sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கிப்ட!

/

கிப்ட!

கிப்ட!

கிப்ட!


PUBLISHED ON : செப் 22, 2024

Google News

PUBLISHED ON : செப் 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் நாக்கு செத்து விட்டது. எனக்கு சமையல் செய்து தரும், நாயர் இன்றும் வேலைக்கு வரவில்லை. நாயர் தரும் டீயும், புட்டும், கேரள சமையலும், என்னை அடிமையாக்கி விட்டிருந்தது.

நான், இந்த ஊருக்கு மாற்றலாகி வந்தபோது, எனக்கு அறிமுகமானான், நாயர். கேரளாவிற்கே உரித்தான, இயற்கை அழகு அந்த இடத்துக்கு சொந்தமாக இருந்தன.

'எந்தா சாரே...' என்று அழைத்தபடி, நாயர் வந்து விட்டால், வீடு களை கட்டும்.

'சாரே, என்னை நீன்னே விளி... மனசுல ஆயோ?' என்பான், நாயர்.

காலை, 5:00 மணிக்கெல்லாம் பால் பாக்கெட்டுடன் வரும் போதே, ஆற்றில் குளித்து அம்பலத்தில் தொழுது வந்து விடுவான்.

காபி போட்டு, காலை டிபன் தயார் செய்து, டேபிள் மீது தயாராக வைத்து விடுவான். எனக்கு வியப்பாக இருக்கும். குளிராக இருந்தாலும், மழையாக இருந்தாலும், அவன் வருகை தப்பாது.

எல்லா வேலையும் செய்து முடித்து, நான் அலுவலகத்தில் இருந்து வந்ததும், ஸ்நாக்ஸ், டீ. இரவு டின்னருக்கான சப்பாத்தி, சப்ஜி போன்றவற்றை தயாரித்து, ஹாட் பேக்கில் போட்டு, டேபிளில் வைத்து விடுவான். 'எந்த சாரே, வரட்டே...' என்று கேட்டபடி, கிளம்பி விடுவான்.

இங்கேயே தங்கி கொள்ள சொன்னாலும் கேட்க மாட்டான்.

பிற்பகல் எனக்கு மட்டும் அலுவலகத்தில், உணவு வழங்குவர். ஆனால், ஞாயிறு என்றால் வெளுத்து வாங்கி விடுவான், நாயர்.

'ஊண் கழிக்கு சாரே?' என்று கேட்டு, அடைபிரதமன், காலன், ஓலன் என்று ஏகப்பட்ட தடபுடல் விருந்தை எனக்கு பரிமாறி, அன்று என்னுடன் சாப்பிடுவான்.

இன்று ஞாயிற்றுக் கிழமை-

எனக்கு வீடு தெரியும். ஒருமுறை நாயரோடு கோவிலுக்கு போன போது, 'சாரே, அம்பலத்துப் பொறத்து ஒரு ஆறு உண்டு. அதன் கரையிலே தான் என்ட கொச்சு வீடு. யாரைக் கேட்டாலும் பறையும், நாயர் வீடு எங்கில் மதி...' என்பான்.

நான் கிளம்பி, நாயர் வீட்டை தேடிப் போன போது, அவன் வீட்டு வாசல் கதவு சற்றே சாத்தியிருந்தது. நான் கதவு தட்ட கை ஓங்கிய போது, நாயரே கதவு திறந்து, ''எந்தா சாரே எத்தியோ? உடம்பு சுகமில்லா. நாளை திங்கள் வரும், பேடிக்க வேண்டாம்,'' என்றான்.

உள்ளே நுழைந்து, சுற்றும் முற்றும் பார்த்தேன்.

''அது சரி, வீட்ல யாரும் இல்லையா இந்த காய்ச்சலோடு தனியாவா இருக்க?''

அறையின் டீப்பாயில் மருந்து, மாத்திரை காலி கவர்கள், தண்ணீர் பாட்டில் இருந்தன.

நாயர் சிரித்தபடி, அந்த கள்ளு பாட்டிலை தள்ளி வைக்க, ''இந்தக் காய்ச்சலோட குடிக்காத... என்ன?'' என்றேன்.

''ஷமிக்கணும் சாரே, இது மருந்து. ஞான் குடிகாரனில்ல. அப்பப்போழ் மனசு சங்கடமா இருக்கும் போழ் அல்பம் குடிக்கும்.''

''வீட்டுல திட்ட மாட்டாங்களா... கல்யாணம் ஆகலையா?''

''கல்யாணம் கழிச்சு. பஷ... ஜீவிதத்தில் தெற்று செஞ்சு சாரே. என்ட பாருக்குட்டி, சினேகிதனோட ஓடிப்போய்,'' தயங்கியபடி கூறினான்.

நான் திகைத்தேன்.

''ப்ரண்டா?''

''அதெ என்ட கடைக்கு, அடிக்கடி டீ குடிக்க வரும். ஞான் நினைச்சு, 'என்னட சாய் இஷ்டப்பட்டு'ன்னு. பஷ ஆ ஆள் இஷ்டப்பட்டது. என்ட பார்யா. விடு சாரே, சாரமில்லா...''

''கன்னத்தில் நாலு அறை தந்து, அவளை இழுத்து வர வேண்டாமா?'' என, கேட்டேன்.

''அல்ல சாரே... எனிக்கும் சிலப்போழ் தேஷ்யம் வரும். சவட்டிக் களையணும்ன்னு தோணும்.''

அவன் கண்களில் கண்ணீர்.

தன் மனைவி பாரு குட்டியுடன் அமர்ந்தபடி அவன் பேசிய பழைய கதைகள்.

சூறாவளி காற்றில் கூட, மழையில் பத்திரமாக அவளை கடைசியாக படகில் கரை சேர்த்ததை. பாறைகளின் நடுவே ஆற்றில் கால்களை நனைத்தபடி அவளுடன் பேசியதை, நாயர் சொல்லச் சொல்ல, எனக்கு கோபம் வந்தது.

கடல் எப்போதும் அமைதியாக இருக்குமா, அதன் ஆக்ரோஷம் என்னவானது, பொங்கி உயிர்களை குடித்து, தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளாதா?

நான் யோசித்தேன். கடல் சீற்றம், ஆகாயம் மட்டுமே அறிந்த ரகசியம் என்று எங்கோ படித்த நினைவு. ஆனால், நான் பேசாமல் இருந்தேன்.

''எந்தா பிரயோஜனம். என்ட பாரு குட்டி, இஷ்டமில்லாம என்னோடு இருந்தா எங்கனெ சகிக்கும்? ஒரு திவசம் அவள கண்டு, 'கிப்ட்' வாங்கித் தந்து, அனுப்பி விட்டேன். அவள்ட கையில் ஒரு குழந்தை. எந்து செய்யும்? ஜீவிதம் முழுதும் என்ட பாரு சந்தோஷமா இருந்தா, அது மதி. எனிக்கு ஏதும் வேண்டா,'' என்றான்.

கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

''விடு சாரே, சாரமில்லா ஒரு ப்ரணய கால ஸ்வப்ன வசந்தம். கண்டு களிச்சு ப்ரேமிச்சு, பின்னே பிரிஞ்சு, ஸ்வப்னத்தில் எனிக்கு எந்தா பாத்யதை? மிண்டாதிருக்கு சாரே, திங்களாய்ச்சு பணிக்கு வராம். விஷமிக்க வேண்டாம் சாரே, கேட்டோ?''

நான் விடை பெற்றேன்.

வீடு வந்து, மொபைல் போனில் ராதிகா நம்பரை உயிர்ப்பித்த போது, 'நம்பர் டிஸ்கனெக்டட்!' என்றது, அந்த இயந்திரம்.

என் நினைவுகள், ஐந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றன. அப்போது, நானும், ராதிகாவும் கோவையில் இருந்தோம்.

ராதிகா, டாக்டர். விரும்பி, காதலித்து தான் மணந்து கொண்டோம்.

ஆனால், பாதி சாப்பாட்டில் எமர்ஜென்ஸி கால் வரும். சினிமா பார்த்துக் கொண்டிருப்பாள். திடீர் அழைப்பு, 'டெலிவரி கேஸ்...' என்று ஓடுவாள், ராதிகா. எப்போதும் அமைதியாக இருக்க முடியாது. ஒரு கொடுமை.

'ராது, எனக்கு பயமா இருக்கு. இங்கே திடீர்னு பெட்ரூமில் எமர்ஜென்சி கால் வந்தா?'

சிரிப்பாள், ராதிகா.

'கல்யாணத்துக்கு முன், நான் டாக்டர்ன்னு தெரிஞ்சுதானே, கல்யாணம் பண்ணினீங்க?'

'இருக்கட்டுமே. அதனால இப்படியா? எப்ப பார்த்தாலும் எமர்ஜன்சி, அர்ஜண்ட், டெலிவரி. எனக்கு பிடிக்கல...'

'அப்போ வேலையை விட்டுடட்டுமா?'

'வேண்டாம். ஹாஸ்பிடல் வேலையை விட்டுட்டு, கிளினிக் வைச்சுக்கோ. நீயே தலைவி. இஷ்டம் இருந்தா போகலாம்; இல்லைன்னா வீட்டுல இருக்கலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. கட்டாயப்படுத்த முடியாது...' என்றேன்.

'முடியாதுங்க. அவசர அழைப்பு வந்தா, எங்கே இருந்தாலும் உடனே போக வேண்டியது என்னோட கடமை. அதை நான் புறக்கணிக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நான் நானாத்தான் இருப்பேன்...' என, தீர்மானமாகச் சொல்லி விட்டாள், ராதிகா.

ஒருநாள், 'நீ நீயாக இரு. நான் நானாக இருக்கேன். எதுக்கு இந்த உறவு?' என்றேன்.

'என்ன சொல்ல வர்றீங்க?'

'ப்ரேக் அப்!'

ஆனால், என்னை எதிர்த்து, ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்தேன். அந்தக் கண்ணீர் கடலில் தான், நான் காதல் படகு ஓட்டி இருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால், இப்போது, படகே கவிழ்ந்து விட்டது.

போகும்முன், 'நான் போறேன்; நீங்க கூப்பிடாத வரை, நானா வரவே மாட்டேன். பை...' என்றாள்.

தற்செயலாக எனக்கும் கேரளா மாற்றல் வரவே, நான் நிம்மதியாக இங்கு வந்து விட்டேன்.

நாயரின் பேச்சு, என்னை சிந்திக்க வைத்தது.

கணவன் - மனைவி உறவை, அவ்வளவு சுலபமாக புறக்கணிக்க முடியுமா? அப்படி புறக்கணிக்க முடியாத காரணத்தால் தானே, நாயர், மனைவியை மனதிடமும், தன்னுடைய வாழ்வை இன்னொரு இடத்திலுமாக வைத்து, வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

'இரண்டு மனம் வேண்டும்...' என்று, கண்ணதாசன் பாடியதும், இதுகுறித்துத் தானோ?

ராதிகாவின் மறந்து போன மருத்துவமனை நம்பரை, என் போன் புத்தகத்திலிருந்து தேடி எடுத்து போன் செய்தேன்.

ஓரிரு ரிங் போன பின், ஒரு பெண் குரல் கேட்டது.

''டாக்டர் ராதிகா இருக்காங்களா?'' என்றேன்.

''ஆமா, அவுங்களுக்கு இன்னைக்கு கல்யாணம். எல்லா ஸ்டாப்பும் அங்கு தான் கிளம்பிட்டு இருக்கோம். நீங்க?''

மொபைல் போனை, 'ஆப்' செய்தேன். 'கிப்ட்' வாங்க, கிளம்பினேன்.

எனக்கும், நாயருக்கும் ஒரு வேற்றுமை. நாயர் நேரில், 'கிப்ட்' கொடுத்தான். நான், 'கொரியரில்' அனுப்ப போகிறேன். ஓரிரு நாளில் ராதிகாவை சென்றடையும். ஆனால், முறிவு, பிரிவு இரண்டுமே ஒன்று தான்.

இந்த முறிவு, எந்த மருத்துவமனையாலும் சரி செய்ய முடியாத முறிவு. ஆனால், செடியிலிருந்து உதிர்ந்த பூவுக்கு கூட வாசம் உண்டு.

நான், 'கிப்ட்' கடையை நோக்கி நடந்தேன்.

விமலா ரமணி






      Dinamalar
      Follow us