/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (21)
/
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (21)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (21)
நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (21)
PUBLISHED ON : டிச 22, 2024

முன்னாள் பிரதமர் ராஜிவின் உதவியாளர்களில் ஒருவரான, ஸ்ரீபாலி, ராஜிவை சந்திக்க ஏற்பாடு செய்தார். ராஜிவுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.
'காபி சாப்பிட்டு விட்டு போங்கள்...' என்றவர், 'என்னிடமிருந்து ஏதாவது வேலை ஆக வேண்டி இருக்கிறதா?' என்று கேட்டார்.
இல்லை என்று கூறி, அங்கிருந்து கிளம்பினோம்.
என் அனுபவத்தில், நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். எல்லாரிடம் இருந்தும் ஏதோ ஒரு விஷயத்தை கற்றிருக்கிறேன்.
இந்த விஷயத்தில், எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் மற்றும் ராஜ்குமார் ஆகிய நடிகர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.
சினிமாவில் இருந்து வந்து, அரசியலில் வென்றவர்களாக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரையும், பெரிய ஆளுமை உள்ளவர்களாக குறிப்பிட முடியும்.
கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தால், சுனில் தத் - நர்கிஸ் இருவரும், மக்கள் பணியாற்றியவர்கள். வைஜெயந்தி மாலாவும் மக்கள் பணி ஆற்றியிருக்கிறார். சினிமாவிலிருந்து வந்து தங்களையே மக்களுக்காக அர்ப்பணித்து, பணி ஆற்றிய மகானுபாவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
எந்த துறையாக இருந்தாலும், அதில் நல்லது, கெட்டது இரண்டும் கலந்தே தான் இருக்கும். இந்த சமுதாயத்தின் ஒரு பிரதான அங்கமாக சினிமா இருக்கிறது. என்னை பற்றி பேசும் மக்கள், என் புகழ்பாடும் போது, எனக்கு பெருமையாக இருக்கிறது.
என் கணவரின் மறைவுக்கு பின், சென்னையிலேயே தங்கி விடலாமா என்று யோசித்ததுண்டு. ஆனால், என் அம்மா பெங்களூருவில் இருந்தார். என் உறவினர் நிறைய பேர், பெங்களூரில் இருந்ததால், சென்னையிலும் ஒரு வீடு வாங்கி, இங்கேயும், அங்கேயும் பறந்து கொண்டிருப்பது தான் சரியென பட்டது. அதனால், சென்னையில் ஒரு வீடு வாங்கினேன். எப்போதெல்லாம் என் சிநேகிதிகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போது சென்னை வந்துவிடுவேன்.
கன்னடத்திலிருந்து வந்து முதன் முதலில், பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் நடிகை, நான் தான். பத்மஸ்ரீ மட்டுமின்றி, பத்மபூஷணையும் பெற்றேன். கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் எல்லா விருதுகளையும் பெற்றேன்.
கடந்த, 1989ல், கர்நாடக அரசின், 'ராஜ்யோத் சல்' விருது பெற்றேன். அவையெல்லாம், என் சாதனைகளின் விளைவுகள் தானே! நான் எதையும் யோசித்து செய்வதில்லை. என் வாழ்க்கையில், இப்படியெல்லாம் எழுதியிருக்கிறது. அதன்படி நடைபெறுகிறது என்று தான் எடுத்துக் கொள்கிறேன்.
எம்.ஜி.ஆருடன் - 26 படங்கள், சிவாஜியுடன் - 22 படங்கள். சாதனையாளர்களுக்கு வழங்கும், மத்திய அரசின் விருதுகள் - மூன்று, மாநில அரசின் விருதுகள், மற்ற விருதுகள் என்று, 14 விருதுகள் வாங்கியிருக்கிறேன். பெண் என்றால் பெண் என்ற, நுாறாவது படத்தையும், தமிழில் நடித்துள்ளேன்.
யோசித்துப் பார்த்தால், என் வாழ்க்கை ஒரு வண்ணக் களஞ்சியம் அல்ல; ஒரு பெண்ணின் கதையை சம்பிரதாய முறையில் எழுதினால் எப்படியோ, அப்படிதான் இருந்தது அது. ஆனால், ஒரு கெட்ட பெயர் கூட எடுக்காமல் வாழ்ந்தேன்.
என்னை பற்றி சொல்ல வேண்டுமென்றால், முன்பிருந்த உற்சாகம் இப்போது இல்லை. கடமையும், தனிமையும் தான் மிச்சம் இருக்கிறது.
வாழ்க்கை எதற்காக இப்படி நடக்கிறது?
இதை இப்படி வடிவமைத்தவர்கள் யார், எல்லாம் முடிந்த பின், நாம் எங்கே போகிறோம், என்ன ஆகிறோம்? செத்தவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை. இம்மாதிரிக் கேள்விகள் என்னிடம் நிறைய எழுகின்றன. சாவின் நிழல் என்னையும் துரத்துகிறது.
நம்மையெல்லாம் இயக்கும் ஒரு மகா சக்தி இருக்கிறது. அந்த சக்தியிடம் சரணடைந்து, பரிபூரணமாய் நம்மை ஒப்படைத்தால், அது சரியான திசையில் இட்டுச் செல்லும் என்று நம்புகிறேன்!
*****
கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என்று சாதனை படைத்த, கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில், சரோஜாதேவி நடித்த இரு படங்கள், குலவிளக்கு மற்றும் மாலதி!
குலவிளக்கு படத்தில், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., எஸ்.வி.ரங்காராவ் ஆகியோரும் நடித்திருந்தனர். குடும்ப நலனுக்காக தியாகம் செய்யும் பெண்ணின் வேடத்தில், சரோஜாதேவி மிகவும் தன்னை வருத்தி நடித்திருந்தார். காச நோயால் பாதிக்கப்பட்டு, இருமி இருமி, நடுநடுவே வசனமும் பேசி நடிக்க வேண்டும்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படமென்றால், ஒரு வரி, இரு வரியில் வசனம் பேசி விட்டுச் செல்ல முடியாது. பக்கம், பக்கமாக அவர் எழுதிய வசனங்களைப் பேசி நடிக்கவே, தனி ஆற்றல் வேண்டும். அவ்வகையில், இருமிக் கொண்டே வசனம் பேசி நடித்த பின், தாங்க முடியாத தொண்டை வலியில் அவதிப்பட்டுள்ளார்!
****
பெரிய நிறுவனங்களான ஜெமினியின், இரும்புத்திரை, ஏவி.எம்.மின், பார்த்தால் பசி தீரும், அன்பே வா மற்றும் விஜயா வாகினியின், எங்க வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், 100 படங்கள் தயாரித்த, மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்ததில்லை, சரோஜாதேவி.
காரணம் கேட்டதற்கு, 'நான் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என்று நடித்துக் கொண்டிருந்தேன். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிக்க அழைப்பு வந்தும், நான் அதை ஏற்க முடியவில்லை.
'அந்நிறுவனத்தின் தயாரிப்பில், மூன்று படங்களில் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு படத்தில் நடிக்க மொத்தமாக தேதி கொடுக்க வேண்டும். இப்படி நிபந்தனைகள் நிறைய இருந்ததால், மற்ற படங்களை தியாகம் செய்ய முடியாமல், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை தவிர்த்தேன்...' என்றார், சரோஜாதேவி.
***
கே.பாலசந்தர் இயக்கத்தில், சரோஜாதேவி நடித்த ஒரே படம், 1968ல் வெளிவந்த, தாமரை நெஞ்சம். திருமணத்திற்கு பின், கதையின் நாயகியாக நடிப்பதற்கு, சரோஜாதேவிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அதில், முதன்மையானது, தாமரை நெஞ்சம். முக்கோண காதல் கதையான இப்படத்தில், சரோஜாதேவி, ஜெமினி கணேசன் மற்றும் வாணிஸ்ரீ நடித்துள்ளனர்.
****
— முற்றும் —
நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்.- எஸ். விஜயன்