PUBLISHED ON : ஆக 23, 2015

மூன்று பெண்களை மணந்து, மூவரையும் பிரிந்து வாழும் என் குடும்ப நண்பர் ஒருவரின் கதையை, உங்கள் முன் விவரித்தால், அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்? அவர் ஏதோ என்னுடைய வெள்ளைக்கார நண்பர் என நினைப்பீர்கள். இல்லை; இவர் தெக்கத்தி சீமையை சேர்ந்தவர் தான்.
மூன்று பெண்கள் மீதும், இவர் வெவ்வேறு குறைகளை சொல்லி குற்றப் பட்டியல் வாசித்த போது, அவற்றை நிராகரித்து, 'நண்பரே... ஒரு கை ஓசை என்பது உலகில் இல்லை; தவறுகள் இரு பக்கமும் இருக்கவே வாய்ப்பு அதிகம். உணர்ந்து திருந்திக் கொண்டால், நான்காவது வாழ்வாவது மணக்கும்...' என்றேன்.
என் உறவினர் ஒருவருக்கு இறால் என்றால் ஆகாது; இது, நன்கு தெரிந்தும் நாக்கின் தூண்டுதலால் சாப்பிட்டு, பின், டாக்டரிடம் செல்லும்படி ஆகிவிட்டது. நன்கு தெரிந்தும் ஆகாத ஒன்றை ஆகாரமாக்குவானேன்!
இப்படி ஊர் வம்பை அளக்கும் என்னை எடுத்துக் கொண்டால், நான் மட்டும் என்ன ஒழுங்காம்... தர்க்கத்தை பயன்படுத்தாமல், இதயத்தின் ஈரத்தை பயன்படுத்தியதால், ஏமாந்த கதைகள் கொஞ்சமா, நஞ்சமா?
பரிசுகளை திரும்ப திரும்ப பெறுவதில் சளைக்காத விஷயத்தில், நாம் சதுரங்க ஆனந்த் விஸ்வநாதனாக இருக்கலாம்; ஆனால், அடிகளை திரும்ப திரும்ப வாங்குவதில், அப்படி என்ன ஆனந்தம் இருக்கிறது? திருத்திக் கொள்வதில் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது.
சுடுநீர் கையை பதம் பார்க்கும், மின்சாரம் உயிர் பறிக்கும் என்பது தெரிவதால், அதை தொடுவதில்லை. ஆனால், சில அனுபவங்கள், அணுகுமுறைகள், சில சொற்கள் திரும்ப திரும்ப கசப்பான பாடங்களை தந்தும், நாம் ஏன் மாறுவதில்லை!
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில், தினமும் லட்சக்கணக்கான பெட்டிகள், பைகள் விமானத்திற்கு விமானம் மாற்றப்படுவதால், இங்கு உடைமைகள் தொலைவது சகஜம்.
இந்த விமான நிலையம் என்றல்ல, விமானப் பயணம் என்றாலே, நம் உடைமைகள் காணாமல் போகலாம் என்கிற கணிப்பில் மருந்துகள், உடைகள், மதிப்புமிகு பொருட்கள் எல்லாவற்றையும், நமக்கு அனுமதி அளிக்கப்பட்ட இரு பெட்டிகளில் கலந்தும், பகிர்ந்தும் வைக்கப்பட வேண்டும். ஒரே பெட்டியில் அத்தனை சர்க்கரை மாத்திரைகளையும், ரத்த அழுத்த மாத்திரைகளையும் வைத்து விட்டு, ஒரு முறைக்கு இரு முறை தொலைத்து விட்டு, அமெரிக்காவில் போய் மிகவும் அவதிப்பட்ட ஒருவரை பற்றி நீங்கள் என்ன முடிவிற்கு வருவீர்கள்?
மனைவியின் உறவினரை சீண்டினால், என்ன நடக்கும் என்பது தெரிந்தும், இந்தக் கணவன்மார்கள் காலமெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்வதை என்ன சொல்வது!
மருத்துவர்கள் கூறிய வாழ்க்கை முறைக்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல், மூன்றாவது முறையாக பைபாஸ் செய்து கொள்ளப்போகும் அரசியல் பிரமுகரை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்!
ரயிலில் பொது வகுப்பில், கழிப்பறை அருகே இரவெல்லாம் நின்றபடி திட்டமிட்டு பயணம் மேற்கொள்வோரை, தட்கலில் இரட்டைச் செலவு செய்து பயணிப்போர், கேலி செய்ய என்ன தகுதி இருக்கிறது?
தண்ணீரில் விழுந்த தேளை, அது கடிக்கும் என்று தெரிந்தும், அதை எடுத்துக் கரையில் போட்டு கடி வாங்கிக் கொண்ட சாமியார் கதை தெரியுமா உங்களுக்கு? 'ஐயா சாமியாரே... ஒரு குச்சியின் உதவியால், அதை கரையில் சேர்க்க வேண்டியது தானே... கொட்டும் சுபாவம் உள்ளது எனத் தெரிந்தும் ஏன் மறுபடி மறுபடி கையால் தொடுகிறீர்?' என கேட்டானாம் ஒரு வழிப்போக்கன். அதற்கு சாமியார், 'தேளின் சுபாவம் கடிப்பது; என் சுபாவம் அதற்கு உதவுவது...' என்றாராம். என்ன ஒரு வறட்டுத் தத்துவம்!
வாழ்க்கைப் பாடங்களை செவி வழியோ, படித்தோ அறியாமல், தாங்களே அனுபவித்து அடிவாங்கி கற்ற பின்பும், திருந்தாத ஜென்மங்களாய் இருந்தது போதும்; அது, இனியும் தொடர வேண்டாம்.
பெற்ற படிப்பினைகளை செதுக்கி, அவற்றையே தடங்களாக்கி, தடைகளற்ற இனிய பயணத்திற்கு இனியேதும் வழி காண்போம்!
லேனா தமிழ்வாணன்