
சாயந்திரம் எங்கு செல்லலாம் என்று, 'பீச்' நண்பர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.
'வாடை காற்று, 'ஜில்'லென்று இருக்கேப்பா. 'பீச்'சுக்கு போக வேண்டாம்...' என்றார், குப்பண்னா.
'ஆமாம் லென்சு. எனக்கும் கூட, ஜலதோஷமா இருக்கு. நம் அலுவலக மொட்டை மாடியிலேயே இன்று, 'மீட்டிங்' வைத்துக்கொள்ளலாமே...' என்றார், அன்வர் பாய்.
'சரி, அப்படியே ஆகட்டும்...' என்ற லென்ஸ் மாமா, பையனை அழைத்து, கேன்டீனிலிருந்து, இஞ்சி டீ, வெங்காய பக்கோடா மற்றும் மசால் வடை வாங்கி வர சொன்னார்.
அனைவரும், மொட்டை மாடியில் ஆஜரானோம். மசால் வடையை கடித்த படியே, கையோடு எடுத்து வந்த மாலை நாளிதழ் ஒன்றை படிக்க ஆரம்பித்தார், குப்பண்ணா.
'இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் இந்த கேஸை இழுத்து அடிப்பரோ...' என்றார், குப்பண்ணா.
'ஓய், என்ன விஷயம்ன்னு சொல்லிட்டு அலுத்துக்கொள்ள மாட்டீரா...' என்றார், 'திண்ணை' நாராயணன்.
'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பற்றி தான். எப்போதோ தீர்ப்பு வந்து எல்லாம் முடிந்து விட்டது. மழை விட்டும் துாவானம் விடவில்லை கதையாக, அவரது தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், கர்நாடக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது தெரிந்தது தானே! வழக்கிற்காக செலவழித்ததுக்கு ஈடாக, அப்பொருட்கள் கர்நாடக அரசுக்கு சேர வேண்டும் என்று, நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார், ஒருவர்.
'ஆனால், சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அந்த சொத்துக்கள் வாரிசு அடிப்படையில் தனக்குத்தான் சேர வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து, தடை உத்தரவு வாங்கினார், ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபா.
'இந்த வழக்கின் மீதான விசாரணை, வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று ஒத்திப்போட்டு விட்டனராம். இந்த செய்தியைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்.
'அந்தம்மா போய் சேர்ந்தே, எட்டு வருஷத்துக்கு மேலாகிறது. சட்டுபுட்டுன்னு தீர்ப்பு சொல்ல மாட்டாங்களா? இப்படி இருந்தால், வழக்குகள் தேங்காமல் இருக்குமா?
'வருமானத்துக்கு அதிகமாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவோ சம்பாதித்த சொத்துக்கள் அரசாங்கத்துக்கு தான் சேர வேண்டும் என்று கடுமையான சட்டம் போடணும்...' என்றார், குப்பண்ணா.
'நீர் சொல்வது சரிதான். வாரிசு இல்லாத மற்றும் உயில் ஏதும் எழுதப்படாத சொத்துக்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று, நம் ராஜா காலத்திலிருந்தே இருந்த வழக்கம் தான். இதையே, கவி காளிதாசர் தன், காவியத்தில் கூட குறிப்பிட்டுள்ளார்...' என்றார், நாராயணன்.
'எங்கே வந்தாலும், பழைய புராணத்தை தலையில் துாக்கிக்கிட்டு வந்து விடுவீரோ நாணா...' என்றார், லென்ஸ் மாமா.
'அவர் என்ன சொல்ல வர்றாருன்னு கேட்போமே...' என்று மற்றவர்கள் ஆர்வத்துடன் கூற, நானும் ஆமோதித்தேன்.
டீயும், வடைகளையும் எடுத்துக்கொண்டு, மொட்டை மாடி கட்டை சுவரில் அமர்ந்து, தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார், லென்ஸ் மாமா.
மாமாவின் தலை மறைந்ததும், கூற ஆரம்பித்தார், நாராயணன்:
கடல் கடந்து வாணிபம் செய்வதற்காக சென்றபோது, கப்பல் உடைந்து விட, கடலுக்குள் மூழ்கி இறந்து விடுகிறான், ஒருவன்.
அவனிடம் ஏராளமான சொத்து இருந்தது. ஆனால், வாரிசு இல்லை. முறைப்படி, வாரிசு இல்லாத சொத்து அரசாங்கத்துக்கு சேர வேண்டும் என்பது அக்கால வழக்கம்.
அதனால், அந்த ராஜாங்கத்திலிருந்த நிதி அமைச்சர், அரசருக்கு ஒரு குறிப்பு அனுப்பினார்.
அதில், 'கடல் கடந்து வாணிபம் செய்ய போன ஒருத்தன், கப்பல் உடைந்து இறந்து போனதாலேயும், அவனுக்கு சந்ததி இல்லைங்கறதாலேயும் அவனுடைய சொத்து முழுவதும் அரசாங்க கஜானாவை சேர வேண்டியது...' என்று, அந்த குறிப்பில் எழுதி இருந்தார், நிதி அமைச்சர்.
அவ்வளவு செல்வத்தையும் உடனே, அரசாங்கம் எடுத்துக்கலாம் என்ற முடிவுக்கு வராமல், நிதானமாக சிந்தித்தார், அரசர்.
'அந்த நபர் பெரிய செல்வந்தர் என்பதாலும், அக்கால வழக்கபடியும் அவர் பல கல்யாணம் பண்ணியிருக்கக்கூடும். அப்படியிருந்தால் அவனுடைய மனைவிகளில் யாராவது கர்ப்பமா இருக்காங்களான்னு விசாரிக்கணும்...' என்றார், அரசர்.
அரசு அதிகாரிகள் அதை பற்றி விசாரித்தனர்.
அரசர் எதிர்பார்த்தது போலவே, செத்துப்போன அந்த வியாபாரியின் ஒரு மனைவி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது.
உடனே, 'அந்த வியாபாரியின் சொத்து, அரசாங்க கஜானாவுக்கு வரவேண்டியது இல்லை. அந்த செல்வம் முழுவதும் கர்ப்பத்துலே இருக்கிற அந்த குழந்தையைச் சேரும்...' என்றார், அரசர்.
இப்படி தீர்ப்பு அளித்த அந்த அரசர் யார் தெரியுமா?
துஷ்யந்தன்.
காளிதாசருடைய, சாகுந்தலத்தில் வரும் ஒரு காட்சி தான் இது.
அதுமட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் ஒருத்தர், அரசராக ஆகணும் என்றால் அதற்கு முன், அதற்கான தகுதிகளை வளர்த்துக்க வேண்டியது அவசியம்.
குருகுலவாசம் பண்ணணும், சாஸ்திரங்களையெல்லாம் தெரிந்து கொள்ளணும். தர்மத்திலேயும், பண்புகளிலும் அவங்க உயர்ந்தவங்களா இருக்கணும் என்பது போன்ற சில விதிமுறைகள் உண்டு.
அரசராகி விரோதிகளை ஜெயிக்கறதுக்கு முன், காமம் மற்றும் குரோதம் மாதிரியான, ஆறு உள் விரோதிகளை ஜெயிக்கணும் என்கிறது, சாஸ்திரம்.
மக்களிடம் வரி வசூலிக்கிறது எப்படிங்கிறதை பற்றிக்கூட அப்போ சொல்லியிருக்காங்க.
ஒரு வண்டானது எப்படி பூக்களுக்கு வலி தெரியாமல் தேனை எடுத்துக் கொள்கிறதோ அதுபோல தான். அரசரும், குடிமக்களுக்கு கொஞ்சம் கூட சிரமம் தெரியாமல் அவர்களுடைய மலர்ச்சி குன்றாமல் வரி வசூலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையே இன்னொரு உவமையால் அழகாக சொல்கிறார், காளிதாசர்.
'சூரியன் எப்படி பூமியிலேயிருந்து நீரை உறிஞ்சி, அதையே மழையாக பொழிய செய்கிறதோ, அது மாதிரி, திலீபன் என்கிற அரசன் குடிமக்களிடம் இருந்து வரி வசூல் பண்ணியதை, அவர்களின் நலனுக்காகவே செலவிட்டான், என்று கூறியுள்ளார்.
- இப்படி கூறி முடித்தார், நாராயணன்.
'குப்பண்ணா சொல்லியதுபோல், பறிமுதல் செய்யப்படும் முறைகேடான சொத்துக்களை, அரசாங்கம் தன் பொறுப்பில் எடுத்து, பள்ளிக்கூடங்களை சீரமைக்க, கோவில்களை பராமரிக்க, ஏரிகளை துார்வாருதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாமே...' என்று அங்கலாய்த்தனர், மற்றவர்கள்.
'நடக்காத காரியத்தை பேசி புலம்புவதே வாடிக்கையாகிவிட்டது. கிளம்புங்க, குளிர் காற்று உடலுக்கு ஆகாது...' என்றார், லென்ஸ் மாமா.
அனைவரும் கிளம்ப தயாரானோம்.