PUBLISHED ON : நவ 07, 2021

முன்கதை சுருக்கம்: மாடியிலிருந்து கேட்கும் சலங்கை ஒலி சத்தம், தனக்கு தொந்தரவாக இருப்பதாக அர்ச்சனாவிடம் பிரச்னை செய்தான் விக்ரம். வீட்டு உரிமையாளர், விக்ரமை வெளியே தள்ளி, 'அட்வான்ஸ்' பணத்தை அவன் மீது விட்டெறிந்தார். விக்ரம் நினைவாகவே இருந்தாள், அர்ச்சனா -
கோல்கட்டா காளி கோவிலில் பிரார்த்தனை முடித்து, படிக்கட்டுகளில் இறங்கி வந்தபோது, படியேறி வந்த அர்ச்சனாவை பார்த்தான், விக்ரம்.
'பராசக்தி...' என, தனக்குள் லேசாக சிரித்து, கோவில் கோபுரத்தை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டான். அவள் வரும் பாதையிலேயே, கண்ணில் படும்படி வந்தான்.
விக்ரமை கவனித்ததும், ஒரு நிமிடம் நின்றாள், அர்ச்சனா.
அவன் கவனிக்காதது போல் இறங்கிக் கொண்டிருந்தான்.
''ஹலோ,'' சத்தமாக கூப்பிட்டாள்.
நின்றவன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, யார் என்கிற மாதிரி தேடினான்.
இறங்கி அவனருகில் வந்தவள், அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவன் ஞாபகம் வராத மாதிரி யோசித்துவிட்டு, பிறகு அவளை பார்த்து விரக்தியாக சிரித்தபடி, ''டான்ஸ் டீச்சர்?''
''ஆமா.''
அவளை பவ்யமாக கும்பிட்டு விட்டு, இரண்டு படிகள் இறங்கும்போது, ''உங்ககிட்ட பேசணும்,'' என்றாள், அர்ச்சனா.
தாடையை சொறிந்தபடி, ''என்ன பேசணும்?'' என்றான்.
அங்கிருந்தே அவள் காளியைப் பார்த்து கும்பிட்டு விட்டு,
''கொஞ்சம் தனியா எங்கேயாவது உட்கார்ந்து பேசலாமா... பரவாயில்லையா?''
இருவரும் ஒரு மர நிழலில் அமர்ந்தனர். பேச்சை ஆரம்பிக்காமல் கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தனர்.
''ஐயாம் ஸாரி,'' என்றாள், அர்ச்சனா.
''எதுக்கு?'' என்றான், எங்கோ பார்த்தபடி.
''அன்னிக்கு உங்களுக்கு நடந்த அவமானத்துக்கு அப்புறம், நான் ரொம்ப வருத்தப்பட்டேன். 'என்ன உங்களுக்கு பிரச்னை'ன்னு பொறுமையா கேட்டிருக்கலாம்... கேட்கல,'' என்றாள்.
''குழந்தைங்க முன்னாடி கத்தாம, 'கிளாஸ் முடிஞ்சதும் உங்ககிட்ட பேசணும்'ன்னு, நானும், 'டீசன்ட்'டா சொல்லியிருக்கலாம்,'' என்றான்.
''ஹவுஸ் ஓனர் உங்களை மழையில் தள்ளினபோது, சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேனே... ஏன் அவரை தடுக்கல... அது எவ்வளவு பெரிய தப்பு...''
''அந்த வீட்டுக்கு நான் குடி வந்தது தப்பு. உங்களுக்கு பெரிய தர்ம சங்கடத்தை உண்டாக்கிட்டேன்.''
''உங்க நிலைமையில் யாரா இருந்தாலும், என்னை மறுபடி பார்க்கறபோது, முகத்தை திருப்பிக்கிட்டு பேசாம போவாங்க... ஆனா, நீங்க -தனியா பேசணும்ன்னு சொன்னதும் கூட வந்துட்டீங்க. கிரேட்,'' என சொல்லும் போது, அர்ச்சனாவின் கண்கள் கலங்கியது.
'கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறாள். வெரி குட்...' என, நினைத்துக் கொண்டான்.
''மறுபடியும் உங்க கண்ணுல பட்டு, உங்க மனசை வருத்தப்பட வெச்சிட்டேன். ஸாரி... வேற ஏதாவது பேசுவோம்; இளநீர் சாப்பிடலாமா?'' என்றான்.
இளநீர் சாப்பிட்டனர்.
அர்ச்சனா ஸ்கூட்டியை தள்ளியபடி வர, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
''இப்ப எங்க இருக்கீங்க?''
''நேதாஜி நகர்ல ஒரு மேன்ஷன்ல.''
''அந்த ஏரியா ரொம்ப நெருக்கமா இருக்குமே?''
''ஒரு மூணு மாசம் தான். அப்புறம் கிளம்பிடுவேன்.''
''என்ன வேலை?''
''டாக்குமென்டரி பிலிம் மேக்கர்.''
''கோல்கட்டா பத்தி டாக்குமென்டரியா?''
''இல்லை... ஒவ்வொரு பாஷைலேயும் சிறந்த இலக்கியவாதிகள் இருப்பாங்க இல்லையா? அவங்கள் பத்தின டாக்குமென்டரி.''
''இங்க யாரு?''
''ஆஷா பூர்ணா தேவி தெரியுமா?''
''ம்ஹும்!''
''வங்காள இலக்கியத்துல மறக்க முடியாத பெயர். நிறைய எழுதியிருக்காங்க. நடுத்தர வர்க்க பிரச்னைகள் தான் முக்கியமா இருக்கும். நிறைய விருது வாங்கினவங்க. கோல்கட்டாவுல இருந்துகிட்டு எப்படி இதை தெரிஞ்சுக்காம இருக்கீங்க?''
அவனையே பார்த்தபடி, ''ஆடாது அசங்காது வா கண்ணா... யார் எழுதினது தெரியுமா?'' கேட்டாள், அர்ச்சனா.
''தெரியாது.''
''அஷ்டபதி பாடினது யார் தெரியுமா?''
''தெரியாது.''
''டாக்குமென்டரி எடுக்கறவர், எப்படி இதை தெரிஞ்சுக்காம இருக்கீங்க?''
சில வினாடிகள் எதுவும் பேசாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்ட பின், ஒரே நேரத்தில் சிரித்து விட்டனர்.
''உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது,'' என்று சிரித்தபடி சொன்னான், விக்ரம்.
''ஏன் உங்களுக்கு சலங்கை சத்தம் பிடிக்காது?''
அர்ச்சனா கேட்டதும், பட்டென்று விக்ரமின் சிரிப்பு அடங்கியது. முகம் மாறியது. லேசாக தலையை ஆட்டிக் கொண்டான். அவனிடம் சின்ன பதற்றம் தெரிந்தது.
''இல்லை... சொல்ல வேண்டாம்னா பரவாயில்லை.''
''சொல்றேன்.''
அமைதியாக இருந்துவிட்டு, நிதானமாக பேச ஆரம்பித்தான், விக்ரம்...
''எங்க அப்பா - அம்மாவுக்கு நாங்க ரெண்டு பேர். நான், என் அக்கா ப்ரியா. ப்ரியா ரொம்ப புத்திசாலி. படிப்பு, பாட்டு, நடனம் எல்லாத்துலயும் அவ ஸ்கூல் படிக்கிறபோதே அரங்கேற்றம் முடிஞ்சு, நிகழ்ச்சி எல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டா.
''எங்க போனாலும் நானும், அவளும் ஒண்ணா தான் போவோம். செல்லமா சண்டை போட்டுக்குவோம். என்னை விட ரெண்டு வயசு பெரியவ. காலேஜ் சேர்ந்தா. அவளுக்கு நிறைய நிகழ்ச்சிகள் வர ஆரம்பிச்சது. அவளுக்கு எதிர்காலம் நடனம்தான்னு வீட்டுல எல்லாரும் முடிவு பண்ணிட்டோம்.
''அவளும், 'நீயும் மிருதங்கம் கத்துக்கோயேன். என் நிகழ்ச்சியில் வாசிக்கலாம்'ன்னு சொல்லுவா... 'வேணாம் கா, நான் உனக்கு கார் டிரைவர்'ன்னு சொல்லுவேன். ஒரு செப்டம்பர் மாதம். காரைக்குடில அக்காவோட நிகழ்ச்சி. நானும், அக்காவும் மட்டும் தான் போனோம். நான் தான் காரை ஓட்டினேன்,'' என்று நிறுத்தினான்.
அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், அர்ச்சனா.
அவன் தலையை குனிந்து கொண்டிருந்தான். பின் மெதுவாக நிமிர்ந்து தண்ணீர் குடித்து, கண்களை துடைத்துக் கொண்டான்.
''காரைக்குடி கச்சேரி பிரமாதமா நடந்தது. பாராட்டு, பொன்னாடை, பதக்கம்னு, ஏகப்பட்ட திருஷ்டி. 'ரொம்ப இருட்டிருக்கு, காலைல கிளம்பலாமா?' என்றாள், அக்கா. 'இல்லைக்கா... இரவு நேரம் ரோடு காலியா இருக்கும் போயிடலாம்'ன்னு கட்டாயப் படுத்தினேன்.
''இரவு, 10:45 மணிக்கு கிளம்பினோம். அவளை, மொபைல் போன்ல கூப்பிட்டு யார் யாரோ பாராட்டிக்கிட்டே இருந்தாங்க. நன்றி சொல்லி சொல்லியே சோர்ந்து போயிட்டா. அதிகாலை, 2:00 மணி. உளுந்துார் பேட்டைகிட்ட ஒரு ஹோட்டல், ரோட்டுக்கு வலது பக்கம் இருந்தது. நாங்க இடது பக்கம் போய்க்கிட்டு இருந்ததுனால காரை இடது பக்கமே நிறுத்திட்டு, ரோட்டை கடந்து போனோம்.''
அர்ச்சனாவுக்கு அவன் சொல்லப் போவதை யூகித்து, ஒரு சின்ன பதட்டம். அவன் தொடர்ந்தான்...
''ஹோட்டலில் டீ சாப்பிட்டோம். 'அடுத்த மாசம் தஞ்சாவூர் கோவில்ல நவராத்திரி விழா. அதுக்கு பிளான் செய்யணும். நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாள் தங்கியிருந்து கோவில் எல்லாம் பார்த்துட்டு தான் வரணும்'ன்னு சொன்னா... பேசிக்கிட்டே ரோட்டை கடந்து, காருக்கு வந்துட்டோம்.''
அர்ச்சனாவின் பதட்டம் கொஞ்சம் தணிந்தது. விக்ரம் மேலும் பேசினான்.
''அப்போது, 'மொபைலை ஹோட்டல்லேயே வெச்சிடேன் போலிருக்கு டா'ன்னு சொல்ல, 'இருக்கா... நான் போய் எடுத்துட்டு வரேன்' என்றேன். 'பார்த்துடா'ன்னு சொன்னாள்...''
விக்ரம் பேச முடியாமல் அமைதியானான். தலையை கோதி விட்டு கொண்டான். முகத்தை கையால் அழுத்தமாக துடைத்துக் கொண்டான். அமைதி நிலவியது.
''இன்னொரு காபி சொல்லட்டுமா?'' கேட்டாள், அர்ச்சனா.
வேண்டாம் என கையை அசைத்தான். அவள் காத்திருந்தாள்.
தொண்டையை கனைத்தபடி ஆரம்பித்தான்...
''நாங்க ரெண்டு பேரும் நின்ன டேபிள்லேயே தான் மொபைல் போன் இருந்தது. எடுத்துக்கிட்டு ஹோட்டல விட்டு வெளியே வர்றதுக்குள்ள ஒரு பெரிய சத்தம்.
''வேகமா வந்த லாரி, நான் ரோட்டை கடந்து வர்றதுக்குள்ள என் கண் முன்னாடியே நின்னுக்கிட்டிருந்த எங்க வண்டியை இடிச்சு தள்ளிட்டான். ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிஞ்சு போச்சு, 'ப்ரியா ப்ரியா'ன்னு கத்தினேன்.
''மேடைல ஆடி, கை தட்டல் வாங்கினவ, சந்தோஷமா போன்ல பேசிக்கிட்டு வந்தவ, ஹோட்டல்ல டீ குடிக்கும்போது அடுத்து என்னென்ன ப்ளான்னு குழந்தை மாதிரி சொன்னவ, ரத்த வெள்ளத்துல கிடந்தா. சலங்கை சத்தம் ஓஞ்சு போச்சு...'' என்றான்.
ஆறுதலாக விக்ரமின் கையை பிடித்தாள், அர்ச்சனா.
— தொடரும்
கோபு பாபு
