PUBLISHED ON : ஜன 08, 2017

குற்றாலம் ஐந்தருவி புறவழிச்சாலையில் உள்ளது, ஒம் பிரணவ ஆசிரமம்.
இங்கு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர் பாதுகாக்கப்படுகின்றனர். அத்துடன், நலிந்த மாடுகள், தெருவில் தூக்கி எறியப்பட்ட நாய்கள் போன்ற வாயில்லா ஜீவன்களும் பராமரிக்கப் படுகின்றன.
இந்த ஆசிரமத்தின் செயலாளர், ட்ரௌடே இங்களர்ட் என்ற செண்பகவல்லி.
ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அழகாய் புடவை கட்டி, மங்களகரமான தோற்றத்துடன், 'வாங்க, வணக்கம்...' என அழகு தமிழில் இருகரம் கூப்பி நம்மை வரவேற்கும் போது, அதில், மிதமிஞ்சிய அன்பும், பாசாங்கில்லாத பாசமும் இழைந்தோடுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரியாவில் இருந்து ஆன்மிக தேடலுக்காக இந்தியா வந்தவர், பல்வேறு கோவில்கள், ஆஸ்ரமங்களுக்கு சென்றார்.
அப்படி அவர் சென்ற இடம்தான் ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபா நிலையம். அங்கு பணியாற்றிய விஸ்வநாதனுடன் ஏற்பட்ட அறிமுகம் பின்னர் திருமணத்தில் முடிந்தது.
இருவருக்கும் சமூக சேவையில் இருந்த ஒருமித்த எண்ணம் காரணமாக, குற்றாலத்தில் சிறிய அளவில் வீடு பிடித்து பொதுமக்களுக்கு உதவியதுடன், மூன்று ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைத்தனர்.
ஆண்டுக்கு ஆண்டு, குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகவே, இனி, வீடு சரிப்படாது; இடம் வாங்கி கட்டடம் கட்டவேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்டது தான், ஒம் பிரணவ ஆசிரமம்.
இந்த ஆசிரமம் கட்டுவதற்கு ஆஸ்திரியா நாட்டில் உள்ள செண்பகவல்லியின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் பெரிய அளவில் உதவியுள்ளனர். இப்போதும் உதவி வருகின்றனர்.
இன்று, 50 குழந்தைகள், 10 முதியோர், 50 மாடு, ஐந்து நாய் என ஆசிரமம், அதன் கொள்ளளவிற்கு மேல் நிரம்பி வழிகிறது.
கணவர் விருப்பப்படி தன் பெயரை செண்பகவல்லியாக மாற்றிக்கொண்ட ட்ரௌடே இங்களர்ட், யாராவது ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுகிறார். மற்ற நேரங்களில், நிறுத்தி நிதானமாக, அழகு தமிழில் உரையாடுகிறார்.
'இவள் பேரு ஆனந்தி; அவள் பெயர் அமிர்தா; அங்கே இருக்கிறாளே... அவள் வள்ளி...' என்று, அங்கு வளரும் மாடுகளை பெயர் சொல்லியே அறிமுகப்படுத்துகிறார்.
அவர் தங்கும், உட்காரும், படுக்கும் அறை என, எல்லா இடங்களிலும், சுகமாக ஒய்வு எடுக்கின்றன, நாய்கள்.
மற்றவர்களுக்கு அவைகளை அறிமுகப்படுத்தும் போது, மறந்தும் நாய்கள் என்று சொல்வதில்லை; பைரவர் என்ற பதத்தையே பயன்படுத்துகிறார்.
'அடுத்த முறை வாங்க; எங்க பிள்ளைகள் எல்லாம் சந்தோஷப்படுவாங்க. இப்ப எல்லாரும் படிக்க கல்விக்கூடம் சென்றிருக்கின்றனர்...' என்றார். அவர் சொன்ன பிள்ளைகளில் அவரது சொந்த பெண் சாவித்திரியும் ஒருவர்.
யாரிடமும் எந்த வித்தியாசமும் இல்லை; நிறைய ஏழை எளிய பெண்கள், 'செண்பகம்மா...' என்று சொல்லி, கைகுலுக்கி கட்டிப்பிடித்து, தங்கள் தோழியிடம் பேசுவது போல பேசிச் செல்கின்றனர்.
நாயைத் தொட்டு விளையாடினாலும், நோயாளியை தொட்டுப் பார்த்தாலும், கைகளை மருந்து கலந்த தண்ணீரில் கழுவ வேண்டும். கொஞ்சம் எட்டயிருந்து சுகாதாரம் பேணவேண்டும் என்பது போன்ற எண்ணமே இல்லாமல், தாயின் உள்ளார்ந்த அன்போடு தான் அனைவரிடமும் நடந்துகொள்கிறார். இறந்து போன நாய்களுக்கு ஆசிரமத்திற்குள் சமாதி எழுப்பி, துளசி செடி நட்டு வளர்க்கிறார். இதனால், ஆசிரமம் முழுவதும் செடி கொடி மரங்களால், பசுமை பூத்து குலுங்குகிறது.
இந்த ஊர் என்று இல்லை; ஆஸ்திரியா போனாலும் சேலை தான் இவரது விருப்ப உடை, விவரம் தெரிந்த நாள் முதலே சைவ உணவுதான், அதுவும் இப்போது பெரும்பாலும் பாலும், பழமும் தான் முழு உணவே!
ஒரு வகையில் இந்த ஆசிரமத்தின் அனைத்து செயல்பாட்டிற்கும் இவரது கணவரும் நிறுவனருமான விஸ்வநாதன் தான் முழுக்காரணம் என்றாலும், எங்கோ பிறந்து, எப்படியோ வளர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வாழ்க்கையாக வகுத்துக் கொண்டுள்ள ட்ரௌடே இங்களர்ட் என்ற செண்பகவல்லியை வாழ்த்துவதை விட வணங்குவதே மிகச் சரியானது!
அவரது மெயில் முகவரி: traude.englert@gmail.com
எல்.முருகராஜ்
