PUBLISHED ON : ஆக 23, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல், துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
பங்கஜா மில் பட்டறையில், சின்னப்பாவுக்கு கூலி வேலை. சம்மட்டியால் இரும்பைத் தட்டித் தட்டிச் சீராக்கும் பணி. மாதம், ஒன்பது ரூபாய் சம்பளம்.
இதற்கு முன், காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்தார். அங்கு சம்பாதித்ததை விட, இங்கு, மூன்று ரூபாய் அதிகம். அரிசிச் சோறும், அசைவப் பதார்த்தங்களும் சாப்பிட ஆசை. ஆனால், எப்போதும் வீட்டில் இருந்த பசி, பஞ்சம், பட்டினி அலுப்பைத் தந்தது. ஏழ்மையை வென்று விட வேண்டும் என்கிற வெறி சின்னப்பாவிற்கு!
மிலிட்டரி ஓட்டல் என்று விஸ்தாரமாகக் கூற முடியாவிட்டாலும். சமைப்பவர்களின் கை மணத்தில் அங்கு கூட்டம் அதிகம். சிற்றுண்டி, மதியச் சாப்பாடு என்று அச்சிறு கடையை விரும்பினர் பாட்டாளிகள். ஏகத்துக்கும் உண்டார் சின்னப்பா. விளைவு, ஆறு ரூபாய் கடன்!
கல்லாவில் இருந்தவர்கள் சின்னப்பாவை எச்சரித்து, 'எங்க மொதலாளி ரொம்ப மோசமானவரு; கழுத்துல துண்டைப் போட்டு, காசை வசூல் செய்வாரு. அதனால, வர்ற ஒண்ணாம் தேதிக்குள்ள காச பைசல் பண்ணிடு...'என்றனர்.
தலையை நிமிர்த்தவே இல்லை சின்னப்பா. 'அத்தனைப் பெரிய கூட்டத்தின் நடுவே, அதைச் சொல்லியிருக்க வேணாம்; மாலை, 4:00 மணிக்கு டீ குடிக்க வருகையில், காதோடு காதாக ஓதியிருக்கலாம்...' என நினைத்தார்.
கை கழுவும்போது, டேபிள் துடைப்பவன் நக்கலாகச் சிரித்தான். 'இனி, பாக்கியைக் கொடுக்காமல் உள்ளே நுழையக் கூடாது...' என்று மனதுக்குள் சபதம் எடுத்தார்.
அப்போது, வாசலில் கடை முதலாளி வரும் சத்தம் கேட்டது. வசமாகச் சிக்கிக் கொண்டார் சின்னப்பா. தப்பியோட முடியவில்லை; துண்டு கழுத்தை நெரித்தது.
விழிகள் பிதுங்கி வெளியே வந்து விடும் போலிருந்தது. மூக்குப் பிடிக்க தின்ற முட்டை தோசையும், ஆப்பம், பாயாவும் அடையாளம் தெரியாமல் போய் விட்டன.
'யாரை ஏமாத்தப் பாக்குறே... கல்லால சொல்லல... என்ன பெரிய சண்டியரா நீயி... கோதால வெச்சுக்க அதை! காசு கொடுத்துச் சாப்பிடத் துப்பில்ல; நீயெல்லாம் ஒரு ஆம்பள... உனக்கு வேட்டி ஒரு கேடு...' என்று திட்டவும், சின்னப்பாவுக்கு பேச்சு நின்று போனது.
கழுத்தில் சுளீரென விழுந்த அடியில் கால் இடறி கீழே விழுந்தார். எழுந்திருக்க மனசில்லாமல் அப்படியே சவம் போன்று கிடந்தார். யாரும் அனுதாபப்படவோ, இரக்கம் காட்டவோ, கை தூக்கி விடவோ முயலவில்லை.
'உனக்கு இது வேண்டும்...' என்பது போன்று கடந்து போயினர்.
அன்று கிருத்திகை; வழக்கமாக மருதமலை தெய்வத்தை அவர் தரிசிக்கும் தினம். ஆனால், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார் சின்னப்பா.
'முருகா... எனக்கேற்பட்ட அவமானத்திலிருந்து நீ என்னைக் காப்பாற்றினால், நான் காலமெல்லாம் உன் அடிமை; அப்படி இல்லையென்றால், என் வாழ்க்கை இன்றோடு ஒழிந்து போகட்டும்....' என்று நினைத்தவருக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது.
மருதமலை கோவிலை நோக்கி நடந்தவருக்கு, 'ச்சீ... இவ்வளவு தானா மனிதர்கள்... மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் நழுவி ஓடுகின்றனரே... நமக்கும் பணம், பவிசு வந்தால், இப்படி இரக்கம் இல்லாமல் வாழக் கூடாது. யாரும் கேட்பதற்கு முன் ஓடி உதவணும்; ஏழைகளோட கண்ணீரைத் துடைக்கணும். ஆனா, அதெல்லாம் நம் வாழ்வில் சாத்தியமாகுமா...' என்று வழி நெடுக மனதுக்குள் புலம்பியபடியே சென்றார்.
உயிரை விட அஞ்சவில்லை; கடனுக்காக இறப்பது தலைகுனிவாகத் தோன்றியது. தெரிந்தவர்களிடம், கடன் கேட்டுப் பார்த்தாகி விட்டது; எல்லாருமே அன்றாடங் காய்ச்சிகள்; பிள்ளைக் குட்டிக்காரர்கள்.
கடைசியாக, ஒரே ஒரு முறை முருகனைக் கண் குளிர தரிசித்தால் போதும்; ஆசை தீர அவனைக் கும்பிட்டு விட்டு, குதித்து விட வேண்டும். 'கடன்காரன் சின்னப்பா செத்தான்; காற்று இனியாவது இதமாக வீசட்டும். சிறுவாணியில் தண்ணீர் வற்றாமல் ஓடட்டும்; மாதம் மும்மாரி பொழியட்டும்; ஏழைகள் சுகமாக வாழட்டும்...' என்று எண்ணியவர், நடப்பதை நிறுத்தி, தன்னிரக்கம் மேலோங்க, உட்கார்ந்து ஓலமிட்டு அழுதார். 'முருகா... என் நிலைம மாறாதா... நாலு பேர் மதிக்க, எனக்கும் கவுரவமான வாழ்க்கை கிட்டாதா...' என, ஏங்கியவர், 'வருவது வரட்டும்...' என்று எண்ணியவாறே மீண்டும் எழுந்து நடந்தார்.
காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார்; சிகரெட் டப்பா! 'ச்சீ... முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம்...' என்று நினைத்து தூக்கிப் போட்டார். தூரப் போய் விழுந்தது. 'இனி என்ன இருக்கிறது எனக்கு; முருகன் கை விட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம்; இன்றைக்கு கடைசியாக சிகரெட் பெட்டியக் கண்ணுல காட்டி இருக்கான். அடப்பாவி பழநி ஆண்டி! யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியிருக்கே... தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு மட்டும் சிகரெட் பெட்டியா... இது அடுக்குமா...' என்று கூறியவாறு மறுபடியும் அதைப் போய் எடுத்தார்.
இரண்டு சிகரெட்டுகள் தெரிந்தன. இன்னும் ஏதாவது துண்டு பீடி இருக்குமா என கவிழ்த்துப் பார்த்தார். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன. 'பத்து ரூபாய் தாள் தானா... போலி காகிதம் இல்லையே...' என நினைத்து துடைத்துத் துடைத்து பார்த்தவர், 'முருகா...' என்று அலறினார்; அழுதார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார்.
'மருதமலை மூர்த்தியே... என் மானத்தக் காப்பாத்திட்டே சாமி... இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவைக் காட்டினியே... முருகா... நீயே என் தெய்வம்! இனி உன்னை மட்டுமே கும்பிடுவேன்...' உள்ளம் உருகினார்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பச்சைப் பசேலென்று நாற்றுகள் காற்றில் தலை அசைத்து ஆடின. வேலை இன்னும் முடியவில்லை. பண்ணையார் வந்து பார்க்கையில், அவர் மனம் குளிர வேண்டும்; முதலாளி பூரிப்பாக இருந்தால் தான், கூலிக்காரனுக்கு கால் வயிறு நிறையும்.
'எல்லாம் ஒழுங்காக நடப்பட்டிருக்கிறதா...' வரப்பின் மேலே நடந்து சென்று ஒவ்வொரு வயலாக பார்த்தார் சின்னப்பா. சேற்றுத் தண்ணீரில் இறங்கி, 'சளக்புளக்'கென்று நடந்து, சரிந்து கிடந்த ஒன்றிரண்டு நாற்றுகளை பிடுங்கி, சரியாக நட்டார்.
பருத்தி காட்டுக்குள்ள பவிசாகப் பார்த்த மச்சான் என்று உல்லாசமாக பாடியபடி, வேலை செய்து கொண்டிருந்த காளியப்ப கவுண்டரின் மனைவி தேவானை, அவரைப் பார்த்தவுடன், 'என்ன சின்னப்பா... பசி எடுக்கலயா... சூரியன் உச்சிக்கு வந்ததும் தெரியாம வேல வாங்கறீங்களே...' என்றாள்.
நெற்றி அருகே கையை வைத்து மேலே பார்த்தார் சின்னப்பா. தகதகவென்று கதிரவன் ஒளியில் கண்கள் கூசியது. முண்டாசைக் கழற்றி முகத்தைத் துடைத்து, வாய்க்கால் அருகே போனார்.
தேவருக்கு முன், அது, நீரில் தன் முகத்தைப் பார்த்து மிரண்டு, லொள்... லொள்... என்று கத்தியது.
'இன்னும் நீ போகல... அப்பவே துரத்தி விட்டேனே... உனக்குக் கொடுக்க எங்கிட்ட என்ன இருக்கு... உழுறவனுக்குக் கறிச்சோறு கிடைச்சா அது, திருநாளாகத் தான் இருக்கும்...' என்று கூறியவாறே குளிர்ந்த நீரால், கை, கால், முகம், மார்பு பகுதிகளை கழுவினார். 'அப்பாடா...'என்றிருந்தது. வேட்டியை உதறி, உடம்பைத் துடைத்து, அதையே கட்டிக் கொண்டார்.
பித்தளை தூக்குச் சட்டியை திறந்தார்; பழையது நிரம்பி இருந்தது. சின்ன வெங்காயம், பச்சை மிளகாயும், தனியே ஒரு கிண்ணத்தில், முதல் நாள் வைத்த மீன் குழம்பும் இருந்தது. நாக்கில் எச்சில் ஊற, ஒரு கவளத்தை எடுத்து, 'முருகா...' என்றபடி வாயில் போட்டுக் கொண்டார்.
சிதறிய பருக்கைகளை, அருகில் அமர்ந்திருந்த நாய், நாக்கால் திரட்டிச் சாப்பிட்டது. 'உனக்கு ரெண்டு எலும்புத் துண்டு போடக் கூட எனக்கு வக்கில்ல; கல் எடுத்து அடிச்சாலும், என் பின்னாலேயே ஓடிவர்ற...' என்றவாறே, தரையைச் சுத்தப்படுத்தி, இரண்டு கவளம் சோற்றை எடுத்து வைத்து விட்டு, தூக்குச் சட்டியை வாயருகே வைத்து பழையதின் நீரைக் குடித்தார். சில்லென்ற ஆலமரக்காற்று; அருகிலிருந்த மாந்தோப்பில் மாம்பிஞ்சுகளின் வாசம். துண்டை வீசிப் படுத்தார்; கண்கள் செருகின.
லொள்... லொள்... விடாமல் குரைத்தது நாய். எரிச்சலில் கண் விழித்தவருக்கு, 'புஸ்... புஸ்...' என, பாம்பு சீறும் ஒலி, காதில் விழுந்தது. விழுது என்று அதுவரை தான் எண்ணி இருந்தது பாம்பா?
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்