PUBLISHED ON : ஜூன் 10, 2018

மனம் எதில் ஆழமாக பதிகிறதோ, அதுதான் செயலாகப் பரிணமிக்கிறது. அதனால் தான், 'நினைப்பவர் மனம் கோவிலாக் கொள்பவன்' என்று இறைவனை புகழ்கின்றன, திருமுறைகள்.
காஞ்சி மன்னர் மித்திரத்துவஜன், தீவிரமான சிவ பக்தர். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் சிறிது துாரத்தில் உள்ள திருத்தலத்திற்குச் சென்று, பிரதோஷ வழிபாட்டை முடித்துத் திரும்புவார்.
ஒரு சமயம், பிரதோஷ வழிபாட்டிற்காக காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வழியில், 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என, ஓர் அலறல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி குதிரையை திருப்பினார், மன்னர். அங்கே, மிகவும் மெலிந்து காணப்பட்ட ஒருவனை, கொல்ல முயன்று கொண்டிருந்தது, புலி.
'புலியே... அந்த வறியவனை விட்டு விடு...' என வேண்டினார் மன்னர். அது கேட்பதாக இல்லை; 'எனக்கு வயதாகி விட்டது; கிடைத்த இந்த இரையை விட்டு விட்டால், அடுத்து எப்போது கிடைக்குமோ தெரியாது. அதனால், இவனை சாப்பிடத் தான் போகிறேன்...' என்றது.
'புலியே... சற்று பொறு; இந்த மனிதருக்குப் பதிலாக, நான் உனக்கு உணவாகிறேன். ஆனால், சிறிய வேண்டுகோள்... இப்போது, பிரதோஷ வழிபாட்டிற்காக செல்கிறேன்; சிவ தரிசனம் முடித்து வந்ததும், என்னை ஏற்றுக்கொள்...' என, வேண்டினார்.
ஒப்புக் கொண்ட புலி, தான் பிடித்திருந்த மனிதரை விட்டது. அவர் ஓட்டமாக ஓடி விட்டார். பிரதோஷ வழிபாட்டிற்கு சென்ற மன்னர், வழிபாடு முடிந்து, மன நிறைவோடு திரும்பினார்.
திருநீறு பூசி, ருத்திராட்ச மாலை அணிந்து, கைகளில் வில்வ இலை பிரசாதத்துடன் தன் எதிரில் வந்து நின்ற மன்னரைக் கண்ட புலி, அவரை உண்ணத் தயங்கியது.
'ஏன் தயங்குகிறாய்... வந்து என்னை உணவாக்கிக் கொள்...' என்றார் மன்னர்.
'மன்னா... சத்தியத்திற்காக சாகவும் துணிந்து விட்டாயே... உன் செயலைப் பார்த்தே திருப்தி அடைந்தேன்... நீ போகலாம்...' என்றது!
'புலியே... பசியோடு இருக்கும் உனக்கு, நான் ஆகாரமாவதில் மகிழ்ச்சி அடைகிறேன்; என்னை ஏற்றுக் கொள்...' என்ற மன்னர், புலியின் வாயில், தன் தலையை வலுக்கட்டாயமாகத் திணித்தார். அதே வினாடியில் புலி மறைய, அங்கே, அகத்தீசப் பெருமானான சிவபெருமான், ஜோதி மயமாகக் காட்சியளித்தார்.
மன்னரின் இரக்கம் மற்றும் ஈகை குணத்திற்கு, மனம் உவந்து வரங்களை அருளி, மறைந்தார்.
அகத்தியர் வழிபட்ட ஈசன் தான், அகத்தீசப் பெருமான். இத்தலத்தில் தங்கி, சிவத்தொண்டு செய்த அகத்தியரை, 'பொதிகை மலைக்கே வந்து விடு...' என்று அழைத்தார் சிவபெருமான்.
'பரம்பொருளே... இத்தலத்தை விட்டுப் பிரிய அடியேனுக்கு மனம் இல்லயே...' என வருந்தினார், அகத்தியர்.
'வருத்தப்படாதே... நமக்கு கைலாயத்தின் மீது எவ்வளவு விருப்பமோ, அவ்வளவு விருப்பம் இந்தத் தலத்தின் மீது உண்டு. இங்குள்ள அகத்தியத் தீர்த்தத்தில் நீராடி, எம்மை வழிபடும் அடியார்களுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும். ஆண்டுக்கு ஒருமுறை, வைகாசிப் பவுர்ணமி அன்று, இத்தலத்திற்கு வந்து எம்மைத் தரிசிப்பாயாக...' என்று அருளி மறைந்தார், ஈசன்.
அகத்தியர், சிவபெருமான் மற்றும் மித்திரத்துவஜ மன்னராலும் புகழப்பட்ட அத்திருத்தலம் தான் பஞ்சேஷ்டி.
சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி வடக்கு நெடுஞ்சாலையில், 30 கி.மீ., துாரத்தில் உள்ளது. சுவாமியின் திருநாமம்- அகத்தீசர்; அம்பாள் திருநாமம், ஆனந்தவல்லி.
இங்கு, ஒரு பிடி அன்னதானம் அளித்தாலும், அது, பல மடங்காகப் பலன் தரும்.
மனம் நல்லதில் பதியட்டும்; நலன்கள் பெருகட்டும்!
பி.என்.பரசுராமன்
அறிவோம் ஆன்மிகம்!
சங்காபிஷேகம் செய்வது ஏன்?
சங்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்; அதனால், தெய்வங்களுக்கு சங்காபிஷேகம் செய்கின்றனர்.
