
* எம்.எப்.நஸ்ரின், திருநெல்வேலி: தமிழ் பத்திரிகையான நம், 'தினமலர்' ஏன், கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது?
தமிழர்கள் வாழும் கன்னியாகுமரியை, கேரளாவுடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இணைத்து விட்டனர். அதை, தமிழகத்துடன் சேர்க்க வலியுறுத்த, அம்மாநில அரசை எதிர்த்து, அங்கு தானே போராட வேண்டும்!
அதற்காக, திருவனந்தபுரத்தில், நம் நாளிதழ் துவக்கப்பட்டது. குறிக்கோள் நிறைவேறியதும், நெல்லைக்கு வந்து விட்டோம்!
பா.பரத், புதுடில்லி: பா.கே.ப., பகுதியில், உங்களுடன் நிற்பவர்கள் எல்லாரும் சிரித்த முகமாகவே உள்ளனரே... நீங்கள் ஏதாவது, 'ஜோக்' அடிப்பீர்களா?
லென்ஸ் மாமா, 'ரெடி' என்று கூறியவுடன், உடனிருப்பவர்களை பற்கள் தெரிய புன்னகைக்கச் சொல்லி விடுவேன்!
* பி.கதிர்வேல், ஊட்டி: யாரை ஞானி என்று சொல்லலாம்?
கோபப்பட வேண்டிய இடத்திலும், கோபப்படாதவர் ஞானி!
பி.பாஸ்கரன், கடலுார்: ஞாயிற்றுக்கிழமைகளில், 'இ-மெயிலில்' கேள்விகள் அனுப்பலாமா?
ஓ... எஸ்! அனைத்தையும் அன்றே படித்து விடுவேன்!
அ.மீனாட்சி, கன்னியாகுமரி: ஜர்னலிசம் பயிலும் மாணவ - மாணவியர், 'தினமலர்' நாளிதழில் களப்பயிற்சி எடுப்பதுண்டா?
உண்டே! தமிழகம் முழுவதிலும் உள்ள ஏராளமான கல்லுாரிகளில் இருந்தும், நம் நாளிதழில் பயிற்சி பெற்று செல்கின்றனர்; வெளி இடங்களில் உடனடியாக பணியிலும் சேர்ந்து விடுகின்றனர்!
பெ.பொன்ராஜ பாண்டி, மதுரை: 'முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால், நான் மாநில அரசியலுக்குள் வருவேன்...' என, கனிமொழி எம்.பி., கூறுகிறாரே?
அவரை விரைவில் எதிர்பார்க்கிறோம்!
சு.அருண் பிரகாஷ், குமரகிரி, துாத்துக்குடி: 'மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்...' என்கிறாரே, தி.மு.க., அமைச்சர் உதயநிதி?
முதலில் அவரது தந்தை வழிவிடட்டும்!
அலிபாத்து ஷபின், கல்லிடைக்குறிச்சி: மதியம் அலுவலகத்தில் துாங்குவது, பொறுப்பாசிரியருக்குத் தெரியுமா?
அவர் அனுமதியுடன் வீட்டிற்குச் சென்று துாங்கி எழுந்து, மாலை, 4:00 - 4:30 மணிக்குள் அலுவலகம் வந்து, வேலை பார்க்கத் துவங்கி விடுவேன்!
மு.ஆதினி, சேலம்: 'தினமலர்' நாளிதழில், 'புத்தக மதிப்புரை' பகுதியில் வெளியிட வேண்டி அனுப்பப்படும் பிரதிகளை, அதன் பிறகு என்ன செய்வீர்கள்?
பள்ளிகளில் உள்ள நுாலகங்களுக்கு அனுப்பி விடுவோம்!