தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆனந்த தாண்டவம்!

ஆனந்த தாண்டவம்!

ஆனந்த தாண்டவம்!


PUBLISHED ON : ஜூன் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 30 - ஆனி உத்திரம்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் எனும் ஐந்தொழில்களை செய்யும் பரம்பொருள் சிவபெருமான், நடராஜராக, ஆனந்த தாண்டவமும் ஆடுவார்; கோபம் வந்தால் ருத்ர தாண்டவமும் போட்டு விடுவார். இதனால் தான், நடராஜரிடம் நம் குறைகளைச் சொல்லி நிவாரணமும் பெறலாம்; அநியாயம் இழைக்கப்பட்டால், நியாயம் கேட்டும் வணங்கலாம். இரண்டுக்கும் நடராஜ வழிபாடு தீர்வு தரும்.

நடராஜர் நடனமிடும் பொற்சபை, 'சிதம்பரம்!' இதை, 'சித் + அம்பரம்' என்று பிரிக்க வேண்டும். 'சித்' என்றால், அறிவு; 'அம்பரம்' என்றால், ஆகாயம் அல்லது வெட்டவெளி.

வெட்டவெளிக்கு எல்லை கிடையாது; அதுபோல் எல்லையற்ற அறிவைக் கொண்ட வராலும், புரிந்து கொள்ள முடியாதவர், நடராஜர்.

அவரது திருக்கரத்திலுள்ள உடுக்கையே, உலகம்; அவ்வுலகத்தை படைத்தவரும் அவரே. அபயம் காட்டும் ஒரு கை, உலகைக் காக்கிறது. மற்ெறாரு கையிலுள்ள நெருப்பு, படைக்கப்பட்டவர்களின் உடலை அழிக்கிறது. முயலகன் என்ற அரக்கனை மிதித்திருக்கும், அவரது திருவடியின் அடிப்பாகத்தை நம்மால் பார்க்க முடியாது. இதுவே, மறைத்தல் தொழில். தூக்கிய திருப்பாதத்தை நாம் தரிசிக்கலாம். இதுவே, நமக்கு அருள் செய்து, பிறப்பற்ற நிலையை அருளுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், நடராஜருக்கு ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது. இதில், சித்திரை திருவோணம், ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில், நட்சத்திரங்களின் அடிப்படையிலும், ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்களில், திதியின் அடிப்படையிலும் அபிஷேகம் நடைபெறும்.

ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரையன்று காலை, 4:00 மணிக்கு அபிஷேகமும், மற்ற நான்கு நாட்களில் மாலையிலும் அபிஷேகம் நடைபெறும்.

உத்திரம், திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகியவற்றை, கனத்த நட்சத்திரங்கள் என்பர். இந்நாட்களில், பாதுகாப்பு கோரி, இறைவனிடம் சரணடைய வேண்டும். திதிகளில் சதுர்த்தசி பாதுகாப்பானதல்ல; இத்திதியில் தான், அசுர சக்திகளின் ஆதிக்கம் அதிகமிருக்கும். அதனால் தான், பிரகலாதனின் தந்தையான இரண்யனை அழிப்பதற்காக, நரசிம்ம அவதாரம் எடுக்க இந்நாளைத் தேர்ந்தெடுத்தார், பெருமாள்.

சிதம்பரத்தில் ஆனி உத்திரத்தை ஒட்டி, 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதுதவிர, ரத்தின சபையான திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, வெள்ளியம்பலம் எனப்படும் ரஜத சபையான மதுரை, தாமிர சபையான திருநெல்வேலி மற்றும் சித்திர சபையான குற்றாலத்திலும் விசேஷ அபிஷேகம் உண்டு.

ஆனி உத்திரத்தன்று, நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து மகிழ்வோம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us