தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பறந்தேனே பாங்காக்கிற்கு! (2)

பறந்தேனே பாங்காக்கிற்கு! (2)

பறந்தேனே பாங்காக்கிற்கு! (2)


PUBLISHED ON : ஜூன் 10, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் விமானம் இறங்கியதும், ஒன்றரை மணி நேரம் தாமதமோ என, ரொம்ப புத்திசாலி போல விமான பணிப்பெண்ணிடம் கேட்க, அவரோ, 'நீங்கள் பாங்காக்கிற்கு புதியவரா...' எனக் கேட்டு, 'உங்க ஊருக்கும், எங்க ஊருக்கும் ஒன்றரை மணி நேரம் வித்தியாசம்; உங்க ஊரில் மணி, 10:00 என்றால், இங்கு, மணி, 11:30 ஆகும். எனவே, ஊர் திரும்பும் வரை கடிகாரத்தை சரி செய்து கொள்ளுங்கள்...' என்று புன்னகையுடன் சொல்லிச் சென்றார்.

ஊரிலேயே விசா எடுத்து வரலாம் அல்லது இங்கே வந்தும் எடுக்கலாம். ஆனால், ஊரிலேயே விசா எடுப்பது தான் நல்லது. இல்லாவிட்டால், விமான நிலையத்தை விட்டு வெளியே வர, கூடுதலாக இரண்டு மணி நேரமாகும். விமான நிலையத்தின் பெயர்: ஸ்வர்ண பூமி!

அட, நம்ம ஊர் பெயர் போல இருக்கிறதே என்று ஏற்பட்ட ஆச்சரியம், பல இடங்களில் தொடர்ந்தது. விமான நிலையத்தின் மையப் பகுதியில், தேவர்களும், அசுரர்களும், பாற்கடலை கடைந்து, அமிர்தத்தை எடுத்த காட்சியை சிலையாக வடித்துள்ளனர். சில இடங்களில் பிரம்மா மற்றும் சிவன் சிலையை வைத்து வணங்குகின்றனர். பாங்காக்கை தாண்டி சைலம்ரோட் என்ற இடத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு வரும் ஆண்களும் பெண்களும், நெற்றியில் குங்கும பொட்டு வைத்துக் கொள்கின்றனர்.

முப்பது ஆண்டுகளுக்கு பின், போக்கு வரத்து எப்படி இருக்கும் என்பதை அப்போதே அனுமானித்து, 1980ல் பல இடங்களில் ஈர் அடுக்கு பாலங்கள் கட்டியுள்ளனர்.

பழைய கால்வாய்களை சீர் செய்து, நீர்வழி சாலை என, படகு போக்குவரத்தை நடத்துகின்றனர். சிட்டி பஸ், மெட்ரோ ரயில் மற்றும், 'டுக் டுக்' என்ற பெயரில், ஆட்டோக்களும் ஓடுகின்றன. நான்கு பேர் முதல், 20 பேர் வரை பயணிக்கும் டாக்சிகள், கூப்பிட்ட உடன் மீட்டர் போட்டு வருகின்றன; இதெல்லாம் போதாது என்று, டூ வீலர் டாக்சியும் பறக்கிறது.

சந்து பொந்துகளில் உள்ள இடங்களுக்கு பயணியரை கொண்டு சென்று, பத்திரமாக இறக்கி விடுகின்றனர். இப்படி எத்தனை விதமான வாகனங்கள் இருந்தாலும், அத்தனை வாகன ஓட்டிகளும், சாலை விதிகளை மதிக்கின்றனர். இதன் காரணமாக, இங்குள்ள மக்கள், நேரத்திற்கு புறப்பட்டு, உரிய இடத்தை சென்றடைகின்றனர்.

இந்த, டூ வீலர் டாக்சிக்கு வரும் வருமானத்தை பார்த்த, 'ஊபர்' நிறுவனம், 'ஆப்' மூலமாக அழையுங்கள் என்று ஆயிரக்கணக்கில், டூ வீலர் டாக்சிகளை இறக்கினர். ஆனால், அது உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்பில் கை வைப்பது போல இருக்கவே, ஒரே வார்த்தையில், ஊபருக்கு, 'நோ' சொல்லி விட்டார், அந்நாட்டு மன்னர். 'ஊபர்' நிறுவனம், தன் எல்லா டூ வீலர் டாக்சிகளை ஏறக்கட்டியது.

அதிகாலை, சாலையை கடக்க முற்படுகிறார், பெரியவர் ஒருவர். இதை, துாரத்திலேயே பார்த்துவிடும் கார் ஓட்டுனர், உடனே வண்டியை நிறுத்தி, அவருக்கு வணக்கம் செலுத்தி, நடந்து போக சொல்கிறார். அவரும், பதில் வணக்கம் செலுத்தி, சிரித்தபடியே சாலையை கடக்கிறார். அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல; பார்க்கும் நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் நாம் இருந்ததால், அவர்களது மொழியின் தாக்கம் நமக்கு தொற்றிக்கொண்டது. ஆனால், தாய்லாந்து நாடானது, எந்த காலனி ஆதிக்கத்தின் கீழும் வராததால், அவர்களது தாய்மொழியான, 'தாய்' மொழியை மட்டுமே பேசுகின்றனர்; ஆராதிக்கின்றனர்.

சுற்றுலா பயணியருக்கு தான் கொஞ்சம் சிரமம். 'வேர் ஈஸ் போட் சர்வீஸ்?' (எங்கே இருக்கிறது படகு சேவை?) என்று எவ்வளவு நிறுத்தி, நிதானமாக கேட்டாலும், 'நீ கேட்பது ஒண்ணும் விளங்கலையே...' என்பது போன்று பரிதாபமாக பார்க்கின்றனர். வேறு வழி இல்லாமல், பேனாவும் பேப்பரும் எடுத்து, தண்ணீரில் பயணியருடன் மிதக்கும் படகு படம் போட்டு காட்டியதும், 'ஹே... இத நீ முதல்லயே செஞ்சிருக்கலாமே...' என்பது போல, அவரும் அந்த படத்திற்கு கீழேயே ரோடு போட்டு, வழி காட்டினார்.

இது எல்லா இடத்திலும் பயன் தந்தது; ஆனால், தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என்பதற்காக நான் போட்ட படம் தான், கொஞ்சம் எசகு பிசகாகி விட்டது. என்னவாயிற்று என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்...

பலே படகு போக்குவரத்து!

தாய்லாந்து நாட்டு மக்கள் தொகை, ஆறு கோடி என்றால், அதில், 10 சதவீதம் மக்கள் தொகை தலைநகர் பாங்காக்கில் தான் இருக்கின்றனர். பன்னாட்டு கம்பெனிகளின் வருகை, வேலைவாய்ப்பு காரணமாக, இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், அன்றாடம் வந்து போகக்கூடிய சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனால், எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்போம் என்பது போல போக்குவரத்தை மேம்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று தான் நீர்வழி சாலை.

ஊரின் மத்தியில், வற்றாமல் ஓடுகிறது, ஷோபர்யா நதி. அதன் கிளை ஆறுகளில் ஒன்றான சியன்சியாப், நகரின் பல பகுதிகளை தொட்டுச் செல்கிறது. இந்த கிளை ஆற்றில் தண்ணீர் வற்றாமல் இருக்க, எல்லா பக்கங்களிலும் சிமென்டால் கரை அமைத்து, அதில் படகு போக்குவரத்தை நடத்துகின்றனர்.

மொத்தம், 29 நிறுத்தங்கள்; அனேகமாக, ஊரின் எல்லா பகுதியும் இதற்குள் அடங்கிவிடும்.

நிறுத்தத்தில் நின்றால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்திற்குள் படகு வந்து விடுகிறது. ஏறி உட்கார்ந்தால், சில வினாடிகளில் தண்ணீரை கிழித்த படி, படகு பயணிக்கும். சிட்டி பஸ் கண்டக்டர் போல, ஒருவர் வந்து போக வேண்டிய இடத்திற்கு ஏற்ப, காசு வாங்கி, டிக்கெட் கொடுப்பார். இரவில் கூட விளக்கு வெளிச்சத்தில் படகு போக்குவரத்து, 'ஜம்'மென்று நடக்கிறது.

நம் தமிழகத்தில் இந்த நீர் வழி சாலையை நடத்த வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் செயற்பொறியாளராக இருந்த, ஏ.சி.காமராஜ், தான் பார்த்த அரசு வேலையை துறந்து, கடந்த, 20 ஆண்டுகளாக போராட்டம் நடத்தினார், நடத்துகிறார், நடத்துவார்...

— தொடரும்.

எல்.முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us