PUBLISHED ON : ஜன 01, 2012

ரங்கோலி கோலம் என்பது, மாவு, அரிசி, பூவிதழ்கள் என்று, கிடைத்த பொருட்களை கொண்டு வரைவது.
இந்த ரங்கோலி ஓவியத்தை, உலக வெப்பமயமாதலை தடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட,
2,040 கிலோ கல் உப்பை பயன்படுத்தி, பிரமாண்டமாக வரைந்து, உலக சாதனை படைத்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சரிதா சதீஷ் என்பவர்.
ஆந்திரா மாநிலம், கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான சரிதாவிற்கு, ரங்கோலி வரைவதில் ஆர்வம் அதிகம். திருமணமாகி வேலூர் வந்த பிறகு, கணவர் சதீஷ், மனைவியின் ரங்கோலி ஓவியத்திற்கு ஊக்கமளிக்க, ஒரு சாதனை ஓவியம் வரைய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
உலக சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்தும், கோவையை சேர்ந்த, 'எலைட்' நிறுவனம், சரிதாவின் ரங்கோலி ஓவிய சாதனைக்கு பச்சைக்கொடி காட்டியது. எடுத்துக் கொண்ட பயிற்சிகளுடன் கடந்த வாரம் வேலூர் காந்தி நகரில் உள்ள, ரங்கலாயா திருமண மண்டபத்தில் நடுவர்கள், பார்வையாளர்கள் மத்தியில், தன் சாதனை ஓவியத்தை வரைய துவங்கினார் சரிதா.
வரையப்படும் படம், மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டாலே, சாதனையாக ஏற்கப்படும் என்பது முக்கிய விதி என்பதால், என்ன மாதிரி வரைய போகிறார் என்பதில் அனைவருக்குமே ஆர்வம் இருந்தது.
ஏழு மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், ஒன்றரை இன்ச் உயரத்தில், 84 சதுர மீட்டரில், 2,040 கிலோ உப்பைக் கொண்டு ஓவியம் வரைந்து முடித்தார். நாற்பது கிலோ உப்பை, ஏழு வண்ணத்தில் முக்கியெடுத்து, அந்த வண்ண உப்பையும் ஓவியத்தின் பிரதான பகுதிக்கு பயன்படுத்திக் கொண்டார்.
காலை, 7:30 மணிக்கு ஆரம்பித்து, மாலை, 5:30 மணி வரை, தனி ஒருவராக வரைந்து முடித்தார். இடையில் விதிகளுக்கு உட்பட்டு, 15 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
வரைந்து முடித்து எழுந்த போது, பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரும், உடன் எழுந்து, ஒரு சேர கைதட்டி, சரிதா சதீஷை வாழ்த்தினர்.
காரணம், பிரமாண்டமான வெள்ளை துணியின் மீது, உலக உருண்டை பற்றி எரிவது போன்ற படத்தை வரைந்து, 'நேச்சர் பார் பியூச்சர்' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். 'அருமையான இந்த உலகம், வெப்பமயமாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதே, இந்த ஓவியத்தின் நோக்கம்...' என்று சரிதா கூறிய போது, மொத்த கூட்டமும் ஆமோதித்தது. கூடவே, 'எலைட்' நிறுவனம் அவரை உலக சாதனையாளராக அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியது.
***
கலைச்செல்வி
