தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூன் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

நான், 48 வயது பெண்; காதல் திருமணம் செய்து கொண்டேன். ஒரு மகனும், மகளும் உள்ளனர். என் கணவர், செல்வந்தர் வீட்டுப் பிள்ளை. சொந்தமாக தொழில் செய்து வந்தார்; திடீரென்று தொழிலில் நஷ்டம் வரவே, மனம் உடைந்து, மரணமடைந்தார்.

கணவர், என் பெயரில் வங்கியில் போட்டிருந்த சேமிப்பு பணத்திலிருந்து, மகனையும், மகளையும் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தேன்.

பெற்றோர், மாமனார் மாமியார் இறந்து விட, சொந்த வீட்டில், மகன் குடும்பத்துடன் வசித்து வந்தேன். தொழில் செய்கிறேன் பேர்வழி என்று, சொத்தை எல்லாம் அழித்தான் மகன்; மனம் வெறுத்து, மகள் வீட்டுக்கு வந்து விட்டேன்.

அங்கும், மகன், அடிக்கடி வந்து, மகள் மற்றும் அவள் கணவரை தாறுமாறாக பேசியதோடு, பணம் கேட்டு என்னையும் தொந்தரவு செய்கிறான்.

என்னால், மகளுக்கு பிரச்னை வரக்கூடாது என்று, அங்கிருந்து வெளியேறி, தனியாக வசிக்கிறேன். அங்கும் வந்து பணம் கேட்டு, தொல்லைப்படுத்துகிறான். இருக்கும் கொஞ்சம் சேமிப்பு பணத்தை, என் எதிர்கால வாழ்க்கைக்காக வங்கியில் போட்டுள்ளேன்; அதையும் மகனிடம் கொடுத்து விட்டு, நான் என்ன செய்வது?

எனக்கோ, கணவருக்கோ பிறந்த வீட்டு ஆதரவு என்றுமே இருந்ததில்லை.

என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுங்கள் சகோதரி.

இப்படிக்கு,

உங்கள் சகோதரி.


அன்பு சகோதரிக்கு —

'அப்பாவின் வாழ்க்கையை போல மகன் வாழ்க்கை' என, ஒரு விஞ்ஞான விதி உள்ளது. எப்படி உன் கணவர் நிர்வாகத் திறன் ஏதுமின்றி, தொழிலில் நஷ்டமடைந்தாரோ அதைப் போலவே, உன் மகனும், தொழில் செய்து, சொத்தை அழித்துள்ளான். உன் மகனுக்கு, குடிப்பழக்கமும், கூடா நட்பும், சூதாடும் மனோபாவமும் உள்ளது என நினைக்கிறேன்.

புதிதாக பணம் புரட்டி, தொழில் செய்து, இழந்த சொத்தை மீட்டு விடலாம் என மனப்பால் குடிக்கிறான். அவனை நம்பி யாரும் பண உதவி செய்ய முன் வரவில்லை. அதனால், பெற்ற தாயான உன்னை நச்சரிக்கிறான். தொழில் செய்ய மட்டுமல்ல; அவனது தினசரி செலவுக்கும் பணம் தேவை.

பெற்ற மகன் என்று ஈவு இரக்கம் காட்டாதே. அவனிடம் பணத்தை கொடுத்து, நடுத்தெருவில் நிற்காதே. உன் கையில் பணம் இல்லாவிட்டால், மகளும் மருமகனும் உன்னை மதிக்க மாட்டார்கள்.

உன் மகன், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், சண்டை போடாமல், ஆணித்தரமாக பின் வருமாறு கூறு:

கணவனை இழந்து நிர்க்கதியாய் நின்ற நான், வேறு துணை தேடவில்லை. உன்னையும், உன் சகோதரியையும் படிக்க வைத்து, நல்ல வரன் பார்த்து, திருமணமும் செய்து வைத்துள்ளேன். அதோடு என் கடமை முடிந்து விட்டது. ஓட்டை பானையில் நீர் இறைக்க முடியாது; உன்னை நம்பி, என் சேமிப்பு பணத்தை கொடுக்க விரும்பவில்லை. நீ கெட்டது போதாதென்று, சகோதரியின் வாழ்க்கையையும் கெடுக்க புறப்பட்டு விட்டாயா... சகோதரியின் கணவரை ஏளனமாய் பேசி, சண்டைக்கு வராதே. இனி, என்னை தேடி வருவதானால், வயிறு நிறைய சாப்பிட்டு போ...

பணம் கேட்டு, என் வீட்டு வாசல் மிதிக்காதே... தொடர்ந்து நீ, என்னை தொந்தரவு செய்தால், மகளிர் காவல் நிலையத்தில் உன் மீது புகார் கொடுப்பேன். உன்னிடம் நான் கடுமையாக நடந்து கொள்வதன் காரணம், நீ திருந்தி, சொந்த காலில் நிற்பதற்காகவே...

ஒருவேளை, நான் பணம் கொடுத்து, அதை வைத்து நீ தொழில் பண்ணி, மீண்டும் நஷ்டமடைந்து விட்டால், அடுத்து யாரை போய் தொந்தரவு செய்வாய்... தாய் பறவை, குஞ்சுக்கு பறக்க கற்றுக்கொடுத்த பின், பறக்க தெரியாமல் மீண்டும் மீண்டும் தாய் பறவையை தொந்தரவு செய்யலாமா... அடுத்த தடவை உன்னை பார்க்கும்போது, நீ, நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக் கூறு.

உன் அறிவுரைக்கு பின், மகன் திருந்தாவிட்டால், மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடு. 'உன்னையும், உன் மகளையும் தொந்தரவு செய்யக் கூடாது...' என, மகனிடம் எழுதி வாங்கு.

பசப்பு வார்த்தைகளுக்கோ, வன்முறை மிரட்டல்களுக்கோ அம்மா அடிபணிய மாட்டாள் என்பது தெள்ளத் தெளிவாக உணர்ந்து விட்டால், உன் வீட்டுக்கு வரமாட்டான், மகன்.

பெற்ற மகனிடம், கொடுமைக்காரியாக நடந்து கொண்டோமே என குற்ற உணர்ச்சி கொள்ளாதே. அடியாத மாடு படியாது; உன் கண்டிப்பான பேச்சு தான், மகனின் பொறுப்பின்மையை போக்கும்.

உன் மகனும் மகளும், பொருளாதார ரீதியாக உயர்ந்து நின்றாலும், உன் சேமிப்பு பணத்தை அவர்களுக்கு பங்கிட்டு கொடுத்து விடாதே. உணவுக்கும், மருந்துக்கும் யாரிடம் போய் கையேந்தி நிற்பாய்?

சேமிப்பு பணத்தை கரைக்காமல், ஏதாவது சிறு தொழில் செய்து, அன்றாட பணத்தேவையை பூர்த்தி செய்.

உன் மகன் திருந்தி, மீண்டும் நல்ல நிலைக்கு உயர இறைவனை வேண்டுகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us