்துவாங்க. ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன் நின்று, ஆளுக்கு ஒரு குச்சியை கீழே போடுவாங்க. பக்கத்தில் ஒரு கும்கி யானை நின்று, எப்படி குச்சியை எடுத்து, பாகன் கையில் கொடுக்கணும்ன்னு திரும்ப திரும்ப செய்து காட்டும்.
அவ்வளவு சுலபத்தில் குச்சியை எடுத்துவிடாது, புது யானை. ஆனால், அது எடுக்கிற வரைக்கும் கும்கிகளும் விடாது. புது யானையை தந்தங்களால் முட்டி நெருக்கும்.
சுமார், 1.5 அங்குல தடிமனில், 6 அடி நீளத்தில், ஒரு வாரம் விளக்கெண்ணெயில் ஊறப்போட்டு, தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலாக தயார் செய்த காட்டு மூங்கில் பிரம்புகள் வைத்திருப்பர், பாகன்கள். வளைச்சா ரப்பர் மாதிரி வட்ட வடிவத்தில் வளைந்து நிற்கும்.
அதுல, ஒரு அடி வாங்கினால், மனுஷன் செத்துடுவான். அந்த பிரம்பால யானையை அடிச்சு வெளுப்பாங்க. அதுங்க வலியில் பிளிறும். இரண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா, குச்சியை எடுக்காது. எடுக்கற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விட மாட்டாங்க.
இறுதியில், அடி தாங்காமல் குச்சியை எடுத்து, எந்த பாகன் கையில் கொடுக்குதோ, அவனைத் தான் யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி, அந்த பாகனுக்கு மட்டுமே, இந்த யானை கட்டுப்படும். அவர் தான், அந்த யானைக்கு தலைமைப் பாகன்.
யானைக்கு பிடித்த பாகனை தேர்ந்தெடுத்தாச்சு. அதன் பிறகு தான், யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும். அதை பழக்கறதுக்காக, தும்பிக்கையை துாக்க முடியாத அளவுக்கு, 'கரோல்'ல அடைத்து, மூணு நாள் பட்டினி போடுவாங்க.
நாலாவது நாள், கொஞ்சம் கரும்பும், வெல்லமும் கொடுத்து ருசி காட்டுவர். பசிய துாண்டி, சொல் பேச்சு கேட்டால், கரும்பு, வெல்லம் கிடைக்கும்ன்னு, அதுக்கு உணர வைத்து, யானையை வழிக்கு கொண்டு வருவார், பாகன்.
தன்னை கண்டாலே, யானைக்கு ஒருவித, 'கிலி' ஏற்படுகிற மாதிரி செய்திடுவார், பாகன். பயமும், பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம், யானை தன் மேலே யாரையும் ஏற விடாது.
கடைசியில், எந்த நாளில் யானை, பாகனை முழுவதும் எந்த எதிர்ப்பும் இல்லாமல், முன்னங்கால்களை மடக்கி கொடுத்து, அதன் மீது ஏறி, தன் முதுகில் உட்கார அனுமதிக்கிறதோ, அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட, 'கரோலை' திறப்பாங்க.
யானை மேல, பாகன் உட்கார்ந்தபடி தான், 'கரோலை' விட்டு வெளியே வரணும். அப்பத்தான் அது முழுவதும் பழக்கப்பட்டதற்கான அடையாளம். இதெல்லாம் நடக்க, 48 நாட்கள் ஆகும்.
என்ன யானையை நினைச்சா பாவமா இருக்கா? மனுஷனுக்கு அடிமை வேலை செய்ய வேண்டாமா?
- என்று கூறி முடித்தார், மாமா.
மாமாவுக்கு இவ்வளவு விஷயம் எப்படி தெரியும் என்கிறீர்களா? முதுமலைக்கு பல முறை சென்று, யானைகளைப் பழக்குவதை புகைப்படம் எடுத்து வந்துள்ளாரே.... அந்த அனுபவம் தான் நீங்கள் மேலே படித்தது.
ப
மாணவர்களை சோதிப்பதற்காக, ஒரு பள்ளிக்கூடத்திற்கு வந்தார், கல்வி அதிகாரி. வகுப்பறை ஒன்றில் நுழைந்து மாணவர்களை பார்த்து, 'ராமாயணத்தில் ராமனின் வில்லை முறித்தது யார்?' என, ஒரு மாணவனை பார்த்து கேட்டார்.
'நான் இல்லை ஐயா...' என்றான், நடுங்கிக் கொண்டே அந்த மாணவன்.
இந்த பதிலால் கோபம் கொண்டு, அந்த வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, 'என்ன ஐயா இப்படி சொல்கிறான்?' என்று கேட்டார், அதிகாரி.
'சார், அவன் ரொம்ப ஒழுக்கமான பையன். அவன் அப்படி எல்லாம் செய்திருக்க மாட்டான். நான் நிச்சயமாய் சொல்கிறேன். ராமன் வில்லை இவன் முறிச்சிருக்க மாட்டான்...' என, அந்த ஆசிரியரும் உறுதியாக சொன்னார்.
கோபம் தலைக்கேற, வேகமாக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று, அந்த வகுப்பில் நடந்ததை கூறி, 'நீங்கள் உடனே அந்தப் பையனைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்...' என்று கத்தினார், அதிகாரி.
'சார், நீங்க கோபப்பட வேண்டாம். நான் உடனே விசாரிக்கிறேன். ராமன் வில்லை யார் முறிச்சிருந்தாலும் தப்பு, தப்புத்தான். ஆனா, அந்தப் பையனைக் குற்றம் சொல்ல முடியாது சார். அவன் ரொம்ப அப்பாவி.
'நான் உடனே விசாரணை செய்து, எல்லா பயலுகளுக்கும், 'பைன்' போட்டு, தக்க நடவடிக்கை எடுக்கிறேன்...' என்றார், தலைமை ஆசிரியர்.
கல்வி அதிகாரிக்கு, பைத்தியம் பிடிக்கிற நிலை ஏற்பட, வேகமாக வீட்டிற்கு வந்து, தன் மனைவியிடம் நடந்த குழப்பங்களை எல்லாம் கூறினார்.
'உங்க கேள்வியே தப்பு. ராமன் வில்லை யாரும் முறிக்கல; முறிக்கவும் முடியாது. சீதையோட அப்பா ஜனக மகாராஜன் வெச்சிருந்த வில்லைத்தான், ராமன் முறிச்சு, சீதையை மணந்தார் தெரியுமா?' என்றார், அதிகாரியின் மனைவி. அவருக்கு அப்போது தான், தான் கேட்ட கேள்வியின் குழப்பம் தெரிந்தது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.