தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அநீதிக்கு எதிராக...

அநீதிக்கு எதிராக...

அநீதிக்கு எதிராக...


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏன் தான் இந்தப் பொழுது விடிந்து தொலைக்கிறதோ தெரியவில்லை. எழுந்திருப்பதற்கே வெறுப்பாய் இருந்தது.

ஆயிற்று, இன்னும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் தாங்காது. மனைவி மைதிலி எழுந்து அரக்கப் பரக்க வேலைகளைச் செய்யும் போது, அடுத்தவர் துாங்கிக் கொண்டிருந்தால், அவளுக்கு பொறுக்காது.

''உத்தரத்தையே பார்த்துட்டு படுத்துட்டிருந்தா, காபி வந்து வாயில விழாது. சுறுசுறுப்பா எழுந்து போய் பால் வாங்கிட்டு வரலாம்...'' என, சகட்டுமேனிக்கு கத்தினாள்.

மைதிலியின் சுப்ரபாதம் துவங்கினால், நான் எழுந்திருக்கும் வரை ஓயாது. கண்ணில் இருந்த துாக்கத்தை விரட்டி விட்டு, வெறுத்துப் போய் எழுந்தேன்.

ஆணியில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து உதறி, மாட்டியபடி வெளியே வந்தேன்.

சூடான பேன் காற்றையே இரவு முழுவதும் அனுபவித்துக் கொண்டிருந்த உடம்பில், சில்லென்ற காலைக் குளிர் காற்று பட்டதும் சுகமாக இருந்தது. நிதானமாக நடந்தேன்.

ஆணும், பெண்ணுமாய் ஒரு திருவிழாக் கூட்டமே, பால் வாங்கக் காத்துக் கொண்டிருந்தது. வரிசையில் நின்றேன்.

வரிசை, மலைப் பாம்பு மாதிரி வளைந்து வளைந்து அங்குலம், அங்குலமாக முன்னேறிக் கொண்டிருந்தது. என் முறை வருவதற்கு, 30 நிமிடம் ஆகும் போலிருந்தது.

தெரு முனையில், டீ கடை நடத்தும் நாயர், சைக்கிளை, 'ஸ்டாண்ட்' போட்டு நிறுத்தி விட்டு, சுற்று முற்றும் பார்த்தான். ஹேண்டில் பாரில் மாட்டியிருந்த அலுமினியத் துாக்கை எடுத்து, வரிசையைப் புறக்கணித்து, பக்க வாட்டு வழியாக துாக்கையையும், பணத்தையும் நீட்டினான். என் உடம்புக்குள் சாத்தான் புகுந்து, நர்த்தனமிட ஆரம்பித்தது.

வரிசையில் எனக்கு முன்பின் இருந்த இருவரிடமும் என் இடத்தை, 'காபந்து' பண்ணிக் கொண்டிருக்க சொல்லிவிட்டு, நாயரை நோக்கி விரைந்தேன்.

துாக்கில் பாலை அளந்து ஊற்றிக் கொண்டிருந்த பால் பூத் பணியாளனின் சட்டையைக் கொத்தாக எட்டிப் பிடித்தேன். நான் பிடித்த பிடியில், அவன் அதிர்ந்து போனான்.

''ஏன்டா, நாங்கள்லாம் எதுக்கு வந்து வரிசையில நின்னுட்டு இருக்கோம்... ம்... டீக்கடைக்காரனுக்கு கொடுக்கறதுக்காடா உனக்கு, 'லைசென்ஸ்' கொடுத்திருக்காங்க?''

''கையை எடு சார்... மருவாதி கெட்டுரும்,'' என்றான், பணியாளன்.

என்னுள் ஊடுருவியிருந்த சாத்தானின் ஓலம் அவலமானது. 'பேச்சு வார்த்தை போதும், 'ஆக் ஷனில்' இறங்கு...' என்று ஆணையிட்டது. மெதுவாகத் திரும்பி கூட்டத்தை நோக்கினேன்.

''நீங்கள்லாம் துட்டு குடுத்துத்தானேய்யா கார்டு வாங்கியிருக்கீங்க? உங்க முன்னாடியே உங்களை ஏமாத்திட்டு டீக்கடைக்காரனுக்கு பால் ஊத்துறான். பார்த்துட்டு கம்முன்னு இருக்கீங்களே, வெக்கமாயில்ல. த்துா... உங்க உடம்புல ஓடுறதெல்லாம் ரத்தமா, சாக்கடையா?''

கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

எனக்கு ஆதரவாய் ஆங்காங்கே குரல் எழுந்தாலும், ஒருவரும் வரிசையை விட்டு விலகி வரவில்லை. அவரவர் காரியத்தில் கண்ணாய் இருந்தனர். யார் எக்கேடு கெட்டு போனால் என்ன, நம் வரைக்கும் பால் கிடைத்தால் போதும் என்ற அலட்சியம்.

எனக்கு ஆத்திரம் தலைக்கேறி, ரத்த நாளங்கள் முறுக்கிக் கொண்டு, உடம்பு சூடேறத் துவங்கியது.

என் உடும்புப் பிடியையும் மீறி, நாயரின் துாக்கில் பாலை அளந்து ஊற்றினான், பணியாளன்.

பணியாளனின் பிடியைத் தளர்த்தி, அவனை விடுவித்து, நாயரின் கையிலிருந்த பால் நிரம்பிய துாக்கை சட்டென்று பிடுங்கி, தரையில் கவிழ்த்தேன்.

சாத்தானின் கோபம் தணிந்தது.

பால்பூத் பணியாளன், 'வெலவெல'த்துப் போனான். டீக்கடைக்காரனுக்கு ஊற்றிய பாலுக்கு அவன் இன்னும் பணம் வாங்காததால், 'லபோ திபோ' என்று கத்திக் கொண்டிருந்தான்.

நாயருக்கு என் அடியின் வலிமை தெரியும். இதற்கு முன் இரண்டு மூன்று முறை, என் பலப் பிரயோகத்தை உணர்ந்திருக்கிறான். ஆனாலும், இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவே தலை குனிந்து சென்றால், அவமானம் என்று அவன் கருதி இருக்க வேண்டும். அது, அவனது டீக்கடை வியாபாரத்தையும் பாதிக்கும் என்று உணர்ந்திருக்க வேண்டும்.

''டேய், பாலை கீழ கொட்டிட்டேல்ல. உன்னை விட மாட்டேன்டா. ஆபீசுக்கு போக, என் கடையைத் தாண்டித்தான்டா நீ போவணும். அப்ப கவனிச்சுக்கறேன் உன்னை,'' என்று கறுவியபடி, சைக்கிளை எடுத்து போனான், நாயர்.

''சர்தான் போடா.''

நான் திரும்பவும் வந்து வரிசையில் நின்றேன். சாத்தானின் கோபம் தணிந்து சமாதானமாகி இருந்தது.

பால் வாங்கி, வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது மணி, 6:45 ஆகி இருந்தது.

வாசலிலேயே நின்று என்னை வரவேற்றாள், மைதிலி.

''ஏங்க, மணி என்ன தெரியுமா?'' என்றாள்.

அவள் கேட்டதை கவனிக்காத மாதிரி, அவளைக் கடந்து உள்ளே நுழைந்தேன்.

குழந்தைகள் இரண்டும் இன்னும் துாங்கிக் கொண்டிருந்தன.

பின்னாலேயே துரத்தி வந்து, 'பிலுபிலு'வென்று வார்த்தைகளால் என்னை உலுக்கினாள், மைதிலி.

''ஏங்க, மணி, 7:00 ஆகப்போகுது. பால் வாங்கப் போனா வாங்கிட்டு வர வேண்டியது தானே. அங்க என்ன பிரச்னையை இழுத்துட்டு வந்துருக்கீங்க.

''ராத்திரி என்ன சொன்னீங்க, 'இன்னிக்கு சீக்கிரம் போகணும்'ன்னீங்கல்ல. இனி, எப்போ காபி போட்டு, டிபன் செய்யிறது... ஏன் நீங்க இப்படி இருக்கீங்க?''

அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது.

'சாரி, மிஸ்டர் சுந்தரேசன்... நாளையிலேர்ந்து, 'லேட்'டா வந்தீங்கன்னா, 'மெமோ' கொடுக்கறதைத் தவிர, எனக்கு வேற வழியில்லை. ப்ளீஸ், ட்ரை டு கம் இன் டைம்' என்று, நேற்று தான் கடைசி எச்சரிக்கை கொடுத்திருந்தார், ஆபீசர் அருணாசலம்.

நான் வேண்டுமென்றே, 'லேட்'டா போகலை. சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது.

வீட்டிலிருந்து ஆபீசுக்கும், ஆபீசிலிருந்து வீட்டிற்கும் கிளம்பினால், இரண்டு இடங்களுக்கும் நான் ஒழுங்காக வந்து சேரும் வரை, எதுவும் நிச்சயமில்லை.

என்ன செய்வது, ரோட்டிலோ, பஸ்சிலோ, ரயிலிலோ, ஹோட்டலிலோ, சினிமாத் தியேட்டரிலோ, பொது இடங்கள் எதிலும், என் கண் முன்னே நிகழும் அநியாய, அக்கிரமங்களை கண்டும் காணாதது மாதிரி போக, என் மனம் ஒப்புவதில்லை; மனசாட்சியும் இடம் கொடுப்பதில்லை.

அந்த நேரங்களில் மனதிலிருந்து ஒரு சாத்தான் புறப்பட்டு, என்னை ஆட்டிப் படைக்கும். விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், களத்தில் இறக்கி விடுகிறது. பாதிக்கப்படுபவருக்கு ஆதரவாக நான், களத்தில் இறங்கி போராடி, அநீதிக்கு எதிராய் பொங்கியெழுந்து நிற்பேன். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் எனக்குத் துணையாக நிற்கவில்லையே என்று கூட நான் வருந்துவதில்லை. 'அட்லீஸ்ட்' நன்றி சொல்லக் கூட, அவர்களுக்கு மனம் வருவதில்லை.

'ஏன் சார் இப்படி, 'பீல்டு'ல இறங்கி பேரைக் கெடுத்துக்கறீங்க?' என்று விமர்சிக்கும் போது, பற்றிக் கொண்டு வரும்.

இப்படி, எருமை மாடு கணக்காய் எப்போது மாறத் துவங்கினர், மனிதர்கள்.

குழந்தைகள் தவறுதலாக பந்தைத் துாக்கி நம் மீது போட்டு விட்டால், போனால் போகிறது என்று மன்னித்து விடலாம். ஒரு குடிகாரன் நடுரோட்டில் நின்று கொண்டு, போகிற, வருகிறவர்கள் மீதெல்லாம் கல்லை விட்டெறிந்து கொண்டிருந்தால், என்னால் ஒதுங்கிப் போக முடியாது.

நாலு அறை விட்டு, அவன் போதையை தெளிய வைத்து விட்டு தான், அடுத்த அடியை எடுத்து வைப்பேன்.

அப்படித்தான் போன ஞாயிற்றுக்கிழமை, நானும், என் அலுவலக சகா முனியாண்டியும், சினிமாவுக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன் இருக்கையிலிருந்த ஒருவன், தியேட்டருக்குள் புகை பிடிக்க ஆரம்பித்தான். முதலில் நான் அவனிடம் மரியாதையாகத் தான் கூறினேன்.

'என் இஷ்டம், நான் குடிப்பேன். அதைக் கேட்க நீ யாரு?' என்றான்.

எனக்குள் சாத்தானின் ஓலம் கேட்க துவங்கியது.

'போனாப் போகுது, விடுங்க. படத்தை பாருங்க சார்...' என்றது, சுற்றியிருந்த கூட்டம்.

என்னால் இருக்க முடியவில்லை. எழுந்து, அவன் மண்டையில் ஓங்கி அடித்தேன்.

தெலுங்கில், 'தேவுடா...' என்று கத்திக் கொண்டே, சிகரெட்டை துார எறிந்து விட்டு, 'எக்ஸிட்' கதவு அருகே போய் நின்று, 'பைட்ட ராரா சூஸ்தாமு...' என்று சொல்லிச் சென்றான்.

நானும், முனியாண்டியும் படம் பார்த்து விட்டு, கால் மணி நேரம் தியேட்டர் வாசலிலேயே அவனுக்காக காத்திருந்து, ஏமாந்து திரும்பினோம்.

சீக்கிரமாக குளித்து முடித்து, தயாரானேன்.

பூஜை அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்குக்கு, அவசர கும்பிடு போட்டேன். மைதிலி, ஆவி பறக்க தட்டில் போட்டு வைத்திருந்த இட்லியை, மிளகாய் பொடியோடு வழித்தெடுத்து வாயில் போட்டபடியே, மணி பார்த்தேன், 8:30.

அப்பாடா, நிதானமாக நடந்தால் போதும், 9:02 மணிக்கு கிளம்பும், ரயிலைப் பிடித்து விடலாம். 9:50க்குள் ஆபீஸ் போய் விடலாம்.

மானசீகமாய் கணக்குப் போட்டபடியே, சீசன் டிக்கெட்டை எடுத்து சட்டை பையில் வைத்து அலுவலகம் கிளம்பினேன்.

''சாயங்காலம் வரும்போது ஞாபகமா காபிப் பொடி வாங்கிட்டு வாங்க...'' என்று சொல்லி வழியனுப்பினாள், மைதிலி.

''உம்...'' என்று சொல்லி கிளம்பினேன்.

வழியில் எந்த பிரச்னையும் இல்லை. ரயில், சரியான நேரத்தில் புறப்பட்டு, 9:30 மணிக்கு நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தடைந்தது. மாடிப்படி ஏறி இறங்கி, கூட்டத்தில் புகுந்து நெளிந்து, வளைந்து, காத்திருந்த பஸ்சில் முண்டியடித்து நான் ஏறியபோது, மணி 9:40. நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் பஸ் நின்ற போது, மணி 9:50.

மனசுக்கு திருப்தியாக இருந்தது. இதோ சுரங்கப் பாதையை இறங்கி, ஏறி கடந்து விட்டால், அலுவலகம் தான். 'மிஸ்டர் அருணாசலம், கால் மணி நேரம் முன்னாலேயே வந்துட்டேன். இப்ப என்ன சொல்றீங்க?' என்று கேட்கலாம்.

சுரங்கப் பாதையில் இறங்கியாயிற்று. பாதைக் கடந்து, படிகளில் ஏறும்போது தான், அந்தக் காட்சி என் கண்களில் பட்டு, கால்களைக் கட்டிப் போட்டது. அங்கே, அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியும், தேவசகாயமும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தேவசகாயத்தை, கிருஷ்ணமூர்த்தி சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருந்தான். தேவசகாயம் திரும்பத் திரும்ப அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணமூர்த்திக்கு பார்வை கிடையாது. ஊனமுற்றோர் கோட்டாவில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தான். தேவசகாயத்துக்கு வயது, 55 இருக்கும். இன்னும் மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறார்.

ஒரு சீனியர் அலுவலரை, பார்வையற்ற கிருஷ்ணமூர்த்தி, சுரங்கப் பாதை படிக்கட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது, என் உணர்ச்சிகளை உசுப்பியது.

சாத்தான் மெதுவாக விழித்து, விஷயம் என்னவென்று அறிந்து வரப் பணித்தது.

நான் மெதுவாக தேவசகாயத்தை அணுகி, ''என்ன சார் விஷயம்?'' என்றேன்.

''அட ஒண்ணுமில்ல தம்பி, படிக்கட்டு நடுவுல வந்துட்டிருந்தான். இவனுக்குத்தான் பார்வை கிடையாதே, எவனாவது வந்து மோதி தள்ளிட போறான்னு பிடிச்சு ஓரமா ஒதுக்கி விட்டேன். அதுக்குப் போய் இந்த பேச்சு பேசுறான்,'' என்றார், தேவசகாயம்.

எங்களைச் சுற்றி ஒரு கூட்டம் நின்று, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணமூர்த்தி அகம்பாவம் பிடித்தவன் என்பதை, பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். இருந்தாலும், இவனுக்கு இவ்வளவு ஆணவம் கூடாது.

'நோ கான்வர்சேஷன். ஒன்லி ஆக் ஷன்...' என்று, ஆணையிட்டது சாத்தான்.

அடுத்த வினாடி ஆக்ரோஷமாக எழுந்த என் வலது கரம், கிருஷ்ணமூர்த்தியின் இடது கன்னத்தை முத்தமிட்டது. சரிந்து விழ இருந்த கிருஷ்ணமூர்த்தியை தாங்கிப் பிடித்தேன்.

''ஏன் சார் என்னை அடிச்சீங்க?''

''ஏன்டா, உனக்கு நல்லது தானே பண்ணினாரு. தேவசகாயம் சாரை, ஏன் திட்டிட்டிருக்கே?''

''விஷயம் புரியாம பேசாதீங்க, சார்.''

''என்னடா விஷயம் புரியணும்?''

''சார், கண் தெரியாதவங்களுக்குன்னு சில சைக்காலஜி இருக்கு.''

''என்னடா சைக்காலஜி... புடலங்கா?''

''எங்களை, 'கைட்' பண்றவங்களை, நாங்க தான் புடிச்சுக்குவோம். அவங்க, எங்களை புடிச்சுக்கிட்டா, எங்களால் எதுவும் பண்ண முடியாது. அவரு என்னை புடிச்சு இழுத்தார். அதான் கத்தினேன்,'' என்றார்.

பொட்டிலறைந்தது மாதிரி இருந்தது, எனக்கு. அவசரப்பட்டு அடித்திருக்க கூடாதோ!

சாத்தான் சுருண்டு படுத்துக் கொண்டது.

மணி, 10:15. அலுவலக வாசலில், அருணாசலம் காத்துக் கொண்டிருந்தது, நிழலாய் தெரிந்தது.

எஸ். கடம்பூரான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us