PUBLISHED ON : நவ 07, 2021

மரம் நட்டவன் தண்ணீர் ஊற்றுவான்!
கண் மூடி படுத்திருந்தார், பெரியவர் சாம்பமூர்த்தி. 65 வயதிலேயே, 80 வயதுத் தோற்றம். தனிமை, அடிக்கடி உடல் நலக் குறைவு, ஏனென்று கேட்க ஆள் இல்லாத கொடுமை. மனைவி இறந்ததிலிருந்து இந்த வாழ்வு தான்.
சில சமயம் தனிமை, இனிமை; சில சமயம், கொடுமை. தலை வலித்தால் கூட ஏனென்று கேட்க நாதியில்லை. குழந்தை இல்லை. அண்ணா பையன்களும், தம்பி பையன், பெண்ணும், சித்தப்பா, பெரியப்பா என்று, பாசமாகத்தான் இருந்தனர்.
கிராமத்தில், பெரியப்பாவின் அப்பாவான, இவர்களின் தாத்தா வீடு, பூர்வீக சொத்தாக இருந்தது. பெரியப்பா காலத்திற்குப் பிறகு இவர்களுக்கு பங்கு வரும். 40 சென்ட் இடத்தில் தோட்டம், துரவுமாக, சந்திரமுகி படத்தில் வரும் பங்களா மாதிரி பிரம்மாண்டமான வீடு. அந்த வீட்டை பராமரிக்க, பழனி என்ற வேலைக்காரனை ஏற்பாடு செய்திருந்தனர். அவனுக்கு, அவுட் ஹவுஸில் வீடு. இது, பழைய கதை.
இப்போது தான் பிரச்னை ஆரம்பம்... பெரியவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிந்து, 'வீல் சேர், வாக்கர்' என ஆன பின், உறவுகள் ஒதுங்கினர். போதாக்குறைக்கு மயங்கி விழுந்து, 'ப்ரஷர்' அதிகமாகி, ஐ.சி.யூ.,வில் சேர்த்து, ஏக செலவாகி விட்டது. 'ஓல்ட் ஏஜ் ஹோமில்' சேர்க்க மறுத்தனர். அப்படியே சேர்த்தாலும் செலவு அதிகமாகும்.
மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யும்போது, ''பெரியவருக்கு மூளையில், 'ப்ளூயிட் பார்ம்' ஆகி இருக்கு. உறிஞ்சி எடுத்தாலும் மீண்டும் ஊறும். இந்த வயதில் ஆபரேஷன் செய்ய முடியாது. மருந்து மாத்திரைகள் தான். துாக்கம் கெடக் கூடாது. துாக்க மாத்திரை அளவா தரணும். எல்லாம் விபரமா எழுதியிருக்கேன்.
''மற்றபடி அவர், 'ஹார்ட்' ஓ.கே., மூளை சம்பந்தப்பட்ட வியாதி. அதனால், மாத்தி மாத்தி பேசுவார்; பயப்பட வேண்டாம். அவர் என்ன பேசினாலும் பேசாம கேட்டுக்கங்க. அதுதான் அவருக்கு மருந்து,'' என்றார், டாக்டர்.
தலையாட்டினர்.
சொத்து வருகிறது என்று எத்தனை தான் செலவழிப்பது; மறுபடியும் கிழவரை அழைத்துப் போய் உதவிக்கு ஆள் போட்டு பராமரிப்பது தொடர்பாக, மந்திராலோசனைக் கூட்டம் நடந்தது.
''அகிலா, உன் வீடு தான் பெரிசு... பெரியப்பாவைக் கூட்டிட்டுப் போயேன்...''
''சும்மா இரு சந்துரு. என் பெண் கல்யாணமாகி அஞ்சு வருஷத்துக்கு பிறகு, இப்பத்தான் உண்டாகியிருக்கா... அமெரிக்காவுக்கு போகணும்; விமான டிக்கெட் வாங்கி அனுப்பிட்டா. எப்ப வேணா விசா வரலாம். என்னால எப்படி பெரியப்பாவைக் கூட்டிட்டு போக முடியும்... ஏன், நீ கூட்டிட்டுப் போயேன்.''
''சும்மா இரு... எனக்கு எப்ப வேணா, 'டிரான்ஸ்பர்' வரலாம். நான் வீட்டை தயார் பண்ணுவேனா, இவரைக் கூட்டிட்டுப் போவேனா? அதுவும் நோயாளி வேற...'' தன் பங்குக்குச் சொன்னான், பஞ்சு.
''ஒய்ப், எனக்கு சாப்பாடு போடறதே ஜாஸ்தி. இந்தக் கிழவரை கூட்டிட்டுப் போனா அவ்வளவு தான்...'' என்றான், சந்துரு.
இவ்வாறு விவாதம் நடந்தது. கடைசியாக எல்லாரும் சேர்ந்து, கிராமத்தில் இருக்கும் தாத்தாவின் பங்களாவில் பெரியவரை அழைத்து போய் விட முடிவு செய்தனர். ஏற்கனவே பழனி இருக்கிறான். சமையலுக்கும், பெரியவரை பாத்ரூம் கூட்டிப் போகவும் ஒரு ஆளை ஏற்பாடு செய்யலாம்.
கிராமம் என்பதால் அதிக செலவிருக்காது. தேவைப்பட்டால் மாதம் ஒருமுறை டாக்டர், 'செக் அப்'க்கு ஏற்பாடு செய்யலாம். இவர்களில் யாராவது ஒருவர் முறை வைத்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பெரியவரை பார்த்துட்டு, ஆட்களுக்கு பணம் கொடுத்துடலாம். கிழவர் ரொம்ப காலம் இருக்க மாட்டார். அதன்பின், வீட்டை விற்று, பங்கு போட்டுக் கொள்ளலாம் என முடிவானது.
கிழவரை அழைத்துப் போகும்போது, அரை மயக்கத்தில், ''என்னை எங்கே கூட்டிட்டுப் போறீங்க?'' என்றார்.
'நம்ம வீட்டுக்கு...' என்றனர்.
''அப்ப சரி...'' என, துாங்க ஆரம்பித்தார், பெரியவர்.
கிராமத்து வீட்டுக்கு வந்து, ஒரு மாதமானது. விசுவாசத்துடன் அன்பாகப் பார்த்துக் கொண்டான், பழனி. சமையலுக்கு ஒரு அம்மா. பாத்ரூம் அழைத்துப் போக ஒரு ஆள்.
கைகளுக்கு பயிற்சியாக, கையில் எடுத்துச் சாப்பிடக் கூறினர். அப்படியே சாப்பிட்டார். அடிக்கடி, 'குழந்தைகள் எங்கே...' என்று கேட்க, 'மருந்து வாங்க போயிருக்காங்க... டாக்டரைக் கூப்பிடப் போயிருக்காங்க...' எஜமானர்கள் சொல்லச் சொன்னதை சொன்னான், பழனி.
திடீரென்று வாய் ஓயாமல் பேசுவார். பிறகு, ஒரே துாக்கம். பழனியையும், ஆயாவையும் உட்கார்த்தி வைத்து, பழைய கதைகள் சொல்லுவார்.
'நான் காலேஜிலே படிக்கிறபோது, என்னை எத்தனை பேர் காதலிச்சாங்க தெரியுமா...'
'அப்டீங்களா எசமான்?' சிரிப்பை அடக்கியபடி கேட்பான், பழனி.
'ஆமாம்... எனக்கு காதல் மன்னன்னு பேரு தெரியுமா?'
உள்ளே போய் சிரிப்பாள், ஆயா.
'பெரியவர் சீக்கிரம் சாப்பிட வந்தால் வேலையாவது முடியும். இப்போது பார்த்து ஞாபகம் இல்லையோன்னு பாடுதே...' என நினைத்துக் கொள்வாள்.
திடீரென்று பழனியை பார்த்து, 'நீ யார்?' என்பார்.
'என்னைத் தெரியலீங்களா எசமான்... நான் பழனி...'
'பழனி போக வேண்டியது தானே இங்கே என்ன பண்றே?'
தான் பழனி போனது, படி ஏறத் திணறியது, யானை பாதையில் ஓடியது என, ஆயாவையும், பழனியையும் உட்கார வைத்து பழைய கதையைக் கூறுவார்.
ஒருநாள், 'வீடு ரொம்ப பழசாயிடிச்சு... 'ரிப்பேர்' பண்ணணும். உனக்கு யாராவது இன்ஜினியரை தெரியுமா?' என்றார்.
'தெரியாதுங்க ஐயா...'
'சரி, பசங்க வந்தா நான் சொன்னதா சொல்லி, 'ரிப்பேர்' செய்ய ஏற்பாடு பண்ணச் சொல்லு...' எனக் கூற, வேதனையுடன் தலையசைத்தான், பழனி.
'டாக்ஸி ஏற்பாடு பண்ணேன். நாமளே போகலாம்...'
'அதுக்குத்தான் பெரிய ஐயா போயிருக்கார்...' என்றான், பழனி.
'யார் சந்துருவா? அவனுக்கு என் மேலே தனி பாசம். என்ன இருந்தாலும் பெரியப்பா இல்லையா... பெரியப்பாவா, சித்தப்பாவா?' என்றார்.
திடீரென்று ஒருநாள், 'என்னை வீல் சேருல வைச்சு வீடு முழுக்க சுத்திக் காட்டு, நான் பார்க்கணும்...' என்றார்.
'பெரிய வீடுங்க ஐயா... குப்பையா இருக்கும்.'
'வீட்டை சுத்தமா வைச்சுக்கணும். இனிமே, தினம் அறையையும் கூட்டி புழங்கினா குப்பை சேராது...'
ஆயா சிரித்தாள்.
'ஏய், ஏன் சிரிக்கறே... உனக்கு சிங்காரியை தெரியுமா?'
'சிங்காரியா... யாருங்க எசமான்?'
'அது பெரிய கதை. எனக்கு இப்போ துாக்கம் வருது. அப்புறமா சொல்றேன்...' என சொல்லி, துாங்க ஆரம்பித்தார்.
அன்று...
சமையல்கார அம்மா சீக்கிரமே காலை டிபன் செய்து, 'ஹாட் பேக்'கில் வைத்து, போய் விட்டாள். பெரியவருக்கு காலை சிற்றுண்டிக்கு நேரமாகியது.
பெரியவரை சாப்பிட அழைத்து, வாசலில் இருந்த மந்தாரை இலைகளை பறித்து, தையல் இலையாகத் தைத்து அதில் பரிமாறினான், பழனி.
'ப்ளேட் இல்லையா?'
'இன்னும் கழுவலை எசமான். மந்தாரை இலையிலே சாப்பிட்டா உடம்புக்கு நல்லது...' என்றான், பழனி.
'மந்தாரை இலையா?'
'ஆமாம் எசமான்... வாசல்ல பெரிய மரம் இருக்குல்ல, அதிலே பறிச்சேன்...'
'மந்தாரை மந்தாரை...' தனக்குள் பேசியவர், 'என்னை இந்த வீடு முழுக்கக் கூட்டிப்போ...' என்றார்.
அழைத்துப் போனான், பழனி.
'இந்த ரூம்ல சோபா இருந்ததுல்ல?'
வீட்டை ஒழிக்கும்போது, எல்லா பர்னிச்சர்களையும் விற்று விட்டனர், பிள்ளைகள்.
'இங்கே இருந்த சோபாவைச் சுத்தி சுத்தி தான் நானும், சிங்காரியும் ஓடிப்பிடிச்சு விளையாடுவோம்... ஒரு தடவை எலி ஒண்ணு ஓட, சிங்காரி பயந்து எம் மேலே விழ, நான் அவள் மேலே விழ, ஏக ரகளை... கண்ணாடி இருக்கா?' என்றார்.
கைக் கண்ணாடியை பழனி எடுத்து தர, அதில் முகம் பார்த்தார்.
'எனக்கு முன் பல் துருத்திட்டு இருந்துச்சே... என்னாச்சு? அதென்ன படம், கல்யாண ராமன் கமலஹாசன் மாதிரி... சிங்காரி கூட என்னை, 'பல்யாண ராமா'ன்னு கேலி பண்ணுவா...' என்றார்.
விழித்தான், பழனி.
'இங்க மந்தார மரம் இருக்குன்னு சொன்னியே...'
'ஆமாங்க எசமான்... அந்த மரத்தோட இலை, மொட்டு, வேர் எல்லாமே மருத்துவ குணம் கொண்டது. அதை கஷாயம் வைச்சுக் குடிச்சா எல்லா வியாதிக்கும் நல்லது. நம்ம சமையல்கார அம்மா கூட உங்களுக்கு தினமும் அந்தக் கஷாயம் கொடுப்பாங்க...' என்றான்.
'என்ன சொன்னே, கஷாயமா... எனக்கா?' என்றவர், பழனியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
திகைத்தான், பழனி.
'இனிமே யாரும் அந்த மரத்திலிருந்து காயோ, மொட்டோ எதுவும் பறிக்கக் கூடாது. தெரிஞ்சுதா?' தலையாட்டினான், பழனி; உறங்கினார், பெரியவர்.
'பல்லா பல்யாண ராமா...' யாரோ சிரித்தனர்.
'யார்... யாரது?'
'என்னைத் தெரியலை நான் சிங்காரி...'
'என்னை கிண்டல் பண்றேல்ல... பார்த்துட்டே இரு... இப்படி துருத்திட்டு இருக்கற முன் பல்லை எடுத்துட்டு, வரிசையான பல் செட்டு வைச்சுட்டு வந்து நிப்பேன் பாரேன்...'
சிரிப்புச் சத்தம்...
'காதல் வந்துரிச்சுன்னு பாடப் போறியா?'
'சீ சீ... உன்னை யார் காதலிப்பா... நீ என்ன பெரிய இவளோ?'
'நீ உன் பல்லை சரி பண்ணு... அப்புறமா காதலிக்கறேன்...'
'ப்ராமிஸ்?'
'நீ, மெட்ராஸ் போகப் போறியாமே?'
'ஆமா... மேலே படிக்க வேண்டாமா?'
'சரி, ஒரு மந்தாரைச் செடி இருக்கு. நாம ரெண்டு பேருமா நடலாம்...'
'ஆமா, நான் மெட்ராஸ் போயிட்டா யார் செடிக்குத் தண்ணி ஊத்துவாங்க?'
'கவலைப்படாதே, நான் ஊத்தறேன். இந்தச் செடியை மரமாக்கி, நீ இங்க வரும்போது பூவும், காயும் பூத்துக் குலுங்கற மரமா வளர்த்து உனக்குக் காட்டறேன்...'
திடீரென்று விழிப்பு வந்து, ''பழனி...'' என்று இரைந்தார்.
கீழே உறங்கிக் கொண்டிருந்த பழனி, திடுக்கிட்டு கண் விழித்தான்.
''ஐயா...''
''அந்த மந்தாரை மரத்தைப் பார்க்கணும்... கூட்டிட்டுப் போ...''
''இப்போ காலை, 5:00 மணி தான் ஆகுது. விடியட்டும் ஐயா...''
''இல்லை, இப்பவே பார்க்கணும்.''
வீல் சேரில் பெரியவரை அமர்த்தி அழைத்து போனான், பழனி.
மந்தாரை மரத்தடிக்குப் போய், போர்டிகோ விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். செடியாக இருந்த மரம், பூவும், கிளையுமாக பெரிதாக வளர்ந்து, மரமாகி நின்று கொண்டிருந்தது.
''யார் தண்ணீர் ஊற்றினர்?''
அப்போது, வாசல் கேட்டைத் திறந்து, ஒரு சிறுமி உள்ளே நுழைந்தாள்.
''யார் யாரது... சிங்காரியா?''
''ஐயா... இது நம்ம பால்காரியோட மகள். தினம் பால் ஊத்த வரும். இதுதான் மரத்துக்கும் நாள் தவறாது தண்ணீர் ஊத்தும்.''
அந்தப் பெண்ணை அருகில் அழைத்து, ''உன் பேர் என்ன?'' என்றார்.
''மந்தாரை.''
''உங்கம்மா இருக்காங்களா?''
''இறந்துட்டாங்கய்யா...''
''என்ன பேர்?''
''சிங்காரி.''
சிங்காரியுடன் ஓடி விளையாடி, கால் தடுக்கி தவறி விழுந்து, இவரின் துருத்திக் கொண்டிருந்த முன் பல் அவள் நெற்றியில் பதிந்து, ரத்தம் வர...
'ஐய்யய்யோ...' என, கதறி அவள் ஓட...
'ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு...' இவர் ஓட...
காட்சிகள் மறைந்து, எதிரில் அந்தச் சிறு பெண். அவள் நெற்றியில் தழும்பு.
காற்றடித்து, மந்தாரை மலர்கள் காற்றில் பறந்து இவர் காலடியில் விழுந்தன.
குனிந்து ஒரு மந்தாரை மலரை எடுத்து மென்மையாகத் தடவி முத்தமிட்டபடியே வீல் சேரில் சரிந்தார், பெரியவர்.
''எசமான்...'' அலறினான், பழனி.
சாரங்கி
